தளபதிக்கு ஒரு கதை - 15 ஆண்டுகள் காத்திருக்கும் இயக்குனர்? 2025ல் 69வது படம்
தளபதி விஜய் தனது கலை பயணத்தின் இறுதி கட்டத்தில் பயணித்து வருகின்றார். அக்டோபர் 2025ல் அவருடைய 69வது படம் வெளியாகவுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் பயணித்து வரும் முன்னணி நடிகர் தான் தளபதி விஜய். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மிகப்பெரிய முன்னெடுப்பாக தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார்.
அது மட்டும் அல்லாமல் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இரு திரைப்பட பணிகளை முடித்தவுடன், முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும்.
கலைத்துறைக்கு முழுமையாக ஓய்வு கொடுக்க உள்ளதாகவும் தளபதி விஜய் அறிவித்திருந்தார்.
அதன்படி ஏற்கனவே அவருடைய நடிப்பில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் வெளியாகிய நல்ல வசூல் சாதனை புரிந்த நிலையில், தற்பொழுது தனது 69ஆவது மற்றும் இறுதி திரைப்படத்தை பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க தொடங்கிவிட்டார்.
எதிர்வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த சூழலில் பிரபல நடிகரும், இயக்குனருமான ரவி மரியா, தளபதி விஜய்யுடனான தனது நட்பு குறித்து மனம் திறந்து கருத்து வௌியிட்டுள்ளார்.
கடந்த 2000மாவது ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான "குஷி" திரைப்படத்தின் மூலம் கலை உலகில் தனது பயணத்தை இணை இயக்குனராக தொடங்கியவர் தான் ரவி மரியா.
அதற்கு முன்னதாகவும் சில இயக்குனர்களிடம் இவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த சூழலில் கடந்த 2002ம் ஆண்டு பிரபல நடிகர் ஜீவா, அறிமுகமான "ஆசை ஆசையாய்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ரவி மரியா இயக்குனராக களம் இறங்கினார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு கடந்த 2019 வெளியான மிளகாய் என்கின்ற திரைப்படத்தையும் அவர் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு படங்களை தாண்டி இயக்குனராக அவர் பெரிய அளவில் திரைப்படங்களில் செயல்படவில்லை என்றாலும், கடந்த 24 ஆண்டுகளாக மிகச்சிறந்த நடிகனாக அவர் வலம்வந்து கொண்டிருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வில்லனாக நடித்த ரவி மரியா, கடந்த சில ஆண்டுகளாகவே நகைச்சுவை ததும்பும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சித்ரா லட்சுமணனை சந்தித்து பேசிய அவர் "ஆசை ஆசையாய்" திரைப்படத்திற்கு முன்னதாகவே குஷி திரைப்படம் முடிந்தவுடன், விஜய்க்கு தான் ஒரு கதையை கூறியதாகவும். கட்டாயம் நேரம் கிடைக்கும் பொழுது அந்த படத்தில் தான் நடிப்பதாக விஜய் கூறியதாகவும் ரவி மரியா கூறி இருக்கிறார்.
இருப்பினும் தொடர்ச்சியாக ஏதோ ஒரு வகையில் இந்த படம் தடைப்பட்டு கொண்டே வந்திருக்கிறது. "நான் கடந்த 2014 ஆம் ஆண்டு தளபதி விஜயோடு இணைந்து "ஜில்லா" என்கின்ற திரைப்படத்தில் நடித்தேன்.
அப்போது கூட செட்டில் என்னை பார்த்த உடனே என்னிடம் வந்து, என்ன அண்ணா உருண்டு பிரண்டு ஒரு கதை சொன்னிங்க, அது இன்னும் இருக்கா என்று என்னிடம் கேட்டார்.
உங்களுக்காக தான் தினமும் அந்த கதையை அயன் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் அதற்கான நேரம் அமையும் என்று கூறினேன்" என்றார் ரவி.
ஆனால் சுமார் 25 ஆண்டுகள் கடந்துவிட்டது என்றாலும் கூட இன்றளவும் அந்த திரைப்படத்தை ரவி மரியாவால் எடுக்க முடியவில்லை.
இனியும் அது சாத்தியமாக போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயோடு இணைந்து ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும், அவரை வைத்து என்னால் படம் ஒன்று எடுக்கமுடியாமல் போனது எனக்கு எப்போதுமே ஒரு குறையாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார் ரவி மரியா.