விஜயகாந்த் அவர்கள் மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டார்

விஜயகாந்த் அவர்கள் மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டார்

தமிழீழ விடுதலைப் புலிகள்

Liberation Tigers of Tamil Eelam 

தமிழீழம்

 05.01.2024

சுயநலம் கருதாது நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் எமது சுதந்திரப் போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களை நாம் இழந்து விட்டோம். தமிழினம் பெருமைப்படும்படியாக கலையுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்த இந்த கலைமாமணியை இழந்து தமிழர் தேசம் சோகக்கடலில் மூழ்கிக்கிடக்கிறது.

திரு அழகர்சாமி விஜயகாந்த் அவர்கள் ஒரு சிறந்த கலைப்படைப்பாளி. இவரிடம் கலைகளுக்கே உரித்தான உள்ளம் இருந்தது வற்றாத கலையுணர்வு இருந்தது. கட்டுக்கடங்காத கற்பனை வளம் இருந்தது. கலைக்கு அணிசெய்கின்ற நிறைந்த அறிவு இருந்தது தமிழ் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் இருந்தது தமிழீழ மண்ணின் விடுதலைக்கு பங்காற்றவேண்டும் என்ற உயரிய குறிக்கோள் இருந்தது. சுயமான ஆளுமை இருந்தது. இவை எல்லாம் ஒன்று கலந்த மனிதம் இருந்தது. இந்த அழகான மனித மாண்பு அனைவரையும் அவரை நோக்கிக் கவர்ந்து கொண்டது தனது கலை ஆளுமை ஊடாக மக்களிடையே போராட்ட விளிப்புணர்வையும் சிங்கள அரச பயங்கரவாத ஒடுக்கு முறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் தூண்டிவிட்டார்

சிங்கள அரச பயங்கரவாதம் எமது தாயக மண்ணிலே நிகழ்த்திய கொடுமைகளையும், கொடூரங்களையும் அதன் ஆழ அகலங்களையும் காலம் தோறும் எதற்கும் அஞ்சாது துணிந்து பதிவுசெய்தார். தமிழ் மக்கள் இனரீதியாக அழிக்கப்பட்ட போதெல்லாம் தமிழக மண்ணில் போராட்டங்களை முன் நின்று செயற்படுத்தி வந்த உன்னத மனிதர் சுதந்திரப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக ஊக்கசக்தியாக அமைவது தேசப்பற்று இந்த தேசப்பற்று இவரிடம் நிறையவே இருந்தது. கடல்கள் தாண்டி தனது தாயகத்திற்கு வெளியே தூரதேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதைத்தான் இவர் பாரத மண்ணில் புரிந்தார். தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டதை தமிழர்களின் மிகப்பெரும் பலமாக கருதி செயற்பட்டு வந்தவர் தமிழீழ மண்ணின் பெருமையையும், தமிழ் மக்களின் வாழ்வியலையும், போராட்டத்தின் அவசியத்தையும் தனது அழகிய கம்பீரமான நடிப்பாற்றலால் வெளிப்படுதியவர் அவர் நடித்த 'கப்டன் பிரபாகரன்' திரைப்படம் மூலம் தமிழர் வரலாற்றில் வாழ்பவர் தமிழ் மக்களுக்கு இவரது இழப்பு மாபெரும் துயர நிகழ்வு

திரு.அழகர்சாமி விஜயகாந்த் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக 'மாமனிதர்' என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் பெருமையடைகின்றோம். அன்னாரின் இழப்பால்துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது அன்பான ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம் உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.

"புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்"

மாவீரர் பணிமனை

தமிழீழ விடுதலைப்புலிகள்