மாமனிதர் பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள்
இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கத்தில் நடைபெற்ற
பேராசிரியர் அமரர் இரட்ணம் விக்னேஸ்வரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின் நிழல்கள் சில.மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் வழங்கப்பட்டஇரங்கல் செய்தி♦♥♦♥.
அமரர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் அவர்களுக்கு இரங்கல் செய்தி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சைவமும் தமிழும் இரண்டற இணைந்து வளரும் இனுவை ஊரின் புதல்வனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டதாரியும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர், துறைத்தலைவர், பீடாதிபதி பதவிகளை வகித்தவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர், துறைத்தலைவர், பீடாதிபதி மற்றும் துணைவேந்தர் பதவிகளை அலங்கரித்தவரும் ஆகிய பேராசான் இரட்ணம் விக்னேஸ்வரன் ஐயா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் இன்று ஓர் சமூகமாக இங்கு சங்கமித்துள்ளோம்.
ஐயாவினுடைய கல்விப் பணி என்பது மிகவும் காத்திரமானது என்பதனை அவரிடம் கற்று இன்று உலகின் பல பாகங்களிலும் தன்நிலைகளை வகிக்கும் மாணவர்களின் மூலம் அறிய முடிகின்றது. குறிப்பாக பேராசிரியரின் அமரத்துவத்தின் பின்னர் மாணவர்களால் பகிரப்படும் துயர் செய்திகளினை சமூக வலைத்தளங்களில் பார்க்கும் போதும் எம் பாட்டன் வள்ளுவன் கூறியது போல
“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்”
என்ற குறளின் நிதர்சனம் கண் முன் புலப்படுகின்றது. கணிதத்துறையில் எத்தனை வல்லுனர்கள் மற்றும் புலமையாளர்களை உருவாக்கியிருந்தாலும் அதன்பால் புகழ்ச்சியை என்றுமே விரும்பியிhத பெரு உன்னத ஆத்மா பேராசிரியர் என்றால் மிகையன்று.
பேராசிரியரின் நிர்வாகப் பணி என்பது மிகவும் கனதியானது. குறிப்பாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் துறைத்தலைமை மற்றும் பீடத்தலைமை என்பன ஏற்றுக் கொள்ளப்பட்ட காலம் இனப் பிரச்சனையின் இரு வேறு வடிவங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்த காலம் ஆன போதும்
“அகலாது அனுகாது நீர்காய்வர்” போல அவர் ஆற்றிய நிர்வாகம் என்பது இன்று கிழக்குப் பல்கலைக்கழக இருப்பிற்கு மிகவும் வலுச்சேர்த்திருக்கிறது என்பது அவரை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும்.
பின்னரான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகமானது துறைத் தலைவர் முதல் துணைவேந்தர் வரை பேராசிரியர்க்கு கனதியான இடத்தை வழங்கியிருந்தது. தன்முனைப்புடனான நிர்வாகம் என்ற ஓர் கோட்பாட்டை வகித்து சமுதாய முனைப்புடனான நிர்வாகம் என்ற எண்ணக்கருவுடன் தான் சார்ந்த சமுதாயம் என்பதால் மட்டுமின்றி எல்லைபடுத்தப்படும் ஓர் சமுதாயத்தின் கல்விக் கூடத்தை தாங்கி நிற்கும் தலைவராய் அவர் எதிர்த்திருந்த முடிவுகள் மிகவும் காத்திரமானவையும் காலம் கடந்த தூரநோக்கு சிந்தனை கொண்டவையுமாகும்சொலலன்று செயல் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டிய ஆளுமை.
இந்த நிலையில் பேராசிரியரின் இறுதி ஊர்வலத்தின் போது அமரர் சார்பாக அனைவரும் எழுகின்ற கேள்வி என்னவெனில் இத்தரு ஆளுமை ஏன் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பதே. அதற்கான விடை அனைவருக்கும் தெரிந்த போதும் கூட விடை தெரியாதவர்கள் போன்று இன்றும் வினாவை எழுப்புவது போல் காட்சியளிக்கும் எம்மை பார்த்தால் பாரதி சொன்ன “வேடிக்கை மனிதர்கள்” ஆகத்தான் எம்மை நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் இன்றும் பேராசிரியரின் ஆன்மா தனக்கான உரிமைக்காக போராடிக் கொண்டே இருக்கிறது. அதன் குரலை என்றோ எமது ஈழப்பாடல் வெளிப்படுத்தியிருக்கின்றது.
