பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க தடை!

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க தடை!

அரசியல்வாதிகளை தமது பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து பாடசாலைகளையும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், அரசியல்வாதிகளை பாடசாலைகளுக்கு அழைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வியில் கவனம் சிதறி பாடசாலை சூழலை அரசியலாக்கும் அபாயம் ஏற்படும் என தெரிவித்துள்ளார். 

இதன்போது, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் செயல்முறை முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மாணவர்களின் மனநலம் குறித்து உரையாற்றிய அவர், தற்போதைய தலைமுறையினர் கணிசமான சவால்களை எதிர்கொள்கின்றனர், இதில் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை மாணவர்களிடையே மன அழுத்தத்தை அதிகரித்துள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், அண்மைய, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு பிரச்சினைக்கு, விரைவான மற்றும் நியாயமான தீர்வு காணப்படும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் சுயாதீன அறிக்கை ஒன்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளதுடன், தாமதமான அனைத்து பரீட்சை பெறுபேறுகளையும் உடனடியாக வெளியிடுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.