தமிழ்த்தேசியத்தை அழிப்பதற்காக சமத்துவம் என்று கூறும் அநுரகுமாரவின் சிங்கள இனமயமாக்கல் கோட்பாடு மு. திருநாவுக்கரசு.-

தமிழ்த்தேசியத்தை அழிப்பதற்காக சமத்துவம் என்று கூறும் அநுரகுமாரவின் சிங்கள இனமயமாக்கல் கோட்பாடு  மு. திருநாவுக்கரசு.-

தேசிய பாதுகாப்பும் தேசிய பந்தோபஸ்தும்: இதுதான் அமெரிக்காவினது முதற்தரக் கொள்கை; இதுதான் ரஷ்யாவினதும் முதற்தரக் கொள்கை; இதுதான் சீனாவினதும் முதற்தரக் கொள்கை; இதுதான் இந்தியாவினதும் முதற்தரக் கொள்கை; ஒடுக்கும் இனங்களின் முதற்தரக் கொள்கையும் இதுதான்.

ஆனால் ஒடுக்கப்படும் இனங்கள் தமக்கான தேசிய பாதுகாப்புப் பற்றி பேசினால் அதை இனவாதம், பிரிவினைவாதம் என்கிறார்கள்.

ஒடுக்கும் இனங்களின் தேசிய பாதுகாப்புக்குப் பொருள் தேசிய ஒருமைப்பாடும் தேசிய ஐக்கியமும்.

ஒடுக்கப்படும் இனங்கள் தமக்கான பாதுகாப்பைப் பற்றிப் பேசினால் அதனை தீட்டாய், துடக்காய், இனவாதமாய், பிரிவினைவாதமாய் இழிவுபடுத்தி மிதித்து விடுகிறார்கள்.

அனைவருக்கும் சம உரிமை என்று இன்றைய இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க சர்வ சமரசவாதம் பேசுகிறார். இவர் பேசுவது வெறும் தனிமனித உரிமை (Individual Rights) பற்றியதே தவிர தமிழ் மக்களின் தேசிய கூட்டுரிமையை (Collective Rights) அல்ல. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற வகையில் அவர்களது தேசிய கூட்டுரிமை தலையாயது. கூட்டுரிமை இல்லை என்றால், தேசிய இனம் இல்லை. தேசிய இனத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றால், கூட்டரிமை இல்லை. ஆதலால் தமிழ் மக்களின் தேசிய கூட்டுரிமை பற்றியும் தமிழ் தேசிய பாதுகாப்புப் பற்றியும் பேசுவதிலும், அதற்கான அரசியல் தீர்வு பற்றி பேசுவதிலும் இருந்துதான் அனைவருக்கும் சமத்துவம், அனைத்து இனங்களுக்குமான சமரசம் என்பது பற்றி பேசமுடியும்.
தற்போது அனுரகுமார பேசிவரும், 'அனைவருக்கும் சமத்துவம் அனைவருக்கும் சம சந்தர்ப்பம்' என்பது சின்ன மீன்களை விழுங்கும் பெரிய மீன் தத்துவமாகும். "மீனை மீன் விழுங்கலாம்" என்று பெரிய மீன் அனைத்து மீன்களுக்கும் முன்னால் ஒரு சமத்துவ சட்டத்தை பிறப்பித்தது. அப்பாவிச் சின்ன மீன்கள் இதனைக் கண்டு கைதட்டி கரகோஷம் செய்தன. அதன் பின் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது சின்ன மீன்களை பெரிய மீன்கள் விழுங்கின; சின்ன மீன்கள் இரையாகின; பெரிய மீன்கள் ஏப்பமிட்டு மகிழ்ந்தன.

அனுரகுமார திசநாயக்க கூறும் சமத்துவம், சமஉரிமை என்பது அளவால் சிறிய தேசிய சிறுபான்மை இனங்களை, அளவால் பெரிய சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு இரையாக்கும் கட்டமைக்கப்பட்ட தத்துவார்த்தரீதியான இனப்படுகொலையாகும். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையில் தத்துவார்த்தரீதியான கட்டமைப்பும் ஒன்றாகும்.

இலங்கையில் ஒற்றையாட்சி முறை என்பது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வாதமாகும். அனுரகுமார கூறும் அவரது 'System Change கொள்கையில் ஒற்றை ஆட்சியை மாற்றுவது என்பது கிடையாது; ஒற்றை ஆட்சியை பொருளாதார மத்தியத்துவத்தின் கீழ் மேலும் பலப்படுத்துவதே அவரது அரசியல் பொருளாதார கொள்கை.

