அத்துமீறிய 19 மீனவர்களை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை கடற்பரப்பில் நுழைந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கானது ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று (27) இடம்பெற்றது.
இந்திய மீனவர்களை 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை அடிப்படையில் நிபந்தனைகளுடன் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் கைப்பற்றப்பட்ட விசைப் படகுகளை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டதாக நீரியல் வள திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெ.சுதாகரன் தெரிவித்தார்.
அத்துமீறிய 19 மீனவர்களும் அவர்களின் 3 படகுகளும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.