தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழர்களின் பாதுகாப்பு நிலைப்பாடு

*1972 - 2009ம் ஆண்டு வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிங்கள இனவாத அரசின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழீழ மக்களைப் பாதுகாக்க தமிழர்களால் முடியும் என்பதை  சூழ்ச்சிகளுக்கு அடிபணியாத ஆயுத பலம்கொண்ட வலுவான தேசிய விடுதலை இயக்கமாக நிலை நிறுத்தியுள்ளது. *ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் பிரச்னைகளை, நம்பிக்கைகளை, பிலாசைகளை நிறைவேற்றி நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவம் பெற்ற நடைமுறை அரசாக உருவாகியிருக்கிறது. *தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களின் தேசிய பிரக்ஞையை விழிப்புறச் செய்து, தேசிய சுதந்திரம், சமூக சுபிட்சம் ஆகிய இலட்சியங்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலை விரும்பிகளையும், தேசாபிமான சக்திகளையும் ஒரே அணியில் ஒன்றுபடுத்தி தமிழ்த் தேசியத்தையும், தேசிய பாதுகாப்பையும் முனைப்புறச் செய்திருக்கிறது. *தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தொடர்ச்சியான, தீர்க்கமான போராட்டம் மூலம் தமிழீழ நடைமுறை அரசை நிறுவித் தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்னையை சர்வதேச அரங்கில் பிரபல்யப்படுத்தியுள்ளது. சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக, தமிழர்களின் சுய ஆயுதபலத்தில் சிங்கள தேசத்திற்கு நிகரான படைவலுச் சமநிலையை நிறுவி, சிங்கள தேசத்திற்கு சரிநிகரான சமஅந்தஸ்துடன் சர்வதேச மத்தியஸ்தத்திலான அமைதித் தீர்வுப்  பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழர்களின் பாதுகாப்பு நிலைப்பாடு

சென்ற நேர்காணலின் தொடர்ச்சி

 

கேள்வி: அண்மையில் இரண்டு அமெரிக்க விமானங்கள் சிறிலங்காவில் வந்து தரையிறங்கியதாகவும், இவை வந்திறங்கியதன் பிரதான நோக்கம் திருகோணமலையை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் இரகசியத்திட்டத்தின் வெளிப்பாடே என்றும் சொல்கிறார்களே இதுபற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

 

பதில்: இன்று தமிழர்களின் பாதுகாப்பு என்பது தமிழர்களின் கையில் இல்லை, ஆகக் குறைந்தது தமிழர் மத்தியில் நிகழும் சமூகச் சீர்கேட்டு நடவடிக்கைகள், உள்ளக குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் எல்லைப்புறப் பாதுகாப்பு நடவடிக்கைகள் என எவற்றையும் பாதுகாக்கும் உள்ளூர் மட்டத்திலான பாதுகாப்புப் பொறிமுறைகள் கூடத் தமிழர்கள் இடத்தில் இல்லை.

 

இதனை உருவாக்குவதற்கும் எந்தத் தமிழ்த் தலைமைகளும் சரியானமுறையில் முன்வரவும் இல்லை. உதாரணத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்த விழிப்புக் குழுவை உருவாக்கி மாகாண, மாவட்ட, நகர, கிராம மட்டங்களிலான விழிப்புக்குழு என்ற பொறிமுறைகளின் ஊடே சிங்களக் காவல்துறையுடனும், புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படைகளுடனும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடனும் இணைந்து செய்யக்கூடிய பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றைக்கூட தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எந்தவொரு கட்சிக்களோ அல்லது அமைப்புக்களோ தனித்தோ, அல்லது கூட்டாகவோ சிறப்பான முறையில் செய்ய முற்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரியதே.

 

இத்தகைய வங்குரோத்துநிலையில், இத்தகைய விடயங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் முன்னராக தமிழர்கள் தமக்கான பாதுகாப்பு நிலைப்பாடு ஒன்றை உலகில் உள்ள நாடுகளும் மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியவிதத்தில் முன்வைக்கவேண்டும் என்பதே தமிழர்களின் ஆரோக்கியமான செயற்பாடாக அமையும் எனக்கருதுகின்றேன்.

 

கேள்வி: இவ்வாறான செயற்பாடுகள் பற்றிய விடயங்களில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு முன்னராக உலகில் உள்ளவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தமிழீழ மக்கள் தமக்கான பாதுகாப்பு நிலைப்பாடு என்ன என்பதனை வரையறுக்கவேண்டும் எனச் சொல்கிறீர்களே அது எவ்வாறு இருக்கவேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

 

பதில்: இதற்கான பதில் வரலாற்றின் அடிப்படையில் விரிவானதாகவும் சமகால, எதிர்கால அணுகுமுறைகளின் தேவைகளின் வெளிப்பாடாகவும் அமையப்பெறுதல் வேண்டும்.

 

அந்தவகையில் அரசு ஒடுக்குமுறையின் வரலாற்றுப் பின்னணிபற்றி உலகிற்கு உணர்த்தும் அதேவேளை நாமும் எமது தலைமுறையும் உணர்ந்துகொளுதல் வேண்டும்.

 

1948ம் ஆண்டு ஆங்கில ஏகாதிபத்தியம் சிங்கள ஆளும் வர்க்கத்திடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்து இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் வழங்கியதைத் தொடர்ந்து சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையானது மிகவும் கோரமான முறையில் தமிழீழ மக்களை தாக்கியது. இந்த ஒடுக்குமுறையானது வெறும் இனவெறியின் வெளிப்பாடாக அமையவில்லை. தமிழ்த் தேசிய அமைப்பின் அத்திவாரங்களை தகர்த்தெறிந்து, இனரீதியாக தமிழரை அழிக்கும் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை வடிவமாகவே அது அமையப்பெற்றது. தமிழ்த் தேசியத்திற்கு மூலாதாரமான மொழி, கலாச்சாரம், கல்வி, பொருளாதார வாழ்வு, பாரம்பரிய பூமி என்ற ரீதியில் பல துருவங்களில் இந்த ஒடுக்குமுறை தமிழ் பேசும் மக்களைத் தீண்டி அவர்களது தேசிய தனித்துவத்தையும் ஜீவாதார வாழ்வையும் சீர்குலைக்க முனைந்தது.

 

சிங்கள அரச ஒடுக்குமுறையின் அட்டூழியத்திற்கு முதன்முதலாக பலிகடா ஆனவர்கள் மலையகத் தமிழ் மக்களாவர். 1948, 1949ம் ஆண்டுகளில் அதர்மமான குடியுரிமைச் சட்டங்களை நிறைவேற்றி சிங்கள அரசானது 10 லட்சம் மலையக  மக்களின் வாக்குரிமையை பறித்தெடுத்தது. இந்த அக்கிரமமான செயல்மூலம், இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கிய இந்த உழைக்கும் மக்கள் நாடற்றவர் என்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டதுடன் அடிப்படை மனித உரிமைகளையும் இழந்தனர்.

 

தமிழ்த் தேசியத்தை சீர்குலைக்கும் நாசகார நோக்கத்துடன் சிங்களப் பேரினவாத அரசுகள் தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்தன. இலங்கை சுதந்திரம் அடைந்ததை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குடியேற்ற ஆக்கிரமிப்பு இதுவரை பெரும் அளவிலான தமிழ் மண்ணை விழுங்கியுள்ளது. இந்தக் குடியேற்றங்கள் தமிழ்த் தாயகத்தின் பூகோள அமைப்பை படிப்படியாக கபளீகரம் செய்து, தமிழ் பேசும் மக்களை தமது சொந்த மண்ணிலேயே சிறுபான்மையினராக்கும் ஆபத்தான அம்சங்களைக் கொண்டவை.

 

அரச ஒடுக்குமுறையானது தமிழ் மக்களின் மொழி, கல்வி, தொழில் போன்ற மூலாதார வாழ்வு அம்சங்களைத் தீண்டியது. 1956ம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டம் தமிழ் மொழியின் சமஅந்தஸ்திற்கு குழிபறித்துவிட்டு சிங்களத்தை அரச மொழியாக்கியது. இந்த இனவாத மொழிச்சட்டம், அந்நிய மொழியான சிங்களத்தை தமிழ் மக்கள் மீது திணிக்க முயன்றதுடன், தமிழர்களுக்கு வேலைவாய்ப்புக் கதவுகளை நிரந்தரமாக மூடியது.

கல்வித் துறையிலும் சிங்கள இனவாதம் ஊடுருவி தமிழ் இளம் சமூகத்தினரின் உயர்கல்வி வாய்ப்புகளுக்கு ஆப்புவைத்தது. 1973ல் தரப்படுத்தல் என்ற இனப் பாகுபாட்டுச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின், உயர் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.

 

இவ்விதம் அரச ஒடுக்குமுறையானது தமிழீழ மக்களின் மொழியுரிமை, கல்வியுரிமை, வேலைவாய்ப்பு உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை நசுக்கியது. அத்தோடு தேசிய அபிவிருத்தி திட்டங்களிலிருந்தும் தமிழ்த் தாயகம் திட்டமிட்ட முறையில் ஒதுக்கப்பட்டது. தமிழர் தாயகம் தேய, சிங்கள தேசம் வளர்ந்தது. இவ்வித திட்டமிட்ட நாசகார நடவடிக்கைகளினால் ஈழத் தமிழ் மக்கள் என்றுமில்லாத பொருளாதாரச் சீர்குலைவை எதிர்நோக்கினர்.

 

இத்தகைய வரலாற்றிற்கு ஆயுதப் போராட்த்தின் எழுச்சியும் அதன் விளைவாக உருவாகி நிர்வகிக்கப்பட்ட தமிழீழ நடைமுறை அரசும் மாற்றீடான பாதுகாப்பை வழங்கியபோதும் 18 மே 2009ம் ஆண்டு தமிழீழ நடைமுறை அரசு அழிக்கப்பட்டதன் பின் மீண்டும் நவீன இன அழிப்பு மற்றும் இரண்டாந்தரக் குடிமக்களாக்கி தமிழர்களைக்கூறுபோடும் நவீன சிங்கள பௌத்த இனவாத ஆக்கிரமிப்புவடிவமாக இன்று வரை இந்த நிலையே தமிழீழத்தின் மிகப்பெரும் அவலநிலையாகத் தொடர்கிறது.

 

இந்த வரலாற்றின் அடிப்படையில் அப்பட்டமான தமிழின அழிப்புப்பற்றிய அறிவும் தெளிவும் அவசியம் ஆகின்றது.

 

அந்தவகையில் தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட ஒடுக்குமுறை ஒரு அப்பட்டமான இன ஒழிப்புத் திட்டம் ஆகும். இந்த இன ஒழிப்புத் திட்டம் இரு அம்சங்களைக் கொண்டது. ஒன்று தமிழ்த் தேசியத்தின் தூண்களாக விளங்கும் மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், பாரம்பரிய பூமி ஆகியனவற்றை படிப்படியாகத் தாக்கி தமிழீழ மக்களின் தேசிய அமைப்பையும் தனித்துவத்தையும் அழிப்பது. இரண்டாவது, தமிழ் மக்களை பெருந்தொகையில் படுகொலை செய்து அழிப்பது, இன ஒடுக்குமுறைகளைத் தமிழர்கள் மீது ஏவி விடுவதன் மூலம்   அதிலிருந்து தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போராடுவார்கள் இதன்மூலம் இதனைக் காரணம் காட்டி தமிழர்களைக் கொன்றொழிப்பதுடன் ஊடே தமிழர்களின் இனப்பரம்பலைக் குறைப்பது, அதுபோலவே இதன் விளைவாக தமக்கான பாதுகாப்பு இன்மையை உணரும் தமிழர்கள் நாட்டை விட்டு புலம்பெயர்வார்கள் இதன் ஊடே அவர்களின் இனப் பரம்பலைக் குறைப்பது மற்றும் தமிழர் வாழ்வில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதன் மூலம் தமிழர்களின் இனப் பெருக்க விகிதாசார வளர்ச்சியைக் குறைப்பது என்ற அடிப்படைகளில் தமிழர்களின் இருப்பை இல்லாது அழிப்பது. இலங்கையில் தலைதூக்கிய இன வன்முறைகள் அனைத்தும் இந்த இரண்டு ரகமான இன ஒழிப்பு வடிவங்களின் கோர வெளிப்பாடுகளாகவே அமைந்தன. 1956, 1958, 1961. 1974, 1977, 1979, 1981 மற்றும் 1983 தொடக்கம் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகள் என அனைத்துமே முக்கியத்துவம் பெறுகின்றன. அதன் பின்னரான வரையறை செய்யக் கடினமான வகையில் தமிழர்களை இரண்டாந்தாரக் குடிமக்களாக்கி, பொருளாதாரத்தில் சிங்கள பௌத்தப் பேரினவாதத்தில் தங்கிவாழும் வகையிலும், சிதைத்து - அழிக்கும் முறையிலும் அன்றுதொடக்கம் இன்றுவரை தொடரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகள் சிங்கள அரசின் மேற்பார்வையில் தமிழர்களை சங்காரம் செய்யும் நோக்குடன் கட்டவிழ்த்துவிடப்படுள்ள திட்டமிட்ட வகையிலான இன அழிப்பு வடிவத்தினைக் கொண்டதாக இடையறாது நீண்ட திட்டமிடலுடன் தொடர்கின்றது.

 

இந்த இனப் பிரளயங்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். பல கோடிக்கணக்கில் தமிழரின் சொத்துகள் நாசமாக்கப்பட்டன. பல லட்சம் மக்கள் வீடிழந்து அகதிகளாக்கப்பட்டனர். 1983 ஜூலை கலவரத்தை அடுத்து தமிழ் இன அழிப்பு ஒரு புதிய, பயங்கர பரிணாமத்தை அடைந்தது. அதாவது, இன ஒழிப்பில் சிங்கள ஆயுதப்படைகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி பகிரங்கமாக ஈடுபடத்தொடங்கின. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்குல் என்ற பெயரில் பொதுமக்களை பெரும்தொகையில் அழிக்கும் இன சங்காரத்தை மிகப்பெரும் எடுப்பில் நடத்தின. 1983 ஜூலையிலிருந்து இன்றுவரை சிங்கள அரசின் இனவொழிப்பு பயங்கரவாதத்திற்கு ஏறக்குறைய ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் பலியாகியுள்ளனர். பதினைந்து இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழீழத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இத்தகைய நீண்ட தமிழின அழிப்புத் திட்டமிடலின் அடிப்படையில் தமிழீழத்தில் தமிழர்களின் இன விகிதாசார வளர்ச்சி மிகப்பெரும் வீழ்ச்சி அடையச் செய்யப்பட்டுள்ளது.

 

இங்கேதான் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் தோற்றம் பற்றிய அறிவு அவசியம் ஆகின்றது.

 

அந்தவகையில் சாத்விக ரீதியான, அமைதி வழிப் போராட்டங்கள் தொடர்ச்சியாக, மிருகத்தனமாக அடக்கி ஒடுக்கப்படும் பொழுது. ஒடுக்கப்படும் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஒடுக்குமுறையாளன் முற்றாக நிராகரித்து விடும் போது. நாகரீக அரசியல் மரபுகள் தழுவிய சட்டரீதியான கிளர்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்படும் பொழுது. அமைதி வழிப் போராட்டங்களில் இழையோடுகிற ஆன்மீக உணர்வுகளை ஒடுக்குமுறையாளன் நிர்த்தாட்சண்யமாக அசட்டை செய்யும் போது, அரசியல் கிளர்ச்சியானது புரட்சிகர ஆயுதப் போராட்ட வடிவில் வெடித்துக் குமுறுகிறது. இந்த யதார்த்த உண்மையை உலகின் ஒடுக்கப்பட்ட மக்களினது சுதந்திரப் போராட்ட வரலாறுகள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய ஒரு வரலாற்று ஓட்டத்திலேயே தமிழீழ தேசிய சுதந்திரப் போராட்டமும் வளர்ச்சியடைந்து நின்றது.

 

தமிழ் மக்கள் காலங்காலமாக அமைதி வழியிலேயே தங்களது அரசியற் போராட்டங்களை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். தங்களது அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுப்பதற்காக காந்தியின் அகிம்சைக் கோட்பாட்டினை பின்பற்றிய தமிழ் மக்கள் சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தினர். கால் நூற்றாண்டு காலமாக ஒற்றை ஆட்சி அமைப்பிற்குள் சமஷ்டி உரிமை கோரிப் போராடி வந்துள்ளனர். பெரும்பான்மைச் சிங்கள மக்களுடன் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் இணைந்து வாழ்வதற்கு சாத்தியமான சகல முயற்சிகளையும் தமிழ் மக்கள் மேற்கொண்டனர். ஆனால் தமிழ் மக்களின் நியாயமான, சட்டபூர்வமான, நாகரீகமான கோரிக்கைகள் அனைத்தும் சிங்கள ஆட்சியாளர்களால் முற்றாக புறக்கணிக்கப்பட்டன. 1961ம் ஆண்டில், தமிழீழ அரசியல் அரங்கில் பிரவாகமெடுத்த சாத்வீகப் புரட்சி வெள்ளம் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மகத்தான வரலாற்று நிகழ்வாகும். சத்தியாக்கிரகமாக, ஒத்துழையா இயக்கமாக வெடித்த அரசியல் கிளர்ச்சி மாபெரும் தேசிய எழுச்சியாக உருவம் எடுத்தது; ஒன்றுபட்ட மக்களின் எதிர்ப்பு இயக்கமாக வடிவம் பெற்றது - ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் உரிமைப் போராட்டத்தினை மனிதாபிமான முறையில் தீர்த்து வைப்பதற்கு மாறாக, சிங்கள இனவாத அரசு இராணுவ அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு தமிழ் மக்களின் அமைதி வழிப் போராட்டங்களை ஈவிரக்கமின்றி நசுக்கியது. இவ்வாறு தமிழர்களுக்கு எதிரான ஒடுக்கு முறையும், தொடர்ச்சியான இராணுவப் பயங்கர வெறியாட்டமும், சிங்களத் தலைமைப்பீடம் மாறி மாறி இழைத்துவந்த நம்பிக்கைத் துரோகங்களும், தமிழர்களுக்கு அமைதி வழிப் போராட்டங்களில் நம்பிக்கையைத் தகர்த்தது; சமாதான முறையில், சமரஸப் பேச்சுக்கள் மூலம் தங்களது பிரச்னைக்கு தீர்வு காண்பது சாத்தியமில்லை என்பதை உணர்த்தியது. வரலாற்றின் இந்த நெருக்கடியான காலகட்டத்தில்தான் புரட்சிகர ஆயுத எதிர்ப்பு இயக்கம் தோற்றம் கண்டது. சிங்கள அரசு கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனமான, இன ஒழிப்பு ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆயுதம் ஏந்திப் போராடுவதைத்தவிர வேறு எந்த வழியும் இருக்கவில்லை. தாங்கொணா ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடவேண்டிய இறுதிக் கட்டத்திற்கு தள்ளப்பட்ட எமது மக்கள் வன்முறைப் போராட்டத்தை வரித்துக்கொண்டது தவிர்க்கமுடியாதது. ஆகவே, ஆயுத வன்முறைப் போர்வடிவமானது தமிழீழ மக்களின் அரசியற் போராட்டத்தின் ஒரு புதுமுகத் தோற்றப்பாடாகவும், உயர்கட்ட வளர்ச்சியுமாகவே கொள்ளப்படவேண்டும். அரச ஒடுக்குமுறை சிங்கள, தமிழ் தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாட்டை கூர்மையடையச்செய்து, அப்பிரதான முரண்பாட்டின் வரலாற்றுக் குழந்தையாகவே ஆயுதப் போராட்டம் பிறப்பெடுத்தது. இவ்விதம் தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டமானது. அகிம்சை வடிவத்திலிருந்து புரட்சிகர ஆயுதப் போராட்ட வடிவமாக மாபெரும் வரலாற்றுத் திருப்பத்தை அடைந்தது.

 

புரட்சிகரத் தமிழ் இளைஞர்கள் மத்தியிலிருந்தே ஆயுதப் புரட்சிகர இயக்கம் கருக் கொண்டது. மாறி, மாறிப் பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் நடைமுறைப்படுத்திய இனவாதக் கொள்கைகளால் தமிழினத்தின் சமூக, பொருளாதார வாழ்வில் ஏற்பட்ட பாரதூரமான பாதிப்புகளே தமிழ் இளைஞர்களைப் புரட்சிகரப் போராட்டப் பாதையை முன்னெடுக்க நிர்ப்பந்தித்தன. சிங்கள அரசின் பாரபட்சமான, தமிழர்களுக்கு எதிரான 'தரப்படுத்தல்' கல்விக் கொள்கையும், 'சிங்களம் மட்டும்' என்ற மொழிக்கொள்கையும் உயர்கல்விக்கும் வேலைவாய்ப்பிற்குமான கதவுகளை முற்றாக மூடிவிட்டிருந்தது. இதன் விளைவாக, படித்த தமிழ் இளைஞர்கள் விரக்தியும், வெறுமையும் நிறைந்த இருள்மயமான எதிர்காலத்தை எதிர்கொண்டனர். மேலும் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் நாளாந்தம் தீவிரமடைந்துவந்தது. அரசின் அடக்குமுறைக் கருவிகளான ஆயுதப் படைகளும் காவற்துறையும் தமிழ் இளைஞர்களை காரணமின்றிக் கைது செய்தும், மிருகத்தனமாகச் சித்திரவதை செய்தும், படுகொலை செய்தும் அட்டூழியங்களைப் புரிந்தன. தமிழ் இளைஞர்களே அரச பயங்கரவாத அட்டூழியங்களுக்கு நேரடியாக இலக்காகி, மிகவும் கொடுரமான அடக்குமுறைக்கு ஆளாகினர்.

