சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை இன்று நாடாளுமன்றத்திற்கு!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை இன்றைய தினம் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதன் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரும் இந்த அவநம்பிக்கை பிரேரணைக்கு, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சுதந்திர மக்கள் சபை, உத்தர லங்கா சபாகய, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்ச உள்ளிட்டவை ஆதரவளிக்கவுள்ளன.
அதேநேரம், இன்றைய தினம் குறித்த பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதியை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்திருந்தது.
எனினும், அதனை கருத்திற்கொள்ளாது குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதுடன், அதனை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியிருந்தார்.
இதனூடாக அரசியமைப்பை அவர் மீறியுள்ளதாக தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையை கொண்டு வருகின்றது.