சீனாவின் நகர்வுக்கு தடையாகியுள்ள இந்தியா - மாலைதீவு உறவு!
மாலைதீவில் சீனாவானது செல்வாக்கு செலுத்துவதை தடுக்கும் இந்தியாவின் திட்டம் தற்போது கைகூடியுள்ளமை சர்வதேச அரசியலில் புதிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
முகமது முய்சு ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், இந்தியா - மாலைதீவு உறவில் பாரிய பதற்றம் நிலவியிருந்தது.
எனினும், மாலைதீவு தற்போது கடன்பிடிக்குள் சிக்கியுள்ள நிலையில், சர்வதேசத்தின் உறவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இதன் ஆரம்பமாகவே மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் புதுடெல்லி விமான நிலையத்தை இன்று வந்தடைந்த அவர், எதிர்வரும் 10ஆம் திகதிவரை பல்வேறு கலந்துரையாடல் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.
முகமது முய்சு ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.
இந்நிலையில், மாலைதீவு ஜனாதிபதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலில் சந்தித்த்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடியைச் சந்தித்து இந்தியா-மாலைதீவு இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலைதீவு ஜனாதிபதியின் இந்திய வருகை இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச தர முகமை நிறுவனமான மூடிஸ், மாலைதீவின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியில், “மாலைதீவு தனது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போவதற்கான அபாயங்கள் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளதாக” மூடிஸ்குறிப்பிட்டது.
இந்த கருத்துக்கள் மாலைதீவின் பொருளாதாரத்திற்கு பின்னடைவாக கருதப்பட்டதினால் இந்தியாவின் உதவி அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க உதவும் என கருத்துக்கள் வெளிவந்திருந்தன.
மாலைதீவின் முந்தைய ஜனாதிபதிகள் தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்னர், முதலில் இந்தியாவிற்கு விஜயம் செய்வதே வழமை. ஆனால் முகமது முய்சு சீனாவை தளமாக கொண்டே தனது நகர்வுகளை முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில், பொருளாதார சிக்கலில் விழுந்துள்ள மாலைதீவை சீரமைக்க முய்சு இந்தியாவை நாடியுள்ளார்.
இதன்படி மானிய உதவி மற்றும் கடனை திருப்பிச் செலுத்துதலில் மறுசீரமைப்பு ஆகியவை, முய்சு வருகையின் முன்னுரிமையாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த ஓகஸ்ட் மாதம், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மாலைதீவுக்கு விஜயம் செய்திருந்தார்.
இந்த விஜயமானது இருதரப்பு உறவுகளுக்கு ஒரு மறுதொடக்கத்தை அளித்தது என இந்தியாவால் சுட்டிக்காட்டப்பட்டது.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை எனும் இந்தியாவின் கொள்கையின் மையமாக மாலத்தீவு இருப்பதாக அந்நாட்டு தலைநகர் மாலேயில் ஜெய்சங்கர் கருத்துரைத்திருந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தியாவை பொறுத்தவரை, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, அண்டை நாடுகளில், மாலத்தீவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறியிருந்தார்.
பங்களாதேஷில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்திய நட்பு அரசாங்கம் அகற்றப்பட்டது.
தொடர்ந்து, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான நேபாளத்தில் இந்தியாவின் கொள்கைகளை விமர்சித்து வந்த கேபி சர்மா தற்போது சாதகமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
இவ்வாறான பின்னணியில் மாலைதீவு ஜனாதிபதி இந்தியா வருவது இந்திய அரசுக்கு சாதகமான மாற்றம் என நம்பப்படுகிறது.