தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேசவில்லை - உலக தமிழர் பேரவை

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் தாம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுவதை உலக தமிழர் பேரவை மறுத்துள்ளது.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேசவில்லை - உலக தமிழர் பேரவை

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள உலக தமிழர் பேரவை, களத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களே உரிய நேரத்தில் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மத மற்றும் இனக்குழுக்களுக்கு இடையில் கூடுதலான புரிதலை வளர்ப்பதே தமது நோக்கமாகும்.

இது, தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காணும் பேச்சுவார்த்தையின் போது அதில் பங்கேற்பவர்களுக்கு உதவியளிக்கும்.

அத்துடன் அதன் முடிவைக் குழப்புவதற்கும், அனைவருக்கும் சிறந்த இலங்கை என்ற தமது பார்வைக்கு குறைவான எதிர்ப்பே இருக்கும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு என்றும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெவ்வேறு பௌத்த பீடங்களின் மூத்த பௌத்த பிக்குகள் மற்றும் உலக தமிழர் பேரவை ஆகியவற்றின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு 'தூதுக்குழு டிசம்பர் 7 முதல் 15, 2023 வரை இலங்கையில் பல்வேறு சந்திப்புகளை நடத்தியது. 

இது 2023 ஏப்ரலில் நேபாளம் நாகர்கோட்டில் இடம்பெற்ற பலனளிக்கும் உரையாடலின் தொடர்ச்சியாக அமைந்தது.

இதன் அடிப்படையிலேயே இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கிடையில் ஈடுபாடு மற்றும் முயற்சிகளை எளிதாக்குவதற்காக இரண்டு தரப்பினரும் ஹிமாலய பிரகடனத்துக்கு உடன்பட்டனர்

இது தொடர்பான தேசிய உரையாடல் உத்தியோகபூர்வமாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு பல மத, அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களிடம், பிரகடனம் கையளிக்கப்பட்டதுடன், கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன.

சமயங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிக்கு அடிப்படையானது.

எனவேதான் இந்த ஈடுபாடுகள் முதன்மையாக மதத் தலைவர்களை மையமாகக் கொண்டிருந்தன 

இதனடிப்படையில் நான்கு பௌத்த பிரிவுகளின் மகாநாயக்க தேரர்கள், நல்லை ஆதீனம், கொழும்பு பேராயர், தேசிய கிறிஸ்தவ பேரவை மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

அத்துடன் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச உட்பட அனைத்து தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மலையக தமிழ் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஆகியோரை இந்த பிரதிநிதிகள் குழு சந்தித்தது. 

பெரும்பான்மை சமூகத்தினரிடையே கணிசமான ஆதரவுத் தளத்தைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்சவை இந்தக்குழு சந்தித்தது.

மேலும் அவரது ஆதரவுத் தளம் பௌத்த விகாரைகளின் உதவியுடன் கட்டப்பட்டது என்பதாலும் அவருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த ஒரு வார காலப்பகுதியில் மூன்று மொழிகளிலும் ஊடகங்களின் செய்திகள் விதிவிலக்காக இருந்தன. 

இந்தநிலையிலும் கலந்துரையாடல்கள் ஒவ்வொன்றின் போதும், குழுவினர் பெற்ற ஆதரவு, ஊக்கம் மற்றும் ஆசீர்வாதங்கள் ஊக்கமளிப்பதாகவும், எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தன.

எந்தவொரு வெளி அரசியல் பங்குதாரர்கள் அல்லது நாடுகளின் ஈடுபாடு இல்லாமல் SBSL என்ற சிறந்த இலங்கைக்கான சங்கம் மற்றும் உலக தமிழர் பேரவை ஆகிய இரண்டு குழுக்களுக்கு இடையேயான பிரத்தியேகமான முயற்சி இதுவாகும் என்று தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

பல தசாப்தங்களாக அவர்களைப் பீடித்துள்ள சந்தேகங்களையும் அச்சங்களையும் நீக்கி அனைத்து சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக தேசிய உரையாடலை ஆரம்பிப்பதே இதன் நோக்கமாகும். 

உதாரணமாக, தமிழர்களின் கண்ணோட்டத்தில், அரசியல் தீர்வுக்கான எந்தவொரு முயற்சியையும் பௌத்த பிக்குகள் எப்போதும் முறியடித்தனர், 

அதே சமயம் பெரும்பான்மை சமூகம் சமீப காலங்களில் செல்வாக்குமிக்க தமிழ் புலம்பெயர்ந்தோர் நாட்டை அழிப்பதிலும் அதன் முன்னேற்றத்தைத் தடுப்பதிலும் முனைந்திருப்பதாக நினைத்தனர்

எனவே, இரண்டு 'வெளிப்படையான எதிரிகள்' இடையே ஒரு உரையாடல் தர்க்கரீதியானதாகத் தோன்றியது என்று உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

75 ஆண்டுகால அவநம்பிக்கையை 7 நாட்களில் மாற்றிவிட முடியாது

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிர அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு, இந்த நிலைமைகள் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. 

எனவே சமரசம் மற்றும் தேசிய உரையாடல் ஆர்வத்துடன் தொடங்குவதற்கான புதிய வாய்ப்புகளை தாம் உறுதியாக நம்புவதாக பேரவை குறிப்பிட்டுள்ளது.

ஹிமாலய பிரகடனம் என்பது சிறந்த இலங்கைக்கான சங்கம் மற்றும் உலக தமிழர் பேரவை ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கட்டமைப்பு ஒப்பந்தமாகும்.

இது, தேசிய உரையாடலுக்கு ஒரு பயனுள்ள தொடக்க புள்ளியாக இருக்கும்.

பன்மைத்துவம், அதிகாரப் பகிர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் இந்த பிரகடனம் பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து முக்கிய பங்குதாரர்களிடமிருந்தும் ஒப்புதலையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுள்ளது. 

இவை உண்மையிலேயே குறிப்பிடத்தக்க விளைவுகளாகும், அவை நாட்டை சிறந்ததாக மாற்றும் என்றும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழ் குழுக்கள்,இந்த முயற்சியை இலக்காகக் கொண்ட சில விமர்சனங்களை வெளியிடப்பட்டுள்ளன.

இந்தக் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்பது தமது தாழ்மையான பார்வையாகும் என்று தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவது மிகவும் ஊக்கமளிக்கிறது. 

இந்தநிலையில், அனைத்துக் கருத்துக்களையும் செவிமடுத்து உண்மையிலேயே தொடங்கியுள்ள தேசிய உரையாடலை வடிவமைப்பதும் முக்கியமான அம்சமாக அமைந்துள்ளது. 

மூத்த பௌத்த பிக்குகள் மற்றும் உலக தமிழர் பேரவை ஆகிய இரண்டு தரப்புக்களும், ஒரு குறிப்பிட்ட தீர்வு அல்லது முடிவை பரிந்துரைப்பதை விட, ஒரு நல்ல மற்றும் நீடித்த முடிவை எளிதாக்குவதற்கான தேசிய உரையாடலை ஊக்குவிப்பதில் மட்டுமே தெளிவாக உள்ளன.

தமிழ் சமூகத்தில் உள்ள சிலரால் இது குறி;த்து தவறான புரிதல்கள் வெளிப்படும் சூழலில், இது, அரசியல் தீர்விற்காக அரசாங்கத்துடனோ அல்லது நாட்டின் ஏனைய தலைவர்களுடனோ பேச்சுவார்த்தை நடத்தும் நடவடிக்கையல்ல என்பதை தெளிவாகக் கூற விரும்புவதாக உலக தமிழர் பேரவை தெளிவுப்படுத்தியுள்ளது.

களத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களே உரிய நேரத்தில் அந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உலக தமிழர் பேரவை தமது அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.