பெண் வைத்தியர் மீதான பாலியல் வன்புணர்வு; சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் கைது!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் சகோதரி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, 37 வயதுடைய பெண்ணும், 27 வயதுடைய ஆணும் நேற்றிரவு இரவு கல்னேவவின் நிதிகும்பயாய பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேக நபரான கல்னேவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர், இன்று (13) அனுராதபுரம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கல்னேவ பொலிஸாரும் அனுராதபுரம் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, கல்னேவ காட்டுப் பகுதியில் மறைந்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தாக்குதலின் போது பெண் மருத்துவரை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தை பொலிஸார் மீட்டனர்.
சந்தேக நபர் தற்போது அனுராதபுரம் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.