சர்ச்சைக்குரிய புலமைப்பரிசில் பரீட்சை குறித்த முக்கிய தீர்மானம்!
வினாத்தாள்கள் வௌியாகி சர்ச்சைக்குள்ளான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தப்போவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என பரீட்சை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள் வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியிலிருந்து 3 வினாக்களை நீக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருந்தது.
எனினும் புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறாதெனவும் மூன்று வினாக்கள் மாத்திரமே வெளிவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், பரீட்சைக்கு முன்னர் 03 கேள்விகள் மாத்திரமே வெளிவந்திருந்தன என்பது அந்த பரீட்சை குழுக்களின் இறுதித் தீர்மானமாகும்.