அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மற்றும் இணைய வசதிகளின்றி பெருமுடக்கம்!
அவுஸ்திரேலியாவில் அதிகளவான வாடிக்கையாளர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமொன்று செயலிழந்தமை காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் தொலைபேசி மற்றும் இணைய சேவை வசதிகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் 10 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்களையும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வணிக நிறுவனங்களையும் வாடிக்கையாளர்களாக கொண்ட நாட்டின் இரண்டாவது பெரிய தொலைதொடர்பு சேவை வழங்குநர் நிறுவனமொன்றின் சேவைகளே பாதிக்கப்பட்டுள்ளன.
தொலைதொடர்பு சேவை செயலிழப்பால் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், மருத்துவமனை சேவைகள், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கட்டணம் செலுத்தும் முறைகளும் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நாடு முழுவதும் உள்ள மக்கள் அவசர சேவைகளை நாடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், விக்டோரியா மாநிலத்தில் ரயில் சேவைகளும் தற்காலிகமாக முடங்கியுள்ளன.
இதனிடையே, சைபர் இணைய ஊடுருவல் நிகழ்ந்தமைக்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், செயலிழப்புக்கான தெளிவான காரணம் தெரியவரவில்லையெனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 7 மணித்தியாலங்களை தாண்டி, தொடர்ந்தும் தொலைதொடர்பு சேவைகள் முடங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.