லண்டன் செல்லும் முயற்சியில் மீண்டும் தோல்வியடைந்த  ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்!

லண்டன் செல்லும் முயற்சியில் மீண்டும் தோல்வியடைந்த  ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்!

ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற இஸ்லாமிய அரசு தீவிரவாத வலையமைப்பில் சேர்வதற்காக 15 வயது பாடசாலை மாணவியாக இருந்த போது இங்கிலாந்தை விட்டு வெளியேறிய லண்டனில் பிறந்த பங்காளதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட சமிமா பேகம், தனது பிரித்தானிய குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கான மற்றொரு சட்ட முயற்சியிலும் தோல்வியடைந்தார்.

நேற்று (23) வழங்கப்பட்ட தீர்ப்பின்படி தற்போது 24 வயதான சமீமா பேகம் தொடர்ந்தும் சிரியாவிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2019ல் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது குடியுரிமையை பிரித்தானிய அரசாங்கம் பறித்தது.

சமீமா பேகம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் 15 வயதில் லண்டனை விட்டு சிரியாவுக்குச் சென்று இஸ்லாமிய அரசு குழுவான ஐ.எஸ் ஐ எஸ் அமைப்பில் இணைந்தார்.

இந்தநிலையில் நேற்று மூன்று மேல்முறையீட்டு நீதியரசர்களின் தீர்ப்பும் ஒருமனதாக இருந்தது.

எனினும், மீண்டும் சமீமா பேகம் பிரித்தானிய உயர்நீதிமன்றில் இந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வாதியின் சட்டத்தரணியான டேனியல் ஃபர்னர், "பேகத்துக்கு நீதி கிடைக்கும் வரை,  பாதுகாப்பாக அவர் லண்டன் திரும்பும் வரை சட்டப்போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.

இருப்பினும் நீதியரசர்கள், பேகத்தின் அனைத்து வாதங்களையும் முற்றிலுமாக நிராகரித்தமையானது, உயர்நீதிமன்றில் முழு முறையீட்டைப் பெறுவதற்கான அவரது திறனைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒரு விசாரணையில் தோல்வி ஏற்பட்டதை அடுத்தே பேகத்தின் சட்டத்தரணிகள், மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடினர்.

அவரது குடியுரிமையை அகற்றுவதற்கான உள்துறை அலுவலகத்தின் முடிவு சட்டவிரோதமானது என்று அவர்கள் வாதிட்டனர்.

இந்தநிலையில் நேற்றைய தீர்ப்பு, பிரித்தானிய அரசாங்கத்திற்கு கணிசமான வெற்றியைப் பிரதிபலிக்கிறது மற்றும் சாத்தியமான சட்ட நெருக்கடியைத் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் முடிவிற்கு பதிலளித்த பிரித்தானிய உள்துறை அலுவலகம், இங்கிலாந்தின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதே தமது முதற்கட்ட பணி என்றும் கூறியுள்ளது.