*தெளிவான பாதையை தெரிவு செய்ய முடியாத தலைமைகளால் வெற்றியை நோக்கி செயல் ஆற்ற முடியாது*
*எமது போராட்ட சூழ்நிலையை விளங்கி இரண்டு தோணிகளில் கால் வைக்காது ஒரு வழியில் மட்டுமே உறுதியுடன் பயணித்தமையினாலேயே தமிழீழ தேசியத் தலைவரால் நல்ல தலைமையை உருவாக்க முடிந்தது. எனவே இன்றைய காலத்திற்கு பொருத்தமான வழிமுறையை தெரிவுசெய்து அதனை அவர்கள் தங்கள் அமைப்புக்கள் மற்றும் அங்கத்தவர்கள் இடத்திலும், யாருக்காகப் போராடுகிறோமோ அந்த மக்கள் இடத்திலும், உலகத்தின் இடத்திலும் உண்மையுடன் உறுதியாக ஒப்புவித்து போராட முன்வராத வரை எவராலும் நல்ல தலைமையை உருவாக்க முடியாது.*
கேள்வி: கடந்த பதின்னான்கு ஆண்டுகளில் எந்த ஒரு தமிழ்த் தலைமைகளாலும் ஏன் இன்னும் ஒரு வலுவான தலைமையை உருவாக்க முடியவில்லை?
பதில்: இதற்கான பதில் சற்று விரிவானதாக இருக்கும், 1984 இல் இந்தியாவில் வெளிவந்த SUNDAY என்ற வார இதழுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வழங்கிய பேட்டியுடன் சில விடயங்களை இங்கே உற்றுநோக்கிக் கூற விரும்புகிறேன்.
1984 ஆம் ஆண்டு முப்பது வயதை எட்டிய ஒரு இளம் போராட்டத் தலைவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் வழங்கிய சிந்தனைத் தெளிவுள்ள பதில்களும், அதற்கேற்ப அவரும், அவரது இயக்கமும் இயங்கிய விதமும் - அவராலும் அவரைத் தலைவராக ஏற்று இயங்கிய இயக்கத்தாலும், அவரையும் அவரது இயக்கத்தையும் நேசித்தவர்களின் ஆதரவினாலும், ஒரு தேசிய இயக்கத்தை உருவாக்கவும் தமிழர்களின் ஏக தலைமையாக அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கவும் அது மட்டும் இன்றி வரலாற்றின் நாயகர்களாக நடைமுறை அரசைநிறுவி வீர வழிகாட்டிகளாக வரலாற்றில் நிலைபெற வைக்கவும் முடிந்தது.
அவ்வாறனதோர் சிந்தனைத் தெளிவும், உறுதியும், அர்ப்பணிப்பும், செயற்திறனும் கடந்த பதின்நான்கு ஆண்டுகளில் இன்னறுவை வீரச்சாவு அடைந்தவர்களை அல்லது இன்னுயிர்களை ஈந்தவர்களைத் தவிர எவரிடமும் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ முழுமைபெறாமல் அல்லது அதனை உணர முடியாமல் இருப்பதே இன்றைய தலைமைகளின் வல்லமை இன்மைக்குக் காரணம் ஆகின்றது.
தமிழீழத் தேசியத் தலைவரையோ, மாவீரர்களையோ, மக்களையோ நேசிக்கும் தலைவர்களோ அல்லது கூட்டுத் தலைமைகளோ இந்த தொடரை உற்று நோக்கினால் ஒரு புதிய தூய சிந்தனை பிறக்கும் என்று நம்புகிறேன். இதில் தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்வேன் என்பதுடன் எவர்மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லாதவனாக, தமிழீழ விடுதலையை விரும்பும் ஒருவனாக உங்களுட இதனைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
அன்று தமிழீழத் தேசியத் தலைவரிடம் கேட்கப்பட்ட முதலாவது கேள்வியும் அதற்கு அவர் வழங்கிய பதிலும்.
"கேள்வி: வழக்கமான அரசியல் அமைப்பில் இருந்து விலகவும், ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கவும் உங்களைத் தூண்டியது எது? அத்தகைய ஒரு விடுதலை இயக்கம் சட்ட விரோதமாக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே?
