தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அபராதம்?

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு  அபராதம்?

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (13) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், பத்தரமுல்லே சீலரத்ன தேரர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் தேர்தல் செலவு அறிக்கையை செலுத்தவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களின் பட்டியல் தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி மேலதிக நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின்படி, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறினால், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு வேட்பாளர் தனது வாக்குரிமை மற்றும் பதவியையும் இழக்க நேரிடும், மேலும் நீதிமன்றத்துக்கு அபராதமாக ரூ. 100,000 செலுத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.