பௌத்த பேரினவாத பிக்குகளும், பேரினவாத சிங்கள அடிபவருடிகளாலும் பால் பண்ணையாளர்கள் ஏற்பட்டுள்ள அநீதி!

இன்றைய தினம் 08.10.2023 மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை சந்திப்பதற்காக கடந்த 24 நாட்களாக போராடிக் கொண்டிருக்கின்ற மயிலத்தமடு மாதவணை பிரதேச பால் பண்ணையாளர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்காவும் தொடர்ச்சியாக போராடி வருகின்ற போராட்டத்திற்கு நீதி கேட்பதற்காகவும் தங்களுக்குