கலைக்கண்ணனும் அல்லியும் நாம் இழந்துவிட்ட சொத்துக்கள்...!உண்மைத் துயரம்

கலைக்கண்ணனும் அல்லியும் நாம் இழந்துவிட்ட சொத்துக்கள்...!உண்மைத்  துயரம்
Kalaikkannan and Alli are our lost assets.

" .................... அண்ணா ஆமிக்காரன் ஒப்பரேஷன் நீரோட்டம் என்ற பெயர் வைத்திருக்கிறானாம் இந்த நடவடிக்கைக்கு எதிராக இயக்கம் ஒரு நடவடிக்கை செய்தால் என்ன பெயர் வைக்கும் என்று சொல்லுங்க பார்ப்போம்"அல்லி என்கின்ற அருள்வேந்தன் கேட்கிறான்.

அவனை அப்படியே அமர்ந்தபடியே இறுக்க அணைத்துக் கொண்டேன்.

யார் மகனே நீ தன் சொந்த தம்பி குண்டடி பட்டு பலியாகி கிடக்கிறான். தன் அன்னையும் அண்ணனும் பாட்டியும் சுதாவும் போராளிகளும் அனைவரும் அவனை சுற்றிவர கதறி அழுது கொண்டிருக்கின்றார்கள். 

தன் தந்தையோ மனமுடைந்து செயலிழந்து இழப்புகளுக்கு அழுவதற்கு சிறிது நேரம் கிடைத்தவராக தனியே தேற்றுவாரின்றி அழுது கொண்டே தம்மை மறந்த நிலையில் கிடக்கிறார். தொடர் தோல்விகளும் தொடர் இழப்புகளும் இப்போது தன் மகனும் என அவர் எவற்றுக்காக எல்லாம் வாழ்ந்தாரோ அவையெல்லாம் கண்முன்னே பறிக்கப்பட்டு எரிந்து கருகிக் கொண்டிருப்பதை ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவனாக தளபதியாக தாங்கி தாங்கி தாங்க முடியாமல் வெடித்து சிதறி அழுது இயக்கமின்றி கிடக்கிறார் . வேலை சுமையின் மத்தியில் இழப்புகளைப் பற்றி சிந்திக்க நேரம் கிடைக்காத இந்த மனிதரால் இன்று கிடைத்த இந்த சிறு இடைவெளியில் தன் மகன் இழப்போடு அனைவரது இழப்பையும் மனதில் நிறுத்தி அவை எல்லாவற்றுக்குமாய் அழுது தீர்க்கிறார் போலும். தீர்க்கமான முடிவுகளை எடுக்க அவருக்கு இன்னும் அவகாசம் தேவைப்பட்டது போலும். அவரது இறுதி வணக்கத்திற்காக இல்லை முதல் பார்வைக்காக கலைக்கண்ணன் உடைய உடல் உறவினர்கள் சூழ அமைதியாய் கிடக்கிறது. 

ஆனால் அல்லி எதைப்பற்றி யோசித்துக்கொண்டு இருக்கிறான். 

"எத்தனையோ குழந்தைகள் செத்து விட்டார்கள். இவர் தனது மகன் செத்ததுக்காக மட்டும் அழுது கொண்டிருக்கிறார். " Tஎன்ற அல்லியை வியப்போடு பார்த்தேன். தன் தம்பி கொல்லப்பட்டதற்காய் தன் தந்தை அழுது கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ளாத அந்த இளைய வீரனின் கூற்று என்னை மெய்சிலிர்க்க வைத்தது. 

சிறிது கூட அவனின் கண்களில் கண்ணீரை நான் காணவில்லை. அழுது கொண்டிருந்த தந்தைக்கு பதிலாக அவன் ஒரு தலைவன் போன்று சிந்திப்பதாய் உணர்ந்தேன்.

அவன் எங்களுக்கும் குழந்தைதான். எங்களுக்கும் மகன். அவரின் மூன்றாவது மகன். எல்லோரையும் போலவே தானே எல்லோருக்கும் செல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று விரும்பியவன்.

வேறு யார் மீதும் நாங்கள் அன்பு காட்டுவதை குழந்தை தனத்தோடு எதிர்ப்பவன். தன்னைவிட வயதில் மூத்த அண்ணனோடு மற்றவர்கள் பூப்பந்தாட்டமோ சதுரங்கமும் விளையாடிக் கொண்டிருந்தாலும் இடையிலே வந்து தன்னோடு விளையாடுமாறு கேட்கின்ற குறும்புக்காரன். 