 

வேலையில்லாத் திண்டாட்டத்தால் ஏற்பட்ட விரக்தி, கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் எழுந்த வெறுப்பு, தொடர்ச்சியான பொலீஸ் - ராணுவ அட்டூழியங்களால் பிறந்த ஆத்திரம் - இவை, தீவிரவாத தமிழ் இளைஞர்களைப் புரட்சிப் பாதையில் ஈர்த்தது. தங்களது மோசமான வாழ்க்கை நிலையை பூரணமாக மாற்றியமைக்க தமிழ் இளம் சமுதாயம் உறுதிபூண்டது. ஒரு புரட்சிகர போராட்டம் மூலமே தங்களது தலைவிதியை மாற்றியமைக்கமுடியும் என்பதை அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ் இளைஞர்கள் உணர்ந்துகொண்டனர். 17/30 வயதான இளைய தலைமுறையினர் சரியாக உணர்ந்து கொண்டது போல, கூர்மையடைந்துவந்த தேசிய ஒடுக்குமுறையின் யதார்த்த சூழலில், தேசிய விடுதலைக்கும் சமூக மாற்றத்திற்கும் ஆயுதப் போராட்டமே ஒரேயொருவழியாக எஞ்சி நின்றது.

 

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றமும் ஆயுதப் போராட்ட வளர்ச்சியும் பற்றிய அறிவும் அவசியம் ஆகின்றது.

 

அந்தவகையில் 1970களின் ஆரம்பத்தில், எதேச்சையாக கட்டுப்பாடற்ற முறையில் பிரவாகமெடுத்த தமிழ்த் தீவிரவாத இளைஞர்களின் அரசியல் வன்முறை எழுச்சிகள் புரட்சிகர அரசியற் சித்தாந்தத்தையும் செயற்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட புரட்சிகர இயக்கமொன்றை நாடி நின்றது. பழமைவாத தமிழ் அரசியல் கட்சிகளோ அன்றி மரபுவழி மார்க்சிய இடது சாரிக் கட்சிகளோ எவ்வித புரட்சிகரப் பாதையையும் காட்டி நிற்கவில்லை. தமிழ்க் கட்சிகள், உணர்ச்சிமயமான தேசியவாத சுலோகங்களை எழுப்பினரே தவிர, தமிழ் மக்களின் சுபீட்சத்திற்கு உருப்படியான நடைமுறை சாத்தியமான செயற்திட்டம் எதையும் முன்வைக்கவில்லை. இடது சாரி இயக்கங்கள் தமிழர்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறையின் கொடூர யதார்த்தத்தை கண்டும் காணாதது போல நடித்து, சிங்களப் பேரினவாத ஆளும் வர்க்கத்துடன் ஒத்துழைக்கும் பிற்போக்கான கொள்கையைத் தழுவி நின்றன. இப்படியான அரசியல் வெறுமையில், தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டப் புறநிலைகள் ஒரு புரட்சிகர விடுதலை இயக்கத்தைத் தோற்றுவிக்கும் வரலாற்றுத் தேவையைப் பிறப்பித்தன. இந்தப் பிரத்தியேகமான அரசியற் சூழ்நிலையில், அதாவது 1972ல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது வரலாற்றுரீதியான பிறப்பை எடுத்தது.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், தமிழீழ நடைமுறை அரசின் நிறுவுனரும், நடைமுறை அரசின் தலைவருமாகிய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால்  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இயக்கம் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் அழைக்கப்பட்டு, பின்பு 1976 மே மாதம் 5ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற புதிய பெயரைச் சூடிக்கொண்டது.

தலைமறைவான கெரில்லாக் குழுவாக உதயமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் காலக்கிரமத்தில் மிகவும் கட்டுப்பாடான ஆயுத எதிர்ப்பு இயக்கமாகப் பரிணமித்து, அரச பயங்கரவாதத்திற்கு ஒரு பெரும் சவாலாக செயற்படத் தொடங்கியது. இனவொழிப்பு ஒடுக்குமுறையின் தீவிரம் ஒருபுறமும், அரசின் ஈவிரக்கமற்ற எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் மறுபுறமுமாக மிகவும் ஆபத்தான சூழ்நிலையை சந்திக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டதால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது கெரில்லாப் போர் அமைப்புகளை சதா விஸ்தரித்து, பலப்படுத்தி அரச படைகளுக்கு எதிராக தீர்க்கமான வீராவேசப் போராட்டத்தில் குதித்தது. 1989ம் ஆண்டின் பின்னர் படிப் படியாக முப்படை பலம்கொண்ட மரபுவழிப் படை பலத்தை உருவாக்கி இஸ்திரமான தமிழீழ நடைமுறை அரசை நிறுவி 18 மே 2009ம் ஆண்டு வரையில் தமிழீழத்தை ஆண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமானது முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு மேலான ஆயுதப் போராட்ட வரலாற்றைக் கொண்டது. உன்னதமான தியாகங்களும், அற்புதமான அர்ப்பணிப்புகளும், திகைப்பூட்டும் வீர சாதனைகளும் நிறைந்த ஒரு புரட்சிக் காவியமாக புலிகளின் வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நீண்ட தியாகப் பயணத்தில் மக்களோடு ஒன்றிக்கலந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று பரந்துபட்ட மக்களின் அபிமானத்திற்கும் ஆதரவுக்குமுரிய தேசிய விடுதலை இயக்கமாக வளர்ச்சி பெற்று, வரலாறு படைத்து நிற்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றமானது, தமிழ்த் தேசிய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை ஆயுதப் போராட்ட வடிவமாக விஸ்தரித்து, உயர்கட்டத்திற்கு முன்னெடுத்துச்சென்று, தமிழீழ நடைமுறை அரசை நிறுவி, புதிய சகாப்தத்தை புலிகள் படைத்தனர். தமிழீழப்  போராட்டத்தின் தனித்தன்மை, புறநிலைகள், யதார்த்த வரலாற்றுச் சூழ்நிலைகள் ஆகியவற்றை நுணுக்கமாகப் பரிசீலனை செய்தே ஆயுதப் போராட்டத்தை வெகுசனப் போராட்ட வடிவமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வரித்துக்கொண்டது. எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு மார்க்கம் எதுவுமேயில்லை என்ற அன்றைய கால யதார்த்த உண்மையை முழுமையாக உணர்ந்த பின்னரே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதப் போர்முறையைத் தழுவிக்கொண்டது. ஆரம்ப காலகட்டத்தில் ஆயுதப் போராட்ட வடிவமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வரித்துக்கொண்ட கெரில்லா போர் முறையானது எமது தேசியப் போராட்டத்திற்கு மிகவும் பொருத்தமான போர்வடிவமாகும். நிராயுதபாணிகளான, வலிமை குறைந்த தமிழ் மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கால கெரில்லா யுத்தப் பாதையே மிகவும் பொருத்தமானது என்பதால்தான் இந்தப் போர்முறையை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கைக்கொண்டது. ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் அரச ஒடுக்குமுறையை எதிர்க்கும் பாதுகாப்பு நடவடிக்கையாகவே அமைந்தது. மிருகத்தனமான ஓடுக்கு முறைக்கு இலக்காகியுள்ள ஒரு மக்கள் சமூகம் என்ற ரீதியில் ஆயுதம் ஏந்தி எம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை எமக்குண்டு, காலப் போக்கில் அரச பயங்கரவாதம் கூர்மையடைந்து அப்பாவிப் பொது மக்கள் பெருமளவில் பலியாகி வந்ததால் இந்த வெறியாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மக்கள் ஆதரவைப்பெற்ற  போராட்ட நடவடிக்கைகள் புரட்சிகர எதிர்த் தாக்குதல்களாக விரிவாக்கம் பெற்று சிங்களப் படை முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதுடன் தமிழீழத்தின் தாயக நிலப்பகுதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடிற்குள் கொண்டுவரப்பட்டது. இவை படிப்படியாக வளர்ச்சி பெற்று அரசியல், பொருளாதார, சமூக மற்றும் சிறப்பு மிக்க இராணுவ பலம்கொண்ட பாதுகாப்பான தமிழீழ நடைமுறை அரசை உருவாக்கியது.

 

இங்கேதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்புப் பொறிமுறை பற்றிய அறிவும் அவசியமாகின்றது.

 

அந்தவகையில் தமிழீழத் தாயக விடுதலையை வென்றெடுத்து, தனியரசு அமைத்து, சுதந்திர தாயத்தை நிர்மாணிக்கும் எமது அரசியற் குறிக்கோளை அடையும் வழிமுறையாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த நோக்கின் அடிப்படையில் செயலாற்றியதால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அரசியல் இலட்சியமே ஆயுதப் பாதையை வழிநடத்த வேண்டும் என்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியாக இருந்தது.

 

ஆரம்பகாலத்திலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் பிரிவிலிருந்து இராணுவ அமைப்பை வேறுபடுத்தவில்லை. பதிலாக, இரு பிரிவுகளும் ஒன்றிணைக்கப்பட்ட அரசியல் - இராணுவ வேலைத் திட்டத்தின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்பட்டிருந்தது. இந்த வேலைத்திட்டம் ஆயுதப் போராட்டத்தை ஒரு அதியுயர்ந்த அரசியற் போராட்ட வடிவமாகவே கொள்கிறது.

தேசிய விடுதலை என்ற இலட்சியத்தில் பரந்து பட்ட வெகுசனத்தை அணிதிரட்டி, அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசியற் பணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து அயராது உழைத்தது. 1978ம் ஆண்டிலேயே இனவாத அரசு விடுதலை இயக்கத்தை தடை செய்தபோதும், தமிழீழம் அடங்கிலும் இரகசிய அரசியல் தளங்களை அமைத்து தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தேசாபிமான சக்திகளை அணிதிரட்டி ஒரு வெகுசன தேசிய இயக்கத்திற்கான அத்திவாரத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டி எழுப்பியது. நீண்ட காலமாக உறுதியுடன், ஆயுதப் போராட்டத்தையும் அரசியற் போராட்டத்தையும் தீவிரப்படுத்தி முன்னெடுத்து வந்ததால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய போராட்ட முன்னணிப் படை என்பதோடு மட்டுமல்லாது, மக்களின் உண்மையான ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்  பெற்றுக்கொண்டது.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்திறனை கீழ்க்கண்டவாறு சுருக்கிச் சொல்லலாம்:

 

*1972 - 2009ம் ஆண்டு வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிங்கள இனவாத அரசின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழீழ மக்களைப் பாதுகாக்க தமிழர்களால் முடியும் என்பதை  சூழ்ச்சிகளுக்கு அடிபணியாத ஆயுத பலம்கொண்ட வலுவான தேசிய விடுதலை இயக்கமாக நிலை நிறுத்தியுள்ளது.

 

*ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் பிரச்னைகளை, நம்பிக்கைகளை, பிலாசைகளை நிறைவேற்றி நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவம் பெற்ற நடைமுறை அரசாக உருவாகியிருக்கிறது.

 

*தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களின் தேசிய பிரக்ஞையை விழிப்புறச் செய்து, தேசிய சுதந்திரம், சமூக சுபிட்சம் ஆகிய இலட்சியங்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலை விரும்பிகளையும், தேசாபிமான சக்திகளையும் ஒரே அணியில் ஒன்றுபடுத்தி தமிழ்த் தேசியத்தையும், தேசிய பாதுகாப்பையும் முனைப்புறச் செய்திருக்கிறது.

 

*தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தொடர்ச்சியான, தீர்க்கமான போராட்டம் மூலம் தமிழீழ நடைமுறை அரசை நிறுவித் தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்னையை சர்வதேச அரங்கில் பிரபல்யப்படுத்தியுள்ளது. சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக, தமிழர்களின் சுய ஆயுதபலத்தில் சிங்கள தேசத்திற்கு நிகரான படைவலுச் சமநிலையை நிறுவி, சிங்கள தேசத்திற்கு சரிநிகரான சமஅந்தஸ்துடன் சர்வதேச மத்தியஸ்தத்திலான அமைதித் தீர்வுப்  பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறது.

 

இந்தநிலையில் இனி இலங்கையின் வரலாற்றுப் பரிமாணத்தில் இன்றைய எதிர்காலப் பாதுகாப்பு நிலைப்பாடுபற்றி நோக்குவோம்.

 

அந்தவகையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென் இலங்கையில் வந்து குடியேறிய இந்தியாவைச் சேர்ந்த மக்கள் கூட்டத்தினருக்கும், இலங்கையின் பூர்விக குடிகளுக்கும் இடையில் ஏற்பட்ட இனக்கலப்பின் விளைவாக உருவாக்கம் பெற்ற சிங்கள இனக் குழுமம் இந்தியா உபகாண்டத்தில் பேரரசு ஒன்றை நிறுவியாண்ட அசோக மன்னனின் ஆட்சிக் காலத்தில் விரிவாக்கம் பெற்ற பௌத்த சமய விரிவாக்கத்தின் விளைவாக மகாவம்ச பௌத்த சிங்கள சித்தாந்தம் என்ற ஒன்றினை உருவாக்கி ஒட்டுமொத்த இலங்களைத் தீவையும் சிங்களமயமாக்க இன்றுவரை துடிக்கிறது. அதை அடைவதற்காக மிகப்பெரும் தமிழின அழிப்பை தொடர்ந்தும்,  காலத்திற்குக் காலம் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனாலும், இலங்கைத் தீவின் தென்பகுதியில் ஆதிக்கம் பெற்ற பௌத்த சிங்களக் ஆட்சியாளர்களால்  இன்றுவரை இலங்கையின் பூர்விக மக்களாகிய தமிழர்களிடம் இருந்து இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களைக் கைப்பற்றி சிங்கள பௌத்த மயமாக்க முடியவில்லை. இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளான தமிழீழ தேசம் சிங்களவர்களால் வரலாற்றில் சில தடவைகள் ஆக்கிரமிக்கப்பட்டு ஆளப்பட்டாலும் மீண்டும் தமிழர்கள் படை திரட்டி சிங்களவர்களை தமிழீழ மண்ணில் இருந்து விரட்டி அடித்ததுடன், சிங்கள மயமான தென் இலங்கை தேசத்தையும் மீண்டும் கைப்பற்றி ஆண்டுள்ளனர். 1505ம் ஆண்டு   காலப்பகுதியில் ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வரும் வரையிலும், வன்னி மன்னன் பண்டாரவன்னியன் ஆட்சி நிலம் ஆங்கிலேயரால் 1803ம் ஆண்டு காலப்பகுதியில் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ தேசம் தமிழ் அரசுகள், சிற்றரசுகள், குறுநில அரசுகள் மற்றும் குறுநிலத் தலைவர்கள் எனத் தமிழர்களினால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. இத்தகைய வரலாற்றுச் சூழமைவில் தமிழீழ தேசத்தின் பாதுகாப்பு என்பது, மகாவம்ச பௌத்த சிங்கள சித்தாந்தத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழீழத்தைப் பாதுகாக்கக் கூடிய வகையில் சுதந்திர தமிழீழத் தனியரசு உருவாக்கப்பட்டு தமிழீழ தேசம் தன்னைத் தானே பாதுகாக்கவல்ல படைபல பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதிலேயே தங்கியுள்ளது.

 

இது இவ்வாறு இருக்க 1948ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் தமிழீழ தேசம் பௌத்த சிங்கள இனவெறி அரசிடம் தாரைவார்க்கப்பட்ட பின்னர், தமிழின அழிப்பில் இருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஐ.நா சாசனத்தின் விதிகளுக்கு அமைவாக தமிழர் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில், சுயநிர்ணய உரிமைகொண்ட பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்க கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இத்தகைய சூழமைவில் இன்றைய எமது விடுதலைப் போராட்டமானது தமிழின அழிப்பிற்கான சர்வதேச நீதியை வேண்டித் தொடர்கின்ற போதிலும் பௌத்த சிங்களப் பேரினவாத அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன அழிப்பிற்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றினையும் வேண்டி நிற்கிறது.

 

அந்தவகையில் சாத்வீக வழியிலான இன்றைய தமிழர்களின் உரிமைப் போராட்ட வடிவமானது மூன்றுவிதமான தீர்வுகளை வித்தியாசம் வித்தியாசமான சர்வதேச தரப்புகளிடமிருந்து பரிந்துரைகளாக எதிர்நோக்கி நிற்கின்றது. அவையாவன முறையே ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரப் பரவலாக்கல், சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி முறைமை மற்றும் தனி நாட்டை நிறுவுதல் என்பவை ஆகும்.

 

இதில் ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரப் பரவலாக்கல் மற்றும் சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி முறைமை என்பது சிங்கள தேசத்துடன் பாதுகாப்புப் பொறிமுறைகள் பயிரப்பட்ட விதத்திலேயே அமைந்திருக்கும். இங்கே தமிழர்களின் பாதுகாப்புப் பொறிமுறை என்பது கணிசமான அதிகாரங்களைக் கொண்டவிதத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்த பாதுகாப்புப் பொறிமுறை வடிவமாகவும், மாகாணங்கள், மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்கள் என்ற அடிப்படையிலான பாதுகாப்புப் பொறிமுறை வடிவமாகவும் அமைத்துக்கொள்ள முடியும் இவற்றை தரை, கடல், வான் என்ற மூன்று நிலைகளிலும் தமிழர்கள் தமது நிலத்தைப் பாதுகாக்கக் கூடிய விதத்தில் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். இவை உள்ளகக் காவல்துறைக் கட்டுமானங்களாகவும், கடல் மற்றும் கரையோரக் காவல்துறைக் கட்டுமானங்களாகவும், சிறப்பு வான்வழிப் பாதுகாப்புக் காவல்துறைக் கட்டுமானங்களாகவும் அமைத்துக்கொள்ளப்பட முடியும். அதேபோன்று ஏனைய முப்படைக் கட்டுமானத்திலும் சிங்களதேசத்துடன் பங்கீடு செய்துகொள்ள முடியும். இத்தகைய தமிழர்களின் இராணுவ, புலனாய்வுக் கட்டுமானங்கள் பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் அங்கீகரிக்கப்படும்போது அவை தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளிவைத்து உள்ளக சுயநிர்ணயம் கொண்ட தமிழர் தாயகமாக, தமிழர்களின் பாதுகாப்பை சிங்கள தேசத்துடனும், இந்தியாவுடனும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய சூழமைவு ஒன்றை ஏற்படுத்தலாம்.

 

இதனை சிங்கள பௌத்த பேரினவாதம் ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்து தொடர்ந்தும் அறிவுபூர்வமற்ற மகாவம்ச சித்தாந்தத்தில், இவை தமிழீழத்தைத் தனிநாடு ஆக்கும் எனக்கருதி தமிழர்களின் அடிப்படை உரிமைகளை மறுதலித்து தொடர்ந்தும் திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகளைத் தொடரும் இடத்தில் தமிழர்கள் தமக்கான தனிநாட்டிற்கு உரிய பாதுகாப்புப் பொறிமுறையை செயல்நெறிப்படுத்துவதே தமிழீழத்தில் தமிழரின் இருப்பையும் தமிழர்களின் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

 

அந்தவகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கி, நிர்வகிக்கப்பட்ட தமிழீழ நடைமுறை அரசின் பாதுகாப்புப் பொறிமுறை என்பது விடுதலைக்கும், பாதுகாப்பிற்குமான பாதுகாப்புப் பொறிமுறையாகவே இருந்தது என்பதையும், மாறாக வேறு நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கிலான இராணுவ படைக்கட்டுமானப் பொறிமுறையாக வடிவமைக்கப்பட்டு இருக்கவில்லை என்பதையும், இனியும் அவ்வாறானதொரு ஆக்கிரமிப்பு நோக்கம்கொண்ட படைக் கட்டுமானத்தை தமிழீழ தேசம் உருவாக்காது என்பதையும் ஐ. நா சபையின் பாதுகாப்பு நியமங்களுக்கு அமைவாக செயலாற்றித் தமிழீழ தேசத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதுடன், இந்திய நாட்டுடன் இணைந்து வலுவான பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி இந்தியப் பிராந்தியத்தினதும் - இந்திய நாட்டினதும் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய படைபலப் பாதுகாப்பில் தமிழீழ தேசம் உறுதியுடன் பங்கெடுத்து  பணியாற்றும் அதேவேளை, இத்தகைய நிலைப்பாடு கொண்ட தமிழீழத்தின் பாதுகாப்பு நிலைப்பாடென்பது இந்திய தேசத்தின் நட்பிற்கு முன்னுரிமை வழங்குவதுடன் - இந்தியாவுடன் இணைந்து உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான சர்வத்தேச தளத்துடனும் ஒருங்கிணைந்து பயணிக்க வல்லதாக இருக்கும் என்பதை உரிய செயல்நெறி மற்றும் உறவுமுறைகளின் ஊடே உறுதிசெய்து நிற்றல்வேண்டும்.

 

(தொடரும்….)