தூர சேவை பேருந்து உரிமையாளர் பிரச்சினைகளை ஆராய குழு நியமிப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய, உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான குழு இன்று (01) நியமிக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். 

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நேற்று (29) மாலை நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானத்தை ஆளுநர் அறிவித்தார். 

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. 

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தூர சேவையை ஆரம்பிக்க வேண்டும் என கோரி நேற்று முற்பகல் யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது. 

சம்பவ இடத்திற்கு சென்ற ஆளுநர், தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை தொடர்பில் மாலை விசேட கலந்துரையாடலை நடத்தி தீர்வு பெற்றுத்தருவதாக கூறினார்.

அதற்கமைய, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோருடன் கலந்துரையாடி பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் குழு ஒன்றை நியமிக்க ஆளுநர் ஆலோசனை வழங்கினார். 

இந்த தீர்மானத்தை தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் அறிவித்ததுடன், இன்றைய தினமே குழுவை நியமித்து தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாகவும் கூறினார். 

ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய குறுகிய காலத்திற்குள் தங்களின் கோரிக்கைக்கான தீர்வை எதிர்பார்ப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். 

அதற்கமைய, பணிபகிஷ்கரிப்பை கைவிட்டு இன்று (01) முதல் வழமையான சேவைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, வடக்கு மாகாண தனியார் பேருந்து உாிமையாளா்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம்  தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.