கனடா தமிழர் தெருவிழாவில் வன்முறை: தென்னிந்திய பாடகரின் இசை நிகழ்ச்சியில் குழப்பம்!
கனடாவில் நடைபெற்ற தெருவிழாவில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் இசை நிகழ்ச்சியிலும் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வன்முறை சம்பவங்கள் நேற்று முன்தினம் (25.08.2024) இடம்பெற்றுள்ளன.
கனடாவின் பிரதான தமிழ் மக்களின் விழாவான 'Tamil Fest' எனும் தமிழர் தெருவிழாவுக்கான எதிர்ப்பின் வெளிப்பாடாகவே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடியத் தமிழர் பேரவை வருடந்தோறும் தமிழர் தெருவிழா எனும் நிகழ்வினை நடத்திவருகின்ற நிலையில், இதன் பத்தாவது வருடமாக இந்த மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கனடாவில் அதிக அளவில் தமிழ் மக்கள் ஒன்றுகூடுகின்ற நிகழ்வாக இது கருதப்படுகின்றது.
இந்த வருடம் கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் இந்த விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என கனடாவில் உள்ள சில தமிழ் அமைப்புகளும் சில செயற்பாட்டாளர்களும் கனடா வாழ் தமிழ் மக்களைக் கோரியிருந்தனர்.
அத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்ககூடாது என வர்த்தகர்களிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து, இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கி இருந்த பிரதான அனுசரணையாளர்கள் நிகழ்சிக்கு முதல் நாள் தமது அனுசரணையை விலக்கிக்கொண்டுள்ளனர்.
அத்துடன், தமிழர் தெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் இசை நிகழ்ச்சியிலும் முட்டை அடிக்கப்பட்டு குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.