மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டார் கலைஞர் செல்லத்துரை குமாரசாமி

சுயநலன் கருதாது, நேர்மையுடனும்,நெஞ்சுறுதியுடனும் எமது சுதந்திரப் போராட்டத்திற்கு அரும்பணியாற்றிய உயர்ந்த கலைஞரை நாம் இன்று இழந்துவிட்டோம். தமிழினம் பெருமைப்படும்படியாக கலையுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்த இந்த கலைமாமணியை இழந்து தமிழர் தேசம் சோகக்கடலில் மூழ்கிக்கிடக்கிறது.
திரு.செல்லத்துரை குமாரசாமி அவர்கள் ஒரு தலைசிறந்த இசைப் பேராசான்,சிறந்த கலைப்படைப்பாளி.இவரிடம் கலைகளுக்கே உரித்தான உள்ளம் ,வற்றாத கலையுணர்வு ,கட்டுக்கடங்காத கற்பனை வளம் ,கலைக்கு அணிசெய்கின்ற நிறைந்த அறிவு ,தமிழ் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் ,தமிழ் மண்ணின் விடுதலைக்கு பங்காற்றவேண்டும் என்ற உயரிய குறிக்கோள் ,சுயமான ஆளுமை ஆகிய அனைத்தும் இருந்தன.இவை எல்லாம் ஒன்று கலந்த மனிதம் இருந்தது.இந்த அழகான மனித மாண்பு அனைவரையும் அவரை நோக்கிக் கவர்ந்து கொண்டது. சிங்கள அரசின் ஆசிரியப்பணியை மேற்கொண்டபடியே, அரச அடக்குமுறைக்குள் நின்று தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டதை எதற்கும் அஞ்சாது ஆதரித்து துணிந்து செயற்பட்டு வந்தவர்.
தமிழீழ மண்ணின் பெருமையையும்,தமிழ் மக்களின் வாழ்வியலையும், மாவீரர்களின் தியாகங்களையும் இனிய குரலால் இசைத்தவர். ஈழத்தமிழர்களுக்கு இவரது இழப்பு மாபெரும் துயர நிகழ்வு.
திரு.செல்லத்துரை குமாரசாமி அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக ‘மாமனிதர்’என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் பெருமையடைகின்றோம்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது அன்பான ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.