சுதா அன்ரி என்றால் அவனுக்கு உயிர். நான் எப்போது சுதா (என் மனைவி) அன்ராவை விட்டு விலகுவேன் என்று மற்றவர்களை விட அவன் காத்திருப்பது அதிகம். நான் களமுனைக்கு செல்லும் வேளைகளில் எல்லாம் என் மனைவி சுதாவின் தங்குமிடம் கலைக்குட்டியின் வீடு தான். நான் சென்ற மறு தினமே வந்து அழைத்துச் சென்று விடுவார்கள். 

நாங்கள் செல்லமாக வளர்த்து வந்த சுதாவின் செல்ல நாய் ரோபோ இறந்ததின் பின் வேலையும் வீடுமாய் தனித்திருந்த சுதாவுக்கு இது ஒரு நல்ல துணை பாதுகாப்பு பொழுதுபோக்கு. கிளிநொச்சி இடப்பெயர் வின் பின் எல்லாமே நிலைகுலைந்து போயிருந்தன. 

நாங்கள் விசுவமடு பகுதியில் தற்காலிகமாக ஒரு வீட்டினை அமைத்து இருந்த வேளையிலும் சரி பின்னர் குகா அக்காவோடு சேர்ந்தே என் மனைவி தேவிபுரம் இரணைப்பாலை செந்தூரன் சிலையடி பின்னர் அம்பலவன் பொக்கனையில் ஒரு கல் வீட்டில் சுமார் பத்து குடும்பங்கள் வரை வாழ்ந்த போதிலும் சரி வத்சலா அக்கா தன் குடும்பத்தோடு வந்து குகா அக்காவையும் சுதாவையும் இந்திரா அன்ரி பாலகுமாரன் அண்ணாவுடைய பிள்ளைகள் தீபன் மகிழினி ஆகியோருடன் குருவி அக்காவும் பிள்ளைகளும் என அனைவரையும் வந்து பார்ப்பதைத் தவற விடவில்லை. தாக்குதல்கள் குறைவடைந்தால் உடனே வந்துவிடுவார்கள். நானும் அப்போது காயமடைந்திருந்ததால் அங்கே இருந்தேன். அல்லி நேரே என்னிடம் வருவான். ஏனோ அவனுக்கு என்னைப்பிடித்திருந்தது. அப்போது மூத்த மகன் பார்த்தீபன் அப்போது போராளி. அல்லி தன்னுடன் எப்போதும் N 97 துப்பாக்கியுடனே இருப்பான். 

தன் குடும்பத்தின் மூத்தவர்களான தந்தையையும் தமையனையும் களத்துக்கு அனுப்பிவிட்டு எஞ்சிய தாயையும் தம்பியையும் காப்பாற்ற 15 வயதேயான அல்லி துப்பாக்கியுடன் திரிகிறான். கடைசி வடிவமைப்பு துப்பாக்கி தன் கையில் இருந்த போதிலும் ஏனோ அவனுக்கு என்னிடமிருந்து பழைய 

81-1 பற்றி அறிய ஆர்வமேற்பட்டது. அதுவும் நான் அறிய எத்தனையோ பொறுப்பாளர்களுடைய மாவீரர்களுடைய கைகளுக்கூடாகவே தவழ்ந்து வந்திருந்தது. எமக்குத் தெரிந்த அண்மைய களமுனை செய்திகளை பரிமாறிக்கொள்வோம். 

எனக்கு அந்த இளைஞனின் சிறுவனின் உள்ளம் படும் தவிப்பை உணர்ந்து கொள்ள முடிந்தது.

பிறந்தநாள் முதல் இரகசியம் கருதி உள் வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்தவர்கள். பாடசாலை சென்றாலும் சரி ஏனைய இடங்களுக்கு சென்றாலும் சரி அவர்களால் எல்லா இளைஞர்கள் சிறுவர்களையும் போல் உலவி திரிய முடியாது நிறைந்த கட்டுப்பாடுகள். எதற்காக தங்கள் இளமையை அவர்கள் அர்ப்பணிக்கிறார்களோ அவையெல்லாம் அடியுண்டு போவதையும் தங்களால் உலகின் அடுத்த பரிமாணத்தை காணவும் முடியாமல் போகலாம் என்பதையும் அப்போதே அவன் உணர்ந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. 

