அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!

உக்ரேனில் கனிம வளங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஆரம்ப படியாக, கெய்வ் மற்றும் வொஷிங்டன் வியாழக்கிழமை (17) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.
இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.
இயற்கை வளங்கள் தொடர்பான ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாடுகளும் கடந்த பெப்ரவரியில் தயாராக இருந்தபோதிலும், ட்ரம்பிற்கும் உக்ரேனிய தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான ஓவல் அலுவலக சந்திப்பு குழப்பமாக மாறியதால் அது தாமதமானது.
இந்த நிலையில் குறித்த ஒப்பந்தம் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள உக்ரேனின் முதல் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்வைரிடென்கோ,
எங்கள் அமெரிக்க கூட்டாளிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்திடுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்ட உள்நோக்க ஒப்பந்தம் ஒரு பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தமாகும்.
இது உக்ரேனின் மறுகட்டமைப்புக்கான முதலீட்டு நிதியை அமைப்பதற்கும் வழி வகுக்கிறது – என்றார்.
2022 இல் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்திய ரஷ்யாவுடனான போரில் உக்ரேனுக்கு அமெரிக்க ஆதரவு தேவை என்பதை அங்கீகரித்த பின்னர் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.