பதில்: இலங்கையின் சனநாயகப் பாராளுமன்ற அமைப்பு அல்லது நீங்கள் சொல்வதைப்போல இலங்கையின் வழக்கில் உள்ள அரசியல் அமைப்பு எப்போதுமே பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தையே சிறுபான்மையினர் மீது திணித்து வந்திருக்கிறது. இந்த அரச அமைப்பானது எங்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது என்பதுடன், எமது நிலையை மேலும் மோசமாக்கிவிட்டது. காலம் காலமாக அரசின் ஒடுக்குமுறை ஆட்சியானது எம் மக்களின் வாழ்வு நிலையைச் சகிக்க முடியாததாகவும் துன்பகரமானதாகவும் மாற்றிவிட்டது. எம்மக்கள் நடத்திய சாத்வீக சனநாயகப் போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்று முழுவதாகப் புறக்கணிக்கப்பட்டதுடன் இந்த அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர் வாழ்வுக்கே ஆபத்தாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலைகளே ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்க என்னைத் தூண்டின. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, சிங்கள அடக்குமுறையிலிருந்து இறுதியாகத் தங்களை விடுவித்துக்கொள்ளவும் எம் மக்களுக்கு ஆயுதப் போராட்டமே நடைமுறைச் சாத்தியமான ஒரே வழியென்று நான் உணர்ந்தேன். எங்கள் இயக்கம் தடை செய்யப்படும் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். அதனால் தான் எங்கள் இயக்கத்தை அதன் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு தலைமறைவு இயக்கமாக உருவாக்கினோம்."
இங்கே, எதற்கு எதிராகப் போராடுகிறோம், ஏன் அதை எதிர்த்துப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டோம், நாம் எடுத்துக்கொண்ட வழியில் நெருக்கடிகள் வரினும் உறுதியாக உள்ளோமா? போன்ற தெளிவு இருந்தது.
இன்று உள்ளவர்களிடம் எதற்கு எதிராகப் போராடுகிறோம் என்ற அடிப்படையில் அதே கேள்வியை இன்றைய சாத்வீக இயக்க மற்றும் கட்சி அரசியல் போராட்ட வழிமுறைக்கு ஏற்ப உற்று நோக்குவோம் "வழக்கமான அரசியல் அமைப்பில் இருந்து விலகவும், ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கவும் அல்லது தமிழர்களின் உரிமைக்கான போராட்டதை முன்னெடுக்கவும் உங்களைத் தூண்டியது எது?"
இவ்வாறானதோர் கேள்வியில் இன்றைய தலைமைகளிடம் என்ன தெளிவு இருக்கின்றது என்பதைப் பார்ப்போம்.
முதலாவது வளமையன அரசியல் அமைப்பில் இருந்து விலகி எமது போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றதா? தமிழின அழிப்பின் அதியுச்ச வடிவமான ஆறாம் திருத்தச் சட்டத்தை எதிர்த்து எமது போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா? ஏனைய அடக்கு முறைகளுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட முறையான பாதைகளில் முரண்பாடுகளின் நடுவில் ஒருங்கிணைந்த வகையில் சாத்வீக அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா? அதற்காக இன்று சாத்வீக அரசியல் போராட்டங்களை முன்னெடுத்த எத்தனைபேர் களத்திலும், புலத்திலும் சிறை சென்றிருக்கின்றோம்? அல்லது நீதிமன்றங்களில் எமது உரிமைப்போராட்டதின் நீதிக்குரல்களை வெளிக் காட்டி இருக்கின்றோம்? சரி இவற்றை விடவும் வேறு ஏதேனும் போராட்ட அர்ப்பணிப்பு வழிகளிலாவது இவர்கள் அர்ப்பணிப்புள்ள தலைவர்களாக விளங்குகின்றார்களா? இவர்களின் பின்னே நாம் நிற்கவேண்டும் என்ற நம்பிக்கையை இவர்கள் எமது மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் ஏற்படுத்தி இருக்கின்றார்களா? என்ற கேள்வியில் இருந்தே இன்றைய தலைமைகளின் தோல்விக்கான காரணத்தை விளங்கிக்கொள்ள முடியும்.
அடுத்தது போராட எடுத்துக்கொண்ட வழிமுறை மற்றும் அதைநோக்கிய தெளிவான செயற்பாடு என்பவற்றை நோக்குவோம்.
கால மறுதல்களின் விளைவாக தன்னிறைவுகொண்ட ஆயுத விடுதைப்போராட்டங்களின் வழியில் தனிநாடுகளை உருவாக்க விரும்பாத சர்வதேசப் போராட்டக் களத்தில் எமது ஆயுத விடுதலைப் போராட்டம் தோல்வி கண்டது. இந்த நிலையில் இன்று சாத்வீக அரசியல் போராட்டத்தை களத்திலும், புலத்திலும் போராடி வருகின்றோம் என்பதையே மக்கள் முன் அறிவித்து போராட விளைகின்றோம். இதில் நாம் அனைவரும் உண்மையாக உள்ளோமா? அல்லது தோல்விகளையும், துரோகங்களையும் நாம் எடுத்துக்கொண்ட சாத்வீக வழியில் எதிர்க்கத் திராணியற்ற நிலமையின் விளைவாக பின்புலத்தில் ஆயுத போராட்டத்தின் வழிமுறைகளில் இவற்றை அணுக விரும்புகிறோமா? மக்கள் மயப்படுத்தப்பட்ட சாத்வீக அரசியல் போராட்டத்தை எப்போது ஒரு தலைமை வழங்க முன்வருகின்றதோ துன்பங்களையும், துயரங்களையும் தங்கி எப்போது அது அர்பணிப்புக்களுடன் உறுதியான மக்கள் பணி செய்கிறதோ அப்போதுதான் இந்த விடுதலைப் போராட்டத்தில் ஒரு மக்கள் தலைமை உருவாக முடியும்.
