பாக்கு நீரிணையே தமிழீழத்தின் திறவுகோல்

பாக்கு நீரிணையே தமிழீழத்தின் திறவுகோல்

கேள்வி: இந்தியாவிற்கும் தமிழீழத்திற்கும் இடையிலான உறவு எவ்வாறு அமையப்பெறவேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பதில்: தமிழீழத்தின் தனித்துவம் குறையாதவகையில் இந்தியாவின் அரவணைப்பில் தமிழீழமும், தமிழீழ உறவின் ஒத்துழைப்பில் இந்தியாவும் இணை பிரியமுடியாது ஒருவரில் மற்றவர் தங்கி வாழும் பரஸ்பர நல்லுறவு நிலையில் - சமூக, பொருளாதார, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் என அனைத்திலும் பின்னிப் பிணைந்திருக்கும் ஒப்பந்தங்களையும், ஒன்றிக் கலந்த நல் உறவு நிலையினையும் உருவாக்கி இருத்தல் இரண்டு நாடுகளின் இருப்பிற்கும், வளர்ச்சிக்கும், அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும்d அவசியமானது.

கேள்வி: நீங்கள் கூறுவது சரி என்று வைத்துக்கொண்டாலும் இதனை இவ்வுலகில் நிலவும் பூகோள, புவிசார் அரசியல் போட்டிகளுக்குள் எப்படிச் சாத்தியப்படுத்தப்போகின்றோம்?

பதில்: தமிழீழத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்கான சரியான கொள்கைகளை படிமுறை படிமுறையா உருவாக்கி, அவற்றை எதிரிக்கும், துரோகிக்கும், நண்பருக்கும், விரோதிக்கும் எனப்பாகுபாடின்றி மக்கள் முன் எடுத்துரைத்து அதன்விளைவாக எழும் எதிர்ப்புக்களை வெற்றிகொண்டு, அவற்றைச் செயல்நெறிப்படுத்தும்போது தமிழீழம் ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கையான உறவுத்தளமானது எமது விடுதலையைச் சாத்தியப்படுத்தும். 

மேலும் மிகவும் முக்கியமானவிடயம் இந்தியாவுடனும் தமிழ்நாட்டுடனும் தமிழீழம் ஏற்படுத்திக்கொள்ளும் உறவின் அடிப்படையிலேயே தமிழீழத்தின் திறவுகோல் என்பது இதுவரை அமையப்பெறுகின்றது.

அந்தவகையில், நீண்ட காலத் தொடர்பின் அடிப்படையிலான உறவுப் பரிமாணம் என்பதே, இந்தியாவையும் தமிழீழத் தமிழர்களையும் இணைத்து நிற்கின்றது. வலுவான சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகளோ அல்லது ஒருவரில் மற்றவர் தங்கிவாழவேண்டிய அவசியமோ அதிகம் இல்லை என்பதே இன்றைய கள யதார்த்தம்.

எனினும் ஒற்றுமை, வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்புப் போன்றன இந்தியாவிற்கு ஈழத் தமிழரிடமும், தமிழீழத் தமிழர்களுக்கு இந்தியாவிடமும் தேவைப்படுகின்றது. 

சிங்கள தேசத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக ஈழத் தமிழர்களின் இருப்பில் அக்கறைகொண்டுள்ள இந்தியா, தமிழீழத் தமிழர்களின் பூர்விக தனித்துவத்தைப் பேணுவதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்பது மற்றுமொரு கள யதார்த்தம்.

இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டியிருப்பதால் இந்திய மத்திய அரசின் தமிழீழத் தமிழர்கள் மீதான பாரமுக அணுகுமுறை என்பது அவர்கள் நிலையில் நியாயப்படுத்தத் தக்கதாகவும் அதுபோலவே சிங்கள தேசத்தினதும், தமிழ்நாட்டுத் தமிழர்களினதும் வட இந்திய, பிராமண, ஹிந்திமொழி எதிர்ப்பு மனோபாவ நிலைப்பாடுகள் அவ் இனக்குழுமங்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கு நியாயப்படுத்தத் தக்கதாகவும் இருக்கும் இன்றைய சூழ்நிலையில், தமிழீழத் தமிழர்களின் வாழ்வும், வாழ்விற்கான விடுதலைப் போராட்டமும் இந்திய மத்திய அரசு மற்றும் தென்னிந்திய உபகண்ட மக்களின் உள்முரண்பாடுகளுடன் பின்னிப் பிணைந்ததாக, சரியான திசைநோக்கிப் போகமுடியாதவாறு வெற்றி வாய்ப்பை இழந்து – சிக்கிச் சிதைந்து கிடப்பதே இன்றைய அவலநிலை.

தமிழீழத் தமிழர்களின் இத்தகைய இக்கட்டான நிலையில், தமிழீழத் தமிழர்களின் நெருங்கிய, இணை பிரிக்க முடியாத தொப்புள்கொடி உறவாக விளங்கும் தமிழ்நாடு, இதனை உணர்ந்து தமிழீழத் தமிழர்களுக்கும் இந்திய மத்திய அரசிற்கும் இடையில் நம்பிக்கையான நல்லுறவை ஏற்படுத்தித்தர உழைக்கவேண்டும், அவ்வாறானதோர் நிலைமை தமிழ்நாட்டில் இன்னும் தோற்றம்பெறாமல் இருப்பதே கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக தமிழீழத்தில் நிகழும் திட்டமிட்ட தமிழின அழிவிற்கு ஏதோவொரு விதத்தில் காரணமாகி நிற்கின்றது என்பதும் இன்னுமொரு கள யதார்த்தமே.

தமிழ்நாடு எட்டுக்கோடி மக்களைக் கொண்ட பெருந்தேசமாக இருக்கின்றது. தமிழ்நாட்டிற்கு வட இந்திய, பிராமண, ஹிந்திமொழி ஆதிக்கத்தில் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க தமிழீழத்தின் உதவி பெரிதும் அவசியம் அற்றது. எனவே தமிழீழத் தமிழர்களுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுத் துணையாக நின்று இணைபிரிக்க முடியாத இந்திய - தமிழீழ நட்புறவு ஒன்றினை உருவாக்கி விடுவதே தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் ஆற்றவேண்டிய அப்பழுக்கற்ற தமிழீழத் தனியரசை உருவாக்க வல்ல தமிழுணர்வுப் பணியாகும்.

தமிழ்நாட்டின் எதிர்ப்பை இந்திய மத்திய அரசால் எளிதில் கையாண்டுவிட முடியும். ஆனால் சிங்கள தேசத்தின் எதிர்ப்பையோ, தமிழீழத் தமிழர்களின் எதிர்ப்பையோ அவ்வளவு எளிதாக கையாண்டுவிட முடியாது. ஏன் எனில் தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம், இலங்கை என்பது தனிநாடு. மேலும் சிங்களதேசமோ, தமிழீழதேசமோ இந்திய தேசத்தில் தங்கி வாழவேண்டிய சமூக, பொருளாதார, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார ஒப்பந்தங்களையோ அல்லது பிரிக்க முடியாத உறவு முறைகளையோ மிகப் பெரிய அளவில் கொண்டிருக்கவில்லை.

இருந்தாலும், இந்தியாவை மீறி இந்தியாவிற்கு எதிரான சர்வதேச சக்திகளுடன் செல்ல முடியாதவாறான மட்டுப்படுத்தப்பட்ட ஒப்பந்த மற்றும் சிங்கள, தமிழீழ தேசத்தைக் கட்டுப்படுத்த வல்ல உறவுப் பொறிமுறைகள் சிலவற்றையும் இலங்கை விடையத்தில் இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது என்பதும் இன்றைய கள யதார்த்தமே.

இங்கேதான் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழீழத் தமிழர்களும் இணைந்து சிங்கள தேசத்தைக் காட்டிலும் தமிழீழத்தை இந்திய மத்திய அரசிற்கு நம்பிக்கைக்கு உரிய தேசமாக உருவாக்க முன்வரவேண்டும். இதை முறியடிக்க சிங்கள தேசத்திற்கு அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இலகுவில் முடியாது. ஏன் எனில் சீனப் பொறியில் மாட்டிய சிங்கள தேசத்தால் மிகவிரைவில் வெளியே வந்து இந்தியாவின் அதீத நம்பிக்கையினைப் பெற்றுவிட முடியாது என்பதும் இன்றைய இன்னுமொரு கள நிலமை.

சிங்களத் தேசியவாதம் என்பது எல்லா இனங்களிடமும் காணப்படும் சுய பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடாகிய அன்னிய எதிர்ப்பு, இந்தியக் கூட்டு, இந்தியாவுக்கு எதிரான அன்னியக் கூட்டு (ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு வடிவம் என்பதும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையே) என்ற மூன்று பிரதான அடிப்படைகளில் கட்டப்பட்டுள்ளது. எனவே சிங்கள தேசம் என்பது இந்தியாவின் நட்பு நாடாக இருக்க முடியுமே அன்றி ஒருபோதும் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடக மாற முடியாது, சிங்கள தேசம் மாற நினைத்தாலும் - வெகு எளிதில் அவ்வாறு மாறிவிட முடியாது.

தமிழீழத் தேசியவாதம் என்பது எல்லா இனங்களிடமும் காணப்படும் சுய பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடாகிய அன்னிய எதிர்ப்பு, சிங்கள மயமாக்கலின் விளைவாக எழுந்த சிங்கள எதிர்ப்பு மற்றும் தமிழீழத்தின் தனித்துவத்தைப் பேணியபடி தமிழ்நாட்டில் தங்கிவாழும் தொப்புள்க்கொடி - இரத்த உறவுநிலை என்ற அடிப்படைகளில் கட்டப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு இன்று இந்தியா என்ற கூட்டு சக்தி வடிவமாக இருப்பதால் தமிழீழம் என்பது தமிழ்நாட்டிற்கும், இந்திய மத்திய அரசிற்கும் இடையிலான உறவும் – முரணும் என்ற உள் முரண்பாடுகளைக் கடந்து பார்த்தால் இந்தியாவின் இணைபிரியாத நெருங்கிய நட்பு நாடே.

வரலாற்று உறவின் அடிப்படையில் உள்முரண்பாடுகளை கடந்து பார்த்தல் தமிழீழமே இந்தியாவின் நெருங்கிய நடப்புச் சக்கிதாக உள்ளது. அவ்வப்போது மேற்கொள்ளும் இந்தியாவுக்கு எதிரான அன்னிய உறவின் விளைவாக சிங்கள நாடு இந்தியாவின் நெருங்கிய நட்புச் சக்தியாக இல்லாதபோதிலும் இந்தியாவிற்கு அடங்கிவாழும் சிறிய தேசமாகவே அதன் உறவு இன்றுவரை தொடர்புற்று இருக்கின்றது. 

இத்தகைய உறவுத்தளத்தில் இலங்கை இந்தியாவை விட்டு மீறிச்செல்ல முற்படும்போதெல்லாம் இலங்கையைக் கட்டுப்படுத்த இந்தியா கையில் எடுக்கும் ஆயுதம் இலங்கையின் இன முரண்பாடு என்பதேயாகும். இன்றுவரைக் கைக்கொள்ளப்படும் இத்தைய அணுகுமுறை இனியும் பலன் தருமா என்பது மிகப்பெரும் கேள்விக் குறியே.

எனவே, இந்தியா இன்று கைக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான அணுகுமுறை என்பது, இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடற்பரப்பை தன்னகத்தேகொண்ட தமிழீழத்தை தனது இணைபிரிக்கமுடியாத நட்புச் சக்தியாக்கி, தனக்கான நிரந்தரப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், தென் இலங்கையில் பல்கிப் பெருகியிருக்கும் பல இலச்சம் தமிழர்களின் உறவுப் பலத்தை வழமைபோன்று பயன்படுத்தி சிங்கள தேசத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருப்பதும் இந்தியா பயன்படுத்தக் கூடிய இந்தியாவுக்குச் சார்பான இன்றைய கள நிலமை.

எது எவ்வாறு இருப்பினும், இன்றைய உலக அரசியல் கள நிலையில் இந்தியாவோ, சீனாவோ, அமெரிக்காவோ அல்லது வேறு எந்த வல்லாதிக்க சக்தியோ தமிழீழத் தமிழர்களுக்கு தனிநாட்டை வழங்கத் தயாராக இல்லை என்பது இன்னுமோர் கள யதார்த்தம்.

தமிழீழத் தமிழர்களின் சர்வதேச நீதிப் பொறிமுறை தழுவிய அரசியல் – இராசதந்திர வழியிலான விடுதலைப் போராட்ட வடிவமானது, உலகில் இன்று நிலவும் இருதுருவ அல்ல பால்துருவ பூகோளப் போட்டி அரசியலில் தனக்கான நட்பு சக்திகளை அடையாளப்படுத்துவதன் மூலம், அதாவது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் நிரந்தர நட்புறவினை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் மூலம் விடுதலையை வெல்ல முடியும் என்பதையே இன்றைய பூகோள அரசியல் நகர்வுகள் உறுதிசெய்து நிற்கின்றது.

இந்தியாவின் ஏனைய மாநிலங்களும், மேற்கு நாடுகளும் தமிழீழம் மற்றும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட பல இலச்சம் தமிழ் உறவுகள் நீண்டகாலமாகவும், நிரந்தரமாகவும் வாழும் உறவுதேசங்களாக உள்ளமை என்பது தமிழீழத் தமிழர்களின் பிரிக்க முடியாத மிகப்பெரிய உறவுப் பலமாக அமையப்பெற்றுள்ளது. இது இந்தியா மற்றும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை மையமாகக் கொண்ட மேற்கு நாடுகளின் உலக மற்றும் பிராந்திய வல்லாதிக்க நிலைகளைப் பாதுகாக்க உதவுவதுடன், தமிழீழத்தின் இருப்பினைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புக்கூறல் போராட்டத்தினையும் இந்தியா மற்றும் மேற்குநாடுகளை நோக்கி இடைவிடாத அமைதிவழிப் போராட்டங்களாக முன்னெடுத்துத் தமிழீழத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்காகத் தொடர்ந்து போராட முடியும் என்ற கள யதார்த்தத்தையும் ஏற்படுத்தி நிற்கின்றது.

இந்த வரிசையில் இந்திய மத்திய அரசின் நட்புறவு என்பதே மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அது போலவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை மையமாகக் கொண்ட மேற்கு நாடுகளின் நட்புறவும் தமிழீழத் தமிழர்களுக்கு மிக முக்கியமானதே.

இந்தியாவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை மையப்படுத்திய மேற்கு நாடுகளின் கூட்டும் சிங்கள தேசத்தைப் புறந்தள்ளித் தமிழீழத் தமிழர்களை மட்டும் ஆதரிக்காது என்ற கள யதார்த்தத்தையும் தமிழர்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

இலங்கைத்தீவு இந்திய, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாடில் இருப்பதே தமிழீழத் தமிழர்களின் இருப்பிற்கு ஆரோக்கியமானது. தமிழீழம் தனிநாடாகப் பிரியாத இன்றைய சூழலில் இலங்கைத்தீவில் இந்திய எதிர்ப்புணர்வு கொண்ட சீனாவின் கை ஓங்குமானால் குறிப்பிட்ட சில ஆண்டுகளிலேயே தமிழீழத்தின் தனித்தன்மை மிகப்பெரும் சிதைவைச் சந்திக்கும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்திய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை மையப்படுத்திய ஆதரவுத் தளத்தில்த்தான் விடுதைப் போராட்டத்தை முன்னகர்த்தி வருகிறது. சீனா என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை பின்கதவு வழியான ஒரு வியாபார நண்பனே. அதிலும் 2009ம் ஆண்டின் பின் சிங்கள தேசத்தின் காவலனாக நடுநிலை தவறிய மிகப்பெரும் சுயநல நாடாகவே வகிபாகம் செய்கின்றது.