“என் இனமே! என் சனமே!
என்னை உனக்குத் தெரிகின்றதா?
எனது குரல்கள் கேட்கிறதா?
மண்ணை இன்றும் நேசிப்பவன் அதற்காய்
மரணத்தையே வாசிப்பவன்”
என்ற பாடல் வரி தான் இந்த அமரரது ஆத்மாவில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமே இல்லை.
ஆம் உண்மையில் மண்ணை நேசித்தவர் அதனால் மரணத்தின் வாயில் வரை சென்றிருந்தவர் எமது பேராசிரியர். ஆனால் அது தொடர்பில் என் இனமே! என் சனமே! ஏன் என் கல்விச் சமுதாயமே சிந்திக்கவில்லை என்பது கனத்த இதயத்தோடு நாம் ஏற்க வேண்டிய உண்மை. இன்றாவது எம்மினத்துக்கு அவராற்றிய தமிழ் தேசிய பணிகளை சொல்ல வேண்டிய கட்டாயமுண்டு.
1. பொங்குதமிழ் பிரகடனம் நிரந்தர கட்டமைப்பாக உலகிற்கு தெரியப்படுத்த தமிழழுதம் அன்று திறந்து வைத்தார்.
2. மாவீரர் தினம், அன்னை பூபதி தினம், பொன் சிவகுமாரன் தினம்இ லெப்.கேணல் திலீபன் அண்ணா நினைவு தினம், பல்கலைக்கழக மௌனிக்கப்பட்ட மாணவர்கள் தினம், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என அனைத்திலும் பங்கு பற்றி ஈழச்சுடர் ஏற்றி வைக்கும்; ஒரே ஒரு துணைவேந்தராவார்.
3. முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைக்கும் போது பலன் சவால்கள் ஏற்பட்ட போதும் கனதியான தீர்மானங்களின் வழி மாணவர்களிற்கு தடை விதிக்காது செயற்பட்டார்.
4. மாவீரர் தூபியை புனரமைப்புச் செய்வதற்கு ஒத்துழைப்பு நல்கினார்.
இவரது வெளித்தெரிந்த செயல்கள் சில வெளித்தெரியாமல்; ஆற்றிய பற்றுறுதிமிக்க செயல்கள் பல பல….
பேராசிரியர் பெரிதாக பேசுவதில்லைத்தான் அதுதான் இத்தனை செயல்களைச் செய்துள்ளாரோ… இத்தனையும் செய்ததினால் அவர் பதவி பறிக்கப்பட்டது. இந்த தேசப்பற்றாளனை பதவியிறக்கம் செய்தபோது கூட ஏனோ அனைவரும் விடைகள் அறிந்தும் வினாக்களை வினாவிய செயலறு சமுதாயமாகவே கிடந்தோம் என்பது ஆறாத வடு……
இனியாவது நாம் சிந்திப்போமோ?
எனவே கல்விப்பணி, நிர்வாகப்பணி, சமுதாயப்பணி, தேசப்பணி என அனைத்தையும் ஆற்றிவிட்டு தனித்தவராய் இன்று மீளத்துயில்; கொண்டிருக்கும் பேராசிரியரிற்கு எமது நன்றி உணர்வுடன் கூடிய மரியாதையும் அஞ்சலியையும் செலுத்துவதை எமது தார்மீக பொறுப்பாக கொண்டு மாணவர்களாகிய நாம் தங்களுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலியை இங்கு செலுத்துகின்றோம்.
மேலும் இத்தனை இக்கட்டான காலங்களிலும் அவருக்கு உற்ற துணையாக நின்றிருந்த பேராசிரியரின் மனைவிஇ பிள்ளைகள், சகோதரர்கள், உறவுகள், பழைய மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரது துக்கங்களிலும் நாமும் பங்கேற்பதோடு அவர்களிற்கு நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.
என்றும் உங்கள் பாதையில்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர்கள்