31 மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்துக்குள் உள்நுழைய தடை!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 31 மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்குள் உள்நுழைய இன்றிலிருந்து மறுஅறிவித்தல் வரை தடை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 31 மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்குள் உள்நுழைய இன்றிலிருந்து மறுஅறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 2ஆம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பிலேயே இந்த உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் ஏற்பட்ட பிரச்சினை பின்னர் மோதலாக மாறியுள்ளது.
இதன்போது, காயமடைந்த 3ஆம் வருட மாணவர் ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெற்றது.
குறித்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட 31 மாணவர்களுக்கு, முறையான விசாரணைகள் முடிவுப்பெறும் வரையில் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த 31 மாணவர்களும் பல்கலைக்கழத்தில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் அறிவித்துள்ளார்.