சிங்கப்பூர், மலேசியா, தென் அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் ஆங்காங்கே தமிழர்களுக்கு சீனாவின் நட்புநிலை சிறிதளவு உள்ளது என்பதுடன் இன்று சீனா உலகின் மிகப்பெரும் வல்லாதிக்க சக்தியாக உருவெடுத்து வருகின்றது என்பதும் மற்றுமொரு உலகக் கள நிலவரம்.

இவ் வாறானதொரு கள நிலையில், இந்தியாவும் மேற்கு நாடுகளும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கடந்த எழுபது ஆண்டுகளாக தமது சுயநலனுக்குப் பயன்படுத்திவரும் இச் சூழலில், தமிழர்கள் என்னசெய்வது என்ற குழப்பம் தமிழர்களில் ஒரு சாராரிடம் ஓடுவதை உணரமுடிகிறது. இன்னுமொரு சாரார் சீனாவைப் பயன்படுத்தி இந்தியாவிடமும் மேற்குலகிடமும் பேரம் பேசவேண்டும் என்ற கருத்துநிலை கொண்டுள்ளார் என்பதையும் உணரமுடிகிறது.

இங்கேதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழர்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும். "அரசனை நம்பி புருசனைக் கைவிடுவது" என்ற முதுமொழியினை நினைவில் கொண்டு, சீனாவை நம்பி இந்தியாவைக் கைவிடாமல், இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்ட விடுதலைப் போராட்டமாகவும் பிராந்தியத்தின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட விடுதலைப் போராட்டமாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்தும் வடிவமைத்து, எமது உரிமைக்கான போராட்ட வடிவத்தினைக் கொண்டு நகர்த்துவதே தமிழீழத் தமிழர்களின் இருப்பிற்கும், தமிழீழத் தனியரசின் உருவாக்கத்திற்கும் ஆரோக்கியமானது.

இன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் ஆழுகையிலான உலக ஒழுங்கென்பது "வீற்றோ" அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகள், பிராந்திய வல்லரசுகள், சர்வதேசக் கூட்டுக்கள் மற்றும் பிராந்தியக் கூட்டுக்கள் போன்றவற்றினாலேயே நிர்வகிக்கப் படுகின்றது. இந்த அடிப்படையில் பிருத்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒரு அணியாகவும் சீனா, இரசியா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் "நேற்றோ" என்ற கூட்டைப்போன்ற நெருக்கம் கொண்டதாக இல்லாத போதிலும் காத்திரமான பலம் கொண்ட இன்னோர் அணியாகவே இன்றுவரை விளங்குகின்றது. 

தெற்கு ஆசியப் பிராந்தியத்தின் பிராந்திய வல்லரசாகிய இந்தியா என்பது இரசியாவுடன் நட்பாகவும், சீனாவுடன் உறவும் - முரணும் கொண்ட போட்டி அரசாகவும் திகழ்கின்றது. மறுபுறத்தில் இந்திய மற்றும் மேற்குலக உறவென்பது ஊடலும் – கூடலும் நிறைந்ததாகவே தொடர்கின்றது. எனவே பூட்டானை போன்றதொரு நட்பு நாடக தமிழீழம் உருவாக்கப்படவேண்டுமென இந்தியா விரும்பினால், சர்வதேசத்தில் பல் பரிமாண உறவு கொண்ட இந்தியாவினால் சிங்கள தேசத்தின் ஒரு சாராரின் ஆதரவுத் தளத்துடன் தமிழீழத்தைத் தனிநாடாக்க முடியும் என்பதும் இன்றைய கள யதார்த்தமே.

தமிழீழம் சீனாவுடன் நெருங்க முடியாது இருப்பதற்குக் கரணம் சீனாவின் மீதான எதிர்ப்பு வடிவம் அல்ல என்பதையும், மாறாக இந்தியாவுடனான சீன அணுகுமுறையே என்பதையும். 

அதுபோலவே மேற்குநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் இரசிய எதிர்ப்பு மனோநிலை என்பது இந்தியாவைப் புறம் தள்ளும் ஒத்துழையாமை வடிவம் அல்ல, மாறாக இது மேற்குலகுடனான இரசிய அணுகுமுறையின் வெளிப்பாடே என்பதையும் எடுத்துரைத்தல்வேண்டும்.