இயக்கம் திருப்பி அடிக்க வேண்டும் இயக்கம் மறுபடி வெற்றி பெற வேண்டும் என்ற வேணவா அந்த பிஞ்சு மனதில் உணர்ந்தேன் . கவலையிலும் அவனோடு சில காலம் பகிர கிடைத்தது கிடைத்தது பெருமையாக உணர்ந்தேன். 

அப்போது கூட கலைக்கண்ணன் ஓடிவந்து தொப்பென்று என் காயத்தின் மேலேயே விழுவான். தமையன் கடிந்து கொள்வதை கூட ஏற்க மாட்டான். ஆம் அவன் எங்கள் மூத்த பிள்ளை. ......................... 

"எனக்கு தெரியேல்ல அல்லி நீங்கள் சொல்லுங்க என்றேன்" 

சற்றும் தாமதிக்காமல் "ஒப்பிறேசன் காற்றோட்டம் " என்றான் அந்த பதினைந்தே வயதான வீர மகன் "ஏனென்றால் நீரோட்டத்தை அணைகட்டி தடுத்து விடலாம். ஆனால் காற்றோட்டத்தை எதனாலும் தடுக்க இயலாது' மேலும் விளக்கினான். 

யாருடைய மகனிவன்? இப்படி பேசாமல் வேறெப்படி பேசுவான். பெருமிதத்துடன் அவன் தலையை உச்சி முகர்ந்த போது என் கண்ணீர் அருவியாகக் கொட்டியது. Tஎந்த வேளையில் இந்த மகன் இந்த கேள்வியை பற்றி யோசிக்கிறான் அந்தக் கணம் என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய ஒரு வாய்ப்பு ஏனெனில் புலிக்கு பிறந்தது புலிதான் என்பதை கண்கூடாக பார்த்த கணம். அந்திம காலத்தில் வெளிப்படும் அதிசயங்களில் அவனும் ஒருவனாக தெரிந்தான் அல்லி. 

நேரம் நடு நிசியை நெருங்கிக் கொண்டிருந்தது. 

ராணுவத்தின் 60mm மோட்டார் குண்டுகள் கொத்தாக அவர்கள் இருந்த வீட்டின் அருகே வீழ்ந்து வெடிக்கத் தொடங்கிவிட்டன. 

அனேகமாக சுற்றிவர இருந்த மக்கள் அனைவரும் இடம் பெயர்ந்துவிட்டார்கள். 

இவர்களது குடும்பமும் பாதுகாப்புக்கு நின்ற போராளிகளும் தான் அங்கு எஞ்சிஇருந்தோம். 

அவர்களது குடும்பத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த கண்ணன் மாஸ்டர் மெதுவாக அவர் அழுது கொண்டிருந்த அறைக்குள் சென்று "அண்ணை" என்றழைத்தார். "ஓமப்பு வாறன் ' என்றார் அவர் . ஆனால் வரவில்லை. எத்தனையோ கண்களில் கண்ணீரைத் துடைத்தவன் கண்களில் கண்ணீர். அதைத் துடைத்து அவரைத் தேற்ற யாருமின்றி தனியே அழுது கொண்டு கிடக்கிறார். அவரது எண்ணங்களில் என்னென்ன ஓடி இருக்கும் என்பதை எங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது . அப்போது சரிந்து கொண்டிருக்கும் மாபெரும் தமிழ் இராச்சியத்தின் மிக அதிகாரமும் கொண்ட பொறுப்பில் இருந்தவர் அவர் . அவரது அழுகை இதற்கு முன்தினம் க .வே பாலகுமாரன் அவர்கள் என்னிடம் கூறி ஆதங்கமடைந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்து போயின. " மாபெரும் சாம்ராஜ்யம் அழிந்துகொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கிறேன்" என்றிருந்தார் அவர். 

இவரைக் காப்பாற்ற வேண்டியது அவரது பாதுகாவலர்களின் கடமையும் அங்கிருந்த அனைவரதும் கடமையுமாகும். அவர்தான் தலைவரின் ஒரே தொடர்பு. அவருக்கூடாகவே அனைத்து விடயங்களும் தலைவருக்கு கிடைக்கும் அதுவும் நேரடியாக மட்டுமே. 

கலைக்கண்ணனை அவர் பார்க்காத வரைக்கும் அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறுவது சாத்தியமில்லை. ஆனால் களமுனை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. எந்த வேளையிலும் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்படலாம் அல்லது தாக்குதலுக்கு உள்ளாகலாம் அந்த வீடு. 

இவ்விடத்தில் அனைத்தையும் உடனடியாக நிகழ்த்தி முடிக்க வேண்டிய தருணம். 