எமது போராட்ட சூழ்நிலையை விளங்கி இரண்டு தோணிகளில் கால் வைக்காது ஒரு வழியில் மட்டுமே உறுதியுடன் பயணித்தமையினாலேயே தமிழீழ தேசியத் தலைவரால் நல்ல தலைமையை உருவாக்க முடிந்தது. எனவே இன்றைய காலத்திற்கு பொருத்தமான வழிமுறையை தெரிவுசெய்து அதனை அவர்கள் தங்கள் அமைப்புக்கள் மற்றும் அங்கத்தவர்கள் இடத்திலும், யாருக்காகப் போராடுகிறோமோ அந்த மக்கள் இடத்திலும், உலகத்தின் இடத்திலும் உண்மையுடன் உறுதியாக ஒப்புவித்து போராட முன்வராத வரை எவராலும் நல்ல தலைமையை உருவாக்க முடியாது.
தமிழீழத் தேசியத் தலைவர் போராடிய ஆயுதப் போராட்ட வழிமுறையைக் கைவிட முடியாது அல்லது எதிரிகளையும், துரோகிகளையும் இவ்வாறுதான் தண்டிக்க வேண்டும் என்றால் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பியுங்கள் படிப்படியாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் நாம் இரண்டு வழிகளிலும் போராடுவோம் என்பதை மக்களுக்கும் உலகிற்கும் சொல்லுங்கள் இதனால் விளையும் துன்பங்களையும், துயரங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் அப்போது உங்களது போராட்ட வடிவம் உண்மையானது வீரமானது என மக்கள் நம்பும்போது, சர்வதேச அழுத்தங்களும் அதற்கு ஏற்படாத இடத்தில் உங்கள் போராட்டம் வெற்றிபெறும்.
இவை இரண்டையும் விட்டு, விடுதலைப்போராட்ட வழிமுறையில் தெளிவும், உறுதியும் இல்லாதவரை இவ்வாறுதான் தலைமை அற்ற இனமாகவே தமிழீழ விடுதலைப் போராட்டம் இருக்கும் என்பது மிகுந்த வெதனைக்குரியது என்பதை போராடும் ஒவ்வருவரும் விளங்கிக்கொள்ளுங்கள் நீங்கள் விளங்கிக் கொண்டால் மட்டுமே விடுதலை சாத்தியமாகும் என்பதே யதார்த்தம்.
அன்று தமிழீழத் தேசியத் தலைவரிடம் கேட்கப்பட்ட இரண்டாவது கேள்வியும் அதற்கு அவர்வழங்கிய பதிலையும் பார்ப்போம்.
"கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்ப்பந்தித்த உங்களின் தனிப்பட்ட அனுபவங்களைச் சற்றுக் கூறுவீர்களா? கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்களது நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா?
பதில்: நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது 1958ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாது குரூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்தபோது அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். இனக் கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவிலிருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டுக்குத் தீ வைத்து, அவருடைய கணவரையும் குரூரமாகக் கொலை செய்தனர். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினார்கள். அவரது உடலில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச்சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினர் என்பதையெல்லாம் கேட்கும்போது என் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும், அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருந்து எம் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்."
இது ஆயுத விடுதலைப் போராட்டத்தை விடுதலையை வென்றெடுக்கும் வழிமுறையாகத் தீர்மானித்த ஒரு வீரரின் போராடும் நோக்கத்திற்கான மிகத் தெளிவான விளக்கமாகும். இந்த விளக்கம் எந்த வழியில் வேண்டுமானாலும் இன்று போராட முற்படும் ஒவ்வொருவர் இடத்திலும் பலமாக இருந்தால் மட்டுமே உயிரைத் துச்சம் என மதித்து உறுதியுடன் போராடவும் முடியும் நல்ல தலைமையை உருவாக்கவும் முடியும் என்பதே உண்மை.
அடுத்த கேள்வி மிகவும் முக்கியமானது.
"கேள்வி: எந்தக் கட்டத்தில் நீங்கள் பாராளுமன்ற அமைப்பில் நம்பிக்கை இழந்தீர்கள்? உங்கள் நம்பிக்கையைச் சிதைத்தது எது?
பதில்: எழுபதுகளின் ஆரம்பத்தில், இளம் தலைமுறையினர் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கையிழந்திருந்த கால கட்டத்தில் தான் நான் அரசியலில் நுழைந்தேன். ஆயுதம் தாங்கிய புரட்சிவாதியாகவே நான் அரசியலில் புகுந்தேன். அடுத்தடுத்து பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் எமது மக்களின் துன்ப, துயரங்களை ஈவிரக்கமின்றி முற்றிலும் புறக்கணித்து வந்த காரணத்தினால் பாராளுமன்ற அரசியலில் எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது."
இங்கே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மிகவும் தெளிவான பதிலைச் சொல்கிறார் "எழுபதுகளின் ஆரம்பத்தில், இளம் தலைமுறையினர் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கையிழந்திருந்த கால கட்டத்தில் தான் நான் அரசியலில் நுழைந்தேன். ஆயுதம் தாங்கிய புரட்சிவாதியாகவே நான் அரசியலில் புகுந்தேன்..…….." என்கிறார்.
இன்று இந்த நிலை இருக்கின்றதா பாராளுமன்ற அரசியலை எதிர்த்து அரசியல் செய்யும் தரத்தில் இளம் தலைமுறையினரோ அல்லது வேறு ஏதாவது ஒரு தரப்பினர் போராட்டும் முனைப்புடன் வீறுகொண்டு நிற்கின்றார்களா? அல்லது பாராளுமன்ற அரசியலின் ஊடே இணங்கி விடுதைப் போராட்டத்தை பாராளுமன்ற அரசியலுக்குள் மட்டுமே நிறுத்தி வைக்கும் அளவிற்கு மக்கள் போராட்டம் முனை மழுங்கிக்கிக் கிடக்கின்றதா? என்றால் இரண்டும் இல்லை என்பதே இன்றைய பதில்.
எனவே பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை சிங்கள இனவாத ஆக்கிரமிப்பு வெறியர்களின் முகத்திரையை எவ்வாறு கிழிக்கப் போகின்றோம் என்பதிலும் மாகாண, உள்ளுராட்சித் தேர்தல்களில் தமிழர் பலத்தை எவ்வாறு நிரூபிக்கப் போகின்றோம் என்ற போட்டியிலும், யனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழரை நிறுத்தி நாங்கள் வேறு நாடு நீங்கள் வேறு நாடு இவர்தான் இன்று எங்கள் ஏக செல்வாக்குப் பெற்ற அடுத்த ஐந்து வருடத்திற்கான தமிழர் தலைவர் என்பதை எதிரிக்கும் உலகிற்கும் உணர்த்தி முரண்பாடுகள் கடந்த பாராளுமன்றத் தலைமை, மாகாண சபைத் தலைமை, ஜனாதிபதிக்கு நிகரான தமிழர் அங்கீகாரம் பெற்ற தமிழ்த் தலைமை என ஜனநாயக பல்பரிமாணம் கொண்ட ஒன்றுதிரண்ட அல்லது ஒருதிசை நோக்கிய தமிழர் தலைமைகள் நிறைந்த தமிழர் பலத்தை நிரூபிக்கப் போகின்றோமா என்பதிலும் எமது வெற்றி தங்கிநிற்கின்றது. இவ்வாறு உருவாகும் தலைமை அல்லது தலைமைகள் என்பது எமது போராட்ட வடிவத்தில் பாராளுமன்ற எதிப்பு அரசியலின் மக்கள் போராட்ட வடிவமாகவும் அது தன்னை நிலை நிறுத்திக்கொள்ளாதவரையில் எம்மால் ஒரு நல்ல தலைமையை உருவாக்க முடியாது என்பதே இன்றைய
போராட்டத் தலைமைகள் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய போராட்ட வழிமுறை.
இதை இன்றைய தலைமைகள் உணராதவரை வெற்றி வாய்ப்புக்களை இழந்தவர்களாகவே தமிழர்நிலை தொடரப்போகின்றது என்பதே கவலைக்குரிய வெற்றிடம் கொண்ட வெறுப்பு நிலை.
இதில் இருந்து தப்ப, எவராய் இருப்பினும் உங்களை நீங்களே நியாயப் படுத்துவது விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவிற்கும் தமிழீழத் தேசியத் தலைவருக்கும் நீங்கள் செய்யும் துரோகமாகமட்டுமே அது இருக்கும்.
தொடரும்….