ரஜினி, அமிதாப் ஸ்டார்களின் நடிப்பில் வேட்டையன் படம் எப்படியுள்ளது?- சர்வதேச ஊடக விமர்சனம்!
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஹிந்தி சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் இன்று (10) வெளியாகியது.
திரைப்படத்திற்கு வழக்கம் போன்று அனிருத் இசையமைத்துள்ளார்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளது.
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தவிர, ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி என பலரும் நடித்துள்ளனர்.
திரைப்படத்திற்கு முன் த.செ.ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இதற்கு முன் நடிகர்கள் ரஜினியும் அமிதாப் பச்சனும் அந்தா கானூன், கிராஃப்தார், ஹம் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
பெரிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.
வேட்டையன் சொல்ல வருவது என்ன? படம் எப்படி இருக்கிறது?
வேட்டையன் படத்தின் கதை என்ன?
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த ஒரு பொலிஸ் அதிகாரியாக தோன்றுகிறார்.
காவல் துறையில் இவர் என்கவுன்டருக்கு புகழ் பெற்றதால் இவருக்கு வேட்டையன் என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறம் மனிதாபிமான கொள்கைகள் கொண்ட ஒரு நீதிபதியாக அமிதாப் பச்சனின் கதாப்பாத்திரம் அமைந்துள்ளது.
இவர்கள் இருவரும் ஒரு முக்கிய வழக்கை கையாளுகின்றனர்.
மாறுபட்ட கொள்கைகள் கொண்ட இருவரும் இந்த வழக்கை எவ்வாறு கையாள்கிறார்கள்? என்பதே இப்படத்தின் கதையாக அமைந்துள்ளது.
'வழக்கமான ரஜினிகாந்தின் அக்ஷன் படம் அல்ல'
"இது சூப்பர் ஸ்டார் படம், ஜெய்பீம் இயக்குநரின் படம்.
இரண்டுமே இந்த படத்தில் திகட்டாத வகையில் உள்ளது. பொதுவாக மாஸ் ஹீரோக்களை வைத்து முதல்முறை படம் எடுக்கும் இயக்குநர்கள், ஹீரோவுக்கான மாஸை மட்டுமே மனதில் வைத்து சொல்ல வந்த கதையை சொதப்பிவிடுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.
இந்த படத்தில் இரண்டுக்குமே சரியாக இடமளித்து பாஸ் ஆகியிருக்கிறார் இயக்குநர்" என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்துள்ளது.
"படத்தின் முதல் 30 நிமிடம் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விரைவில், வழக்கமான ரஜினி படம் போல இல்லாமல் இது ஒரு புலனாய்வு த்ரில்லராக மாறும்.
படத்தின் முதல் பாதி விரைவாக இருந்தாலும், இரண்டாம் பாதி மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகள் மெதுவாகவும் கணிக்கக்கூடியதாகவும் இருக்கிறது", என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறியுள்ளது.
"இந்த படத்தின் எந்த இடத்திலும் எமோஷனலாக தொடர்புப்படுத்திக் கொள்ளமுடியாது. அப்படியாக வைக்கப்பட்ட காட்சிகளும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை", என்று இந்து தமிழ் திசை சுட்டிக்காட்டியுள்ளது.
"இந்த படம் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய மூத்த நடிகர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம்.
ஆனால் உண்மையில் அவர்கள் இருவரும் இடம்பெறும் காட்சிகள் அவ்வளவு உற்சாகமான உணர்வை கொண்டிருக்கவில்லை", என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
"நடிப்பு எனப் பார்க்கும் போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள துஷாரா விஜயன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், அபிராமி, மஞ்சுவாரியர் ஆகியோர் தேவையான நடிப்பை சரியாக வழங்கியுள்ளனர்.
அமிதாப் பச்சன் திரையில் அந்நியமாகத் தெரியவில்லை", என்று தினமணி குறிப்பிட்டுள்ளது.
"படத்தில் வீணடிக்கப்பட்டது மஞ்சு வாரியார்தான். படத்தில் அவருக்கு பெரிதாக வேலையே இல்லை.
க்ளைமாக்ஸுக்கு முன்பாக அவருக்கு வைக்கப்பட்ட ஒரு ‘மாஸ்’ காட்சி மட்டுமே ஓகே ரகம்", என இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.
'அனிருத்தின் இசைதான் படத்தின் பலம்'
படத்தின் இசை பற்றி குறிப்பிட்ட தினமணி, "அனிருத்தின் இசை படத்தின் முக்கிய பலம் எனலாம்.
ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டாராக காட்டும் அவரது இசை, ஓகேவான காட்சிகளையும் ஓஹோவாக்கிவிடுகின்றன", என்கிறது
"படத்தின் நான்கு பாடல்களில் 'மனசிலாயோ' மற்றும் 'ஹண்டர் வண்டார்' பாடல்கள் மட்டும் தனித்து நிற்கின்றன. பின்னணி இசை நன்றாக அமைந்துள்ளது. எமோஷனல் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் ஆழம் தேவைப்பட்டது", என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
"நாட்டுக்கு தேவை விரைவான நீதியே தவிர அவசரமான நீதி அல்ல என்ற கருத்தை உரக்க பேசிய ஞானவேல், மாஸ் காட்சிகளுக்காக மெனக்கெட்டதை தவிர்த்து இரண்டாம் பாதியில் வரும் சில தொய்வுகளில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பெரிதாக இந்த படம் கொண்டாடப்பட்டிருக்கும்", என்று இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.
படத்தின் ட்ரெய்லர் வெளியான போது பொலிஸ் என்கவுன்டரை நியாயப்படுத்துவது போன்ற வசனங்கள் வருவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடர்ப்பட்டது. ஆனால் அந்த விமர்சனங்களுக்கெல்லாம் படத்தில் தெளிவான பதிலை கொடுத்தது சிறப்பு என்றும் இந்த விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
இயக்குனர் ஞானவேல் மற்றொரு சமூக கருத்துள்ள படத்தை வழங்கியுள்ளார், ஆனால் இந்த முறை அது கமர்சியல் விஷயங்கள் கலந்து இருக்கிறது.
ரஜினி ரசிகர்களுக்காவும் சில அதிரடி காட்சிகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்தத் திரைப்படம் ஒரு சமூக கருத்து சொல்லும் புலனாய்வு திரில்லர் படமாக இருக்கிறது", என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
இது தவிர பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது திரை விமர்சனத்தை நியாயமான முறையில் நேயர்களுக்கு வழங்கியுள்ளது.