நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பஸ் ஓட்டுநர்களுக்கான அறிவிப்பு!

நீண்ட தூர சேவை பஸ்களுக்கு பொறியியல் அறிக்கையைப் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
நீண்ட தூர சேவை பஸ்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 100 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யும் அனைத்து பஸ்களும் இந்த அறிக்கையைப் பெற வேண்டும்.
அதன்படி, ஒகஸ்ட் 1 ஆம் திகதி முதல் பொறியியல் அறிக்கையைப் பெறுவது கட்டாயம் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஒகஸ்ட் 1 ஆம் திகதி முதல் பயணிகள் பஸ்களுக்கு டிக்கெட் வழங்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போக்குவரத்து இயக்குநரகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட, ஜூலை 1 ஆம் திகதி முதல் பயணிகள் பஸ்களில் பொருத்தப்படும் கூடுதல் சாதனங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.