சட்டவிரோத மருத்துவ நடைமுறைகள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீவிர அதிருப்தி!
இலங்கையில் பரவலாக செயற்பட்டு வரும் சட்டவிரோத மருத்துவ நடைமுறைகள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீவிர அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
எனவே, இலங்கையில், மருத்துவ நடைமுறை கண்டிப்பாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், தனியாட்கள், இலங்கை மருத்துவ சபை, ஆயுர்வேத மருத்துவ சபை அல்லது ஹோமியோபதி மருத்துவ சபை போன்றவற்றின் செல்லுபடியாகும் பதிவுகளை வைத்திருக்க வேண்டும்.
அத்துடன் தேவையான தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். அத்தகைய பதிவுகள் இல்லாமல் பயிற்சி செய்பவர்கள் போலி மருத்துவர்களாகக் கருதப்படுவார்கள்.
அதேநேரம் இந்த விடயம் பொது சுகாதாரத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது சிறப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அடிப்படை மருத்துவத் தகுதிகள் இல்லாதவர்கள், அங்கீகரிக்கப்படாத பலர், மருத்துவ நடைமுறைகளில் ஈடுபடுவது, சட்டப்பூர்வமான சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கணக்கீட்டின்படி நாடு முழுவதும் சுமார் 40,000 க்கும் மேற்பட்டவர்கள் தண்டனையின்றி செயற்படுகிறார்கள், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சுகாதார அமைச்சின் விரைந்த செயற்பாடு அவசியம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.