இங்கே தான் தமிழீழத் தமிழர்களின் வெளிவிகார நிலைப்பாடென்பது தெளிவான முறையில் வரையறுக்கப்படவேண்டியுள்ளது. அந்தவகையில் தமிழீழத்தில் வாழும் தமிழர்களின் நிலைப்பாடு இந்தியாவை அடியொற்றியதாக அல்லது அதனை ஆரத்தழுவியதாக இருக்கின்றபோதிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தமிழர்கள் முதலில் தாம்வாழும் நாட்டிற்கு கடமைப்பட்டவர்களாகவும் அதன்பின்னர் தமது வேர்நாடகிய தமிழீழத்தின் மீதும் - அதனைத் தாங்கும் தேசமாகிய தமிழ்நாடு மற்றும் அதன் நீட்சியாகிய இந்தியாவின் மீதும் எப்போதுமே பற்றுதி கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதையும், அதே சமயம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற மகத்துவமான சிந்தனையின் வழித்தோன்றல்களாக உலக சமத்துவம் பேணும் மனிதக் குழுமம் என்பதையும் வெளிப்படுத்தி நிற்றல்வேண்டும்.

இந்த அடிப்படையில் உலகை ஐந்து வலையங்களாக பிரித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாக வகைப்படுத்தல் முறைமைக்கு அமைய ஆசிய நாடுகளின் கூட்டு வகைப்படுத்தலுக்கு உட்பட்ட ஒரு வலையமாகத் திகழும் தெற்கு ஆசியாவில் இந்தியாவின் நட்பை முதன்மையாகவும் அந்த உறவின் அடித்தளத்தில் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு முன்னுரிமைவழங்கி இப்பிரதேச நாடுகளுடன் நெருங்கிய நட்புறவுகொண்டுநிற்பதுடன், மேற்கு ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகள் என்ற வகைப்படுத்தலுக்கு உட்பட்ட நாடுகளுடன் பெருமளவான நட்பினைப் பேணும் அதே வேளை கரீபியன் தீவுகளை உள்ளடக்கிய லத்தீன் அமெரிக்க கூட்டு நாடுகளுடனும், ஆபிரிக்கப் பிரதேசக் கூட்டு நாடுகளுடனும், கிழக்கு ஐரோப்பிய வகைப்படுத்தல் கூட்டு நாடுகளுடனும், ஏனைய ஆசிய நாடுகளின் வகைப்படுத்தலுக்கு உட்பட்டிருக்கும் மேற்கு ஆசிய நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், பசுபிக் பிராந்திய நாடுகள் என உலகின் ஏனைய அனைத்து நாடுகளுடனும் தமிழீழம் உரியமுறையில் உளப்பூர்வமான நேர்மையும், கண்ணியமும் நிறைந்த நல்லுறவைப் பேணிக்கொளுதல் வேண்டும்.

இந்த அடிப்படையில் தெளிவான வரையறைகளை உருவாக்கி, உறுதியான வெளிப்படைத்தன்மை கொண்ட இந்திய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை மையமாகக் கொண்ட மேற்கு நாடுகளின் நட்புறவென்பது சிறிய இனமாகிய தமிழீழத் தமிழரின் உறவுப் பரவலின் இருப்பியல் வெளிப்பாடே என்பதையும் உலக - பிராந்திய சக்திகளுக்கும் - ஏனைய உலக நாடுகளுக்கும் ஆரோக்கியமான உறவுச் செயல்நெறிகளின் ஊடே வெளிக்காட்டி நிற்பதும் அதன்வழி அனைத்து உலகநாடுகளுடனும் உறவை வலுப்படுத்திக் கொள்வதும், இவ் உலகில் தமிழீழம் நிலைத்து வாழவும், அதன் வழி இந்தியா மற்றும் இந்திய உபகண்ட விழுமியங்களைப் பாதுகாக்கவும், அதன் நீட்சியாக மானிட மகத்துவம் கொண்ட இவ் உலகில் அனைவரும் சமத்துவம் பேணியவாறே – அமைதியும், சமாதானமும் நிலைபெற்று வாழவும் வழிவகுக்கும்.

தொடரும்...