பிரித்தானிய மண்ணில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள்

பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பகுதியில் தமிழருக்கு சொந்தமான நிலப்பரப்பில் தமிழீழத் தாயகத்தின் மாவீரர் துயிலும் இல்லங்களைப் பிரதிபலிக்கும் கல்லறைகள் அமைத்து உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்-2023 நினைவேந்தல்கள் நடைபெற்றன.

குளிரையும் மழையையும் பொருட்படுத்தாது பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கிலான தமிழர்கள் ஒன்றுகூடி மாவீரருக்கு விளக்கேற்றினர்.

உலகப்பரப்பிலேயே அன்னிய தேசத்தில் தமிழர்களுக்கு சொந்தமான நிலத்தில் நடைபெறும் மாவீரர் நாள் என்பதில் ஒக்ஸ்போட்டில் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெறும் மாவீரர் நாள் முக்கியத்துவம் பெறுகிறது .

மாவீரர் வாரம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து மாவீரர் நினைவெழுச்சி நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று இவ்வருட மாவீரர் நாள் புத்தெழுச்சியோடு நடைபெற்றது.

மாவீரர் பெற்றோர், மாவீரக்கணவரின் துணைவியர், மாவீரத்தந்தையர் பிள்ளைகள், மாவீரர் குடும்ப உறவுகள், களங்களில் அவர்களுடன் நின்று களமாடிய நண்பர்கள் உயிரிலும் மேலான தாய்த்தமிழ் சொந்தங்கள் என ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்று கூடி விளக்கேற்றும் இத்தருணம் ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் மாவீரர் திருமுகங்கள் வந்து நிழலாடி சுடர்விட்டெரிவதை அவர்களின் கண்களில் வழிந்தோடும்  கண்ணீர் துளிகள் வெளிப்படுத்தி நின்றன.

தமிழீழ விடுதலைக்கனவு நனவாகும் மாவீரர் இலட்சியக்கனவு ஈடேறும்.

இதனிடையே, பரிஸ் உள்ளிட்ட பிரான்சில் ஈழத் தமிழர்கள் வாழும் பல பகுதிகளிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.