இந்தியா -  இலங்கை இடையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள கப்பல் சேவை!

இந்தியா -  இலங்கை இடையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள கப்பல் சேவை!

இந்தியாவின் (India) நாகப்பட்டினம் மற்றும்  இலங்கையின் (Sri Lanka) காங்கேசன்துறைக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவை இந்த மாதம் 13ஆம் திகதி மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

குறித்த அறிவிப்பை இந்திய உயர்ஸ்தானிகரகம் நேற்று (05.04.2024) வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து 'IndSri Ferry Services' என்ற தனியார் இயக்குனாரால் இந்த படகுச் சேவை இயக்கப்படவுள்ளது.

இந்த சேவையை, மலிவு விலையில் வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் இதர கட்டணங்களுக்கான செலவை 1 வருட காலத்திற்கு மாதம் ஒன்றுக்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல், ஏற்க முடிவு செய்துள்ளது.

அதேபோன்று, இலங்கையிலிருந்து பயணிகள் கப்பல்கள் மூலம் வெளியேறும் பயணிகளிடம் தற்போது அறவிடப்படும் விலகல் வரியை இலங்கை அரசாங்கம் குறைத்துள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 63.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை,  இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளதாகவும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இது,  இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான  இலங்கையின் பயணத்திற்கு ஏற்ப உள்ளது.

இந்நிலையில், எதிர்காலத்தில், இலங்கையுடனான மின்சார இணைப்பு, இருவழி பல்நோக்கு குழாய் மற்றும் நில இணைப்பு பொருளாதார வழித்தடத்தை அமைப்பதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் மேம்படுத்தப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.