சர்வதேச விமானத்தளமாகிய அநுராதபுர விமான நிலையம்

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இராமேஸ்வரம் நோக்கிப் பயணிப்பதற்காக அநுராதபுரம் விமான நிலையம் ஒரு நாளைக்கு மாத்திரம் சர்வதேச விமான நிலையமாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவருடன் வருகை தந்திருந்த குழுவினருக்கு அவசியமான வெளியேறுதல் வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக இவ்வாறு அநுராதபுரம் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு கடந்த 04ஆம் திகதி இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு மேலதிகமாக இரத்மலானை, மத்தள, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள விமான நிலையங்களே ஏனைய சர்வதேச விமான நிலையங்களாகும். பெயர் குறிப்பிடப்பட்ட விமான நிலையங்களில் மாத்திரமே சர்வதேச விமானப் போக்குவரத்தை முன்னெடுக்க முடியுமென்பதால், அநுராதபுரம் விமான நிலையம் இவ்வாறு சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அநுராதபுரம் விமான நிலையம் ஒரு நாளைக்கு மாத்திரம் (06 ஆம் திகதிக்கு மாத்திரம்) சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சாகர கொடகதெனிய தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் விமான நிலையம் சர்வதேச விமானப் போக்குவரத்தை முன்னெடுக்கும் வசதிகள் கொண்ட விமான நிலையமல்ல என்பதுடன் பெரும் எண்ணிக்கையிலான விமானங்களைத் தரித்து வைப்பதற்குரிய வசதிகள் இந்த விமான நிலையத்தில் இல்லையென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியப் பிரதமர் மற்றும் அவருடன் வருகை தந்திருந்த குழுவினர் இந்த விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கான அனுமதியை வழங்குவதற்காக மாத்திரம் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் ஆலோசனையுடனேயே இந்த வர்த்தமானியை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட குழுவினர் அநுராதபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டிருந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (06) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.