ஐ.நா.வில் ஏ.ஆர். ரகுமான் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்களை சந்தித்தார்!
கடந்த மாதம் 11ம் திகதி தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் சபையின் 54வது கூட்டத்தொடரின் கடைசி வாரத்திலும் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அரசியல் பிரமுகர்கள், பெண்கள், இளையோர் என பல்வேறு தரப்பினரும் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமாக தொடர்ச்சியான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேளையில் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் ஆர்வலருமான ஏ.ஆர்.ரகுமான் ஐ.நா. வின் சிறப்பு அழைப்பாளராக நேற்றைய தினம் (09) ஐ.நா விற்கு வருகை தந்திருந்தார்.
அப்போது அங்கு தமிழர் உரிமை செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் பன்னாட்டு தளங்களில் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டதுடன் அவை தொடர்பான ஆவணங்களும் ஏ.ஆர். ரகுமானுக்கான கோரிக்கை மனுவுடன் கையளிக்கப்பட்டது.
அதில் உலகத் தமிழினத்திற்கே பெருமை சேர்க்கும் தங்களை ஐக்கிய நாடுகள் சபையான பன்னாட்டுத் தளத்தில் சந்திப்பதையிட்டு உலகத் தமிழர் இயக்கமாக நாம் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தாங்கள் கொண்டிருக்கும் ஆழமான அன்பினையும் கரிசனையையும் அவ்வப்போது தாங்கள் பொது வெளியிலும் பாடல் வழியிலும் வெளிப்படுத்துவதற்காக நன்றி தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், தியாக தீபம் லெப்டினன் கேணல். திலீபனின் நினைவேந்தல் நாட்களின் புனிதத் தன்மையை உணர்ந்து எம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஈழத் தமிழர்களின் நெஞ்சார்ந்த ஆதங்கத்தினை பரிபூரணமாக ஏற்று, அவரது இசை நிகழ்வுகளைத் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் காலங்களில் இல்லாமல் மாற்றியமைத்தமைக்காக நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
ஈழத் தமிழர்களின் இனவிடுதலைக்கான பேராதரவுத் தளத்திலே தாங்களும் ஓர் உயர்வு நிலையில் எப்போதும் நன்றியோடு மதிக்கப்படுவீர்கள் என்பதை ஈழத் தமிழர்கள் சார்பாக பதிவு செய்யப்பட்டது.
தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலை கட்டமைப்பு ரீதியாக இன்றும் தொடர்ந்து வருகின்ற நிலையில் தங்களது தமிழ்ப்பற்றும் தமிழீழ ஆதரவும் தமிழீழ மக்களுக்கு சற்று ஆறுதலாகவும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதுமாக அமைந்திருக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அந்தவகையில் தென்சூடானுக்கு ஆதரவாக ஹொலிவூட் நடிகர் யோர்ச் குளூனியினால் அமெரிக்காவில் தொடங்கிய கலைஞர்கள் ஆதரவுக்குழு உலக முழுவதுமான கலைஞர்களின் ஆதரவுக்குழுவாக உருவாக்கப்பட்டது.
யோர்ச் குளூனியின் அச்செயற்பாடுகள் தென் சூடான் நாட்டின் விடுதலைக்கு பெரும் ஆதரவு சக்தியாக இருந்தது.
இதேபோன்று, தமிழ்நாட்டு கலைஞர்களும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு குழுவினை உருவாக்கி அனைத்துலக கலைஞர்களையும் ஒன்று திரட்டி தமிழின அழிப்புக்கான நீதிக்கு வலுச்சேர்க்க வேண்டுமென தமிழர்கள் என்ற உரிமையோடு அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த பொப் மார்லே, பொனோ, மைக்கல் ஜக்சன் போன்ற உலக இசைப் பிரபலங்கள் வழியில் நீங்களும் எமக்கான முன்னோடியாய் தமிழ்த் திரையுலகத்தை ஒன்று திரட்டி பேரினவாத சிங்கள அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்படும் எம் தமிழினத்தைக் காக்க அறிவியல் தளத்தில் எம்மோடு கைகோர்க்க வேண்டும் எனவும் ஒடுக்கப்படும் எம் குரலாய் நீங்கள் உலக அரங்கில் ஒலிக்க வேண்டுமென்று தங்களை அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அவருடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.