அடுத்து அவரது மாமியார் சென்று எழுப்பினார் தம்பி வாவெண வந்து பாரண . ஓம் வாரன். சத்தம் மட்டுமே வந்தது அவர் வரும் பாடில்லை. 

அவர்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த கண்ணன் மாஸ்டர் பல தடவைகள் முயன்றும் அவரை எழுந்து வர வைக்க முடியவில்லை. ஆனால் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. இனிமேலும் பொறுக்க முடியாது. 

"அல்லி போய் அப்பாவை எழும்பி வரச்செய்யுங்கோ" என்றேன். 

"அவரை இப்ப எழுப்ப ஏலாது" என்றவனின் தலையைத் தடவிவிட்டு அழுது கொண்டிருந்தவரிடம் சென்றேன் . 

"அண்ணை "என்றேன் . "ஓமப்பு" 

"அண்ணை வாங்கோ உங்களுக்காகத்தான் எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கினம். நீங்க வந்து பார்த்தால் தான் அடுத்த கட்டம் எல்லாம் செய்யலாம்" என்றேன். 

"ஓமப்பு வாரேன்" என்றார். 

இதைத்தான் இவ்வளவு நேரமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் எனவே நான் விடுவதாக இல்லை. 

"இல்லை அண்ணை செல்லடியும் கிட்ட கிட்ட வந்து கொண்டிருக்கிறது" 

ஓம் வாறன் என்றவர் இன்னும் எழும்புவதாக இல்லை. மீண்டும் நானே 

"இந்த நேரம் உங்களுக்கும் ஏதும் என்றால் அண்ணை தனிச்சிடுவார்" Tநான் சொல்லி முடிக்கவில்லை. 

துள்ளி எழுந்தார். 

நானே அதனை எதிர்பார்க்கவில்லை. "அண்ணை" என்கிற சொல்லி வலிமை மகத்துவம் அவ்வாறானது.

எழுந்தவர் நேராக தன் மகனின் உடலை நோக்கி நடந்தார். 

கரையான் முள்ளிவாய்க்காலின் ஒரு கல்வீடு அது. ஓவென்று திறந்த அகன்ற வீட்டின் வாயில் ஊடாகப் பாய்ந்து வரக்கூடிய எதிரியின் ரவைகளிலிருந்து (அவ்வாறு வந்த ரவை ஒன்றே கலையின் உயிர் குடித்திருந்தது. 

அவருக்கு காப்பளிக்க கூடயதாக நான் மட்டுமே அந்தக் கணத்தில் அருகில் இருந்தேன். 

அந்த வீட்டின் ஹோலைக் கடந்தோம். அதில் எனக்கு பெருமையே . 

ஒரு அறை முழுவதுமாக மரக்குற்றிகளினால் உட்புறமாக காப்பளிக்கப்பட்டிருந்தது. உள்ளே நடுவு எங்கள் கலைக்குட்டி அசைவற்று படுத்திருந்தான். அவனது இடது செவிக்கு சற்று மேலாக தொலைவிலிருந்து சுடப்பட்ட எதிரியின் ரவை உட்புகுந்திருந்தது. சுற்றிவர வத்சலா அக்கா பார்த்தீபன் சுதா பாட்டி மருமகள் அனைவரும் அழுததழுது களைத்துப்போனவர்களாக . 

ஒரே ஒரு நிமிடம் அமைதியாக நின்றவாறே மகனின் எழில் கொஞ்சும் அழகிய முகத்தைப் பார்த்தவர் உடனே வெளியே வந்தவர் "தம்பியாக்கள் முற்றத்தில தாட்டுப்போட்டு ஒரு அடையாளம் வைச்சு விடுங்கோ" என்றார். பத்து நிமிடங்களுக்குள் கலைக்கண்ணன் அந்த மண்ணோடு சங்கமமானான். அவனுக்கு தூவுவதற்கு ஒரு மலர்கூட இருக்கவில்லை. மனம் முழுவதும் ரணமாக குடும்பத்தினரோடு தமது கவச வாகனத்தில் ஏற்றி வந்து நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கருகில் இறக்கி "கவனமாக இருங்கோ" என்று விட்டு சென்றார்கள்.... 

கலைக்கண்ணன் அவனது தந்தை

ஆசான் சோதி அல்லி கலைக்குட்டி நான் ஜனனி அக்கா குகா அக்கா வத்சலா அக்கா சுதா .

அடுத்த படத்தில் கண்ணன் மாஸ்டர் முல்லை.....