5 வருடங்களுக்குள் வட மாகாணத்தில் முழு அபிவிருத்தி - கறுப்புக் கொடி காட்டிய காணாமலாக்கப்பட்டோர் உறவுகள்!

ஒரே திட்டத்தின் கீழ் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் வட மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

5 வருடங்களுக்குள் வட மாகாணத்தில் முழு அபிவிருத்தி - கறுப்புக் கொடி காட்டிய காணாமலாக்கப்பட்டோர் உறவுகள்!

வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்துக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம் நாட்டின் பொருளாதார இயந்திரமாக விளங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களையும் அதனுடன் இணைத்துக்கொண்டு 5 பிரதான இயந்திரங்களுடன் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் கல்வி, சுகாதாரம், காணி, மின்சாரம், குடிநீர், சுற்றுலா, வனவள பாதுகாப்பு, மற்றும் மீன்பிடித்துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் என்பன தொடர்பில் ஜனாதிபதி இதன்போது கருத்துரைத்துள்ளார்.

அத்துடன், கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகியன நாட்டின் பிரதான கல்வி கேந்திர நிலையங்களாக மாற்றப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று வவுனியாவிற்கு சென்றிருந்த நிலையில் அவரை சந்திக்கும் நோக்கில் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவியும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது கைது செய்யப்பட்ட மற்றுமொருவர் தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை என காவல்துறையினரிடம் தெரிவித்தமையை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதியின் வாகன தொடரணியை படமெடுத்த 18 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.