அவர் கூறும் பொருளாதார வளர்ச்சிக் கோட்பாடு என்பது, கட்டமைக்கப்பட்ட பொருளாதார இனப்படுகொலையே தவிர வேறில்லை. சிங்களப் பொருளாதார அபிவிருத்தி என்பது, மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே வீதிகள், பெருந் தெருக்கள், சூப்பர் தொடர்வண்டிப் பாதைகள் என்பவற்றை அமைப்பதல்ல; மாறாக தமிழ்ப் பிரதேசங்களை கொழும்புடனும் ஏனைய சிங்கள பகுதிகளுடனும் போக்குவரத்துக்களாலும் பொருளாதார ஆதிக்கத்தாலும் இணைத்து கரைத்துவிடுவது; தமிழ்த் தேசிய இனத்தை புவியியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், பௌத்த சிங்கள பண்பாட்டுமயமாக்கினாலும் இணைத்து, கரைத்து உருக்கித் தமிழ் தேசிய தனித்துவத்தை அடியோடு அழித்து விடுவது என்பதாகும்.

யுத்தத்தின் பின்னான மஹிந்த ராஜபக்ஷாவின் ஆட்சிக் காலத்தில், இனப்

பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்றும், அப்படி கூறப்படும் பிரச்சனைக்கு

தீர்வாக அவர் பொருளாதார அபிவிருத்தி வாதத்தை

முன்வைத்தார். கோத்தபாயா ராஜபக்ஷாவின் ஆட்சிக் காலத்தில்

பொருளாதார அபிவிருத்தி வாதத்தை மேலும் அழுத்தமாக்கி "விஜத்மக"

என்ற சிந்தனை குழாத்திற்கூடாக முன்னிலைப்படுத்தினார். மேற்படி

முதலாம் ராஜபக்ஷ, இரண்டாம் ராஜபக்ஷ காலத்தில் பொருளாதாரஅபிவிருத்தி வாதம் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான ஒரு மார்க்கமாய் முன்வைக்கப்பட்டது. தற்போது அவர்களின் வழியில் அனுரகுமார மேலும் உறுதியுடனும் கவர்ச்சிகரமாகவும் கட்டமைக்கப்பட்ட பொருளாதார இனப்படுகொலை வாதத்தை முன்வைக்கின்றார்.

தேசிய சுயநிர்ணய உரிமை என்பது அரசியல்ரீதியாக குறித்த தேசிய இனம் தமக்கான அரசியல் அதிகாரத்துடன் தமக்கான பொருளாதாரத்தை முன்னெடுப்பதாகும். தமிழ் மக்கள் கோரி நிப்பது தமக்கான பொருளாதார வளர்ச்சியை தாமே நிர்ணைப்பதற்கான அரசியல் அதிகாரத்தையே. சிங்கள அரசு கூறும் பொருளாதார அபிவிருத்தி என்பது, தமிழ் தேசிய இனத்தை பொருளாதார ரீதியாக அழித்து ஒழிப்பதற்கான சிங்கள இனத்துடன் கரைத்து விடுவதற்கான பொருளாதார இனப்படுகொலையாகும்.

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையில் பல வகைப்பட்ட அம்சங்கள் உள்ளன. இரத்தம் தோய்ந்த இனப்படுகொலை, அரசியல் யாப்பு அல்லது சட்ட இனப்படுகொலை, நிர்வாகக் கட்டமைப்பு இனப்படுகொலை, கருத்தியல் இனப்படுகொலை, தகவல் ஏகாதிபத்திய இனப்படுகொலை, பொருளாதார இனப்படுகொலை எனப் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இவற்றில் பொருளாதார இனப்படுகொலை என்பது தோல் இருக்க சுளை பிடுங்குவது போன்ற அடிப்படை அழிவை ஏற்படுத்த வல்லதாகும்.

எல்லாவற்றிற்கும் அரசியல் ஆதிக்கமே தலையாயது. பரந்த முழு அளவிலான பூமியையும் கடந்து மனித வாழ்வில் அனைத்துமே அரசியலுக்கு கீழ்பட்டவை. மனித வாழ்வுக்கு அப்பால் உயிரியல் வாழ்வில் முட்டைக்குள் இருந்து வெடித்து வெளியே வரும் குட்டிப் பாம்பும் தலை எடுத்தவுடன் அது முதலில் தன் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்கிறது.

ஈழத் தமிழன் ஒரு தேசிய இனமாக வாழ அவனுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். தனது மண்ணையும் கடலையும், தனக்குரிய குறித்த தேசிய பண்பாட்டியல்புகளையும், தனக்கான அகப்புற வாழ்வையும், தனக்குரிய தேசிய பொருளாதாரத்தையும் நிர்ணயிக்க அவனுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அதுவே சுயநிர்ணய உரிமைக்கான அடிப்படையாகும்.

ஜனநாயகம் என்பது தலையெண்ணும் இனநாயகம் அல்ல. எண்ணிக்கை அளவால் பெரிய இனம் இன்னொரு இனத்தின் மீது எண்ணிக்கையின் பேரால் ஆதிக்கம் செலுத்துவது ஆக்கிரமிப்பு, இனஒடுக்குமுறை, இனப்படுகொலை, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்ற வடிவங்களை சார்ந்ததாகும்.
சிங்கள பௌத்த இனம் பேசம் பெரும்பான்மை ஜனநாயகம் என்பது பெரும்பான்மை இனநாயகமாகும். அது தமிழ் மக்களுக்கான தேசிய ஜனநாயகத்திற்கு எதிரானது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எந்தொரு சிங்கள தலைவரும் தமிழின் எதிர்ப்புவாதம், இனவாதம் பேசாத தேர்தல் என்று இப்போது பலரும் கூறத் தலைப்பட்டு உள்ளார்கள். சற்று நிதானமாகவும் ஆழமாகவும் இதனைப் பார்த்தால் உண்மை புரியும்.

தமிழ் மக்களை இராணுவரீதியாக, இனப்படுகொலை நடவடிக்கையின் மூலம் சாம்பல் மேடாக்கிவிட்டு அந்தச் சாம்பல் மேட்டில் மேல் நின்று தமது இன அழிப்பாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திசநாயக்க ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் செய்துள்ள இனஅழிப்பு அரசியலை பாதுகாக்கும் வகையில் அரசியலை முன்னெடுத்தது இனவாதம் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.

அவர்கள் அனைவரும் ஒற்றையாட்சியை தமது தலையாய தத்துவமாகக் கொண்டுள்ளனர். இலங்கையில் அவர்களது ஒற்றையாட்சி தத்துவம் இனவாதம்தான். தமிழ் மக்களின் நலனை பாதுகாக்காத ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் இனவாதம்தான். எல்லோரும் சமன், எல்லா இனங்களும் ஒன்று என்று கூறுவது இனமாகதான். அளவால் பெரிய இனத்தின் ஆதிக்கத்தின் கீழ் அனைத்து இனங்களையும் ஒன்றுகலந்து அழியச் செய்வது, தோலுரிக்க சுழைபுடுங்கும் தெளிவான இனவாதம்தான்.

ஒற்றையாட்சியை மறுப்பதுதான் இனவாதத்திற்கு எதிரான சமாதான வாதமாகும். தமிழ் மக்களுக்கு அவர்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வை ஏற்படுத்துவது தான் இனவாதமற்ற அரசியலாகும். இனப்படுகொலையால் அழித்தொழிக்கப்பட்டவரை பார்த்து அமைதியாக இருங்கள் என்று போதிப்பது தெளிவான இனவாதம்தான்.

ஜே.வி.பி போராளி கதிர்காம அழகுராணி பிரேமாவதி (மனம்பெரி), 1971ஆம் ஆண்டு இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக சிங்கள நீதிமன்றத்தில், இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு தலா 16 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதில் ஒருவர் சிறையில் இறந்த பின்பு, தண்டனை பெற்று விடுதலையான மற்றையவர் 1988 ஆம் ஆண்டு மாத்தறையில் அவரது வீட்டில் வைத்து ஜே.வி.பி-யினால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டார்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தினரால் இசைப்பிரியா பாலியல் வல்லுறவுக்கும், சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்இளம் பெண்ணுக்கான நீதியைப் பற்றியோ, அவசியப்படும் நீதி விசாரணையைப் பற்றியோ பேசாதிப்பது அப்பட்டமான இனவாதம்தான்.

நாம் அதிகம் பேச வேண்டியது இல்லை. முதலாவது துல்லியமான கேள்வி இசைப்பிரியாவின் மீதான பாலியல் வல்லுறவு படுகொலை தொடர்பான சிங்கள இராணுவத்துக்கு எதிராகவும், அதற்குப் பொறுப்பான தகவல்களுக்கு எதிராகவும் இன்றைய அனுரகுமார திசநாயக்காவின் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதியை நீராட்டுமா?

1971ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட ஜே.வி.பி இயக்கம், 1977ஆம் ஆண்டு தடை நீக்கப்பட்டு அதன் தலைவர் ரோகண விஜேவீர உட்பட பல்லாயிரக்கணக்கான ஜே.வி.பி-யினர் விடுதலை செய்யப்பட்டு, பின்னர் ஜனாதிபதி தேர்தலில் ரோகண விஜேவிர போட்டியிட்டார்.

அவ்வாறு ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகளில் ஈடுபட்ட ஜே.வி.பி மீதான தடைகள் நீக்கப்பட்டது போல விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டியது பற்றி ஒரு வார்த்தை தானும் இதுவரை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவோ, அவரது கட்சியினரோ, வேறு சிங்களத் தலைவர்களோ, சிங்கள ஊடகங்களோ, பௌத்த நிறுவனங்களோ மெளனமாய் இருப்பது தெட்டத் தெளிவான இனவாதம்தான்.

பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில். அளவால் சிறிய தேசிய இனங்களுக்கு அதற்குரிய தேசிய பாதுகாப்பு பற்றிப் பேசாமல், அழிக்கப்பட்டோரைப் பார்த்து இலங்கையர் தேசிய ஐக்கியம், நல்லிணக்கம் பற்றிப் பேசுவது இன அழிப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைபே தவிர வேறில்லை.

தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு அவர்களது தேசிய ஒருமைப்பாடும், அவரது

தேசிய ஐக்கியமும், அவர்களுக்கான தமிழ் தேசிய அரசியலிலும்தான். தமிழ்

மக்களின் பாதுகாப்பு கவசம் அவர்களுக்குரிய தமிழ் தேசிய வாதம்தான்.

தமிழ் தேசியவாதத்தால் அவர்கள் தம்மை ஒருங்கிணைத்து கட்டமைத்து அரணமைக்க வேண்டும். தமிழ்த் தேசியவாதமே தமிழ் மக்களுக்கான அரண். தமிழ் மக்கள் உள்நாட்டிலும், அண்டை நாட்டிலும், வெளிநாடுகளிலும் கைவிடப்பட்டவர்களாய் உள்ளனர். அவர்கள் முதலில் தம்மை தேசிய அடிப்படையில் கட்டமைத்து வலுப்படுத்தி உள்நாடு, அண்டை நாடு, வெளிநாடுகள் என்ற பல்வேறு அரசியல் சக்திகளையும் கையாள வேண்டும்.

'உன்னை நீ கைவிட்டுவிட்டால் உன்னை இறைவனாலும் காப்பாற்ற முடியாது' என்ற கூற்றுக்கு இணங்க ஈழத் தமிழ் மக்கள் தம்மை தேசிய அடிப்படையில் பலப்படுத்த வேண்டும். உலகம் முழுவதற்கும் தேசியம் அடிப்படையானது. அது தமிழ் மக்களுக்கும் அவ்வாறே. உலகம் முழுவதற்கும் தேசிய ஜனநாயகம் அடிப்படையானது. அது தமிழ் மக்களுக்கும் அவ்வாறே. நாம் கோருவது உலகப் பொதுமையான தேசிய ஜனநாயகத்தையே தவிர தலை எண்ணும் இனநாயகத்தை அல்ல.

சுயநிர்ணய உரிமையானது, வெளிநாட்டு அரசுகளின் ஆதிக்கத்துக்கு எதிரானது. பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் தலை எண்ணும் பெரிய இனங்களின் இனநாயகர்களுக்கு எதிரானது. தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக உரிமையை ஏற்றுக்கொள்ளாத, அதை மறுதலிக்கின்ற எத்தகைய அழகிய முலாம் பூசப்பட்ட வாதங்களும் இனப்படுகொலை வாதங்களே.

எஜமானுக்கும் நாய்க்கும் இடையில் உள்ள உறவுக்குப் பெயர் நல்லிணக்கம் அல்ல. அது எஜமானியம். சிங்கள ஆட்சியாளர்கள் கூறும் நல்லிணக்கத்துக்கு பெயர் தமிழின அடிமைத்தனம்.

சம சுதந்திரம், சம தன்னாதிக்கம் என்பனவற்றின் அடிப்படையிலான சுயநிர்ணயம் உறவுக்குப் பெயர்தான் நல்லிணக்கம். அவ்வாறு அல்லாமல் எஜமானுக்கு வாலாட்டும், எஜமானுக்கும் நாய்க்கும் இடையிலான உறவுக்குப் பெயர் அடிமை விசுவாசம்.
இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை: வரலாறு, கோட்பாடு, எதார்த்தம், நடைமுறை என்பன சார்ந்து எழுதப்படும் எனது ஒரு நீண்ட கட்டுரை விரைவில் வாசகர்களை வந்தடையக்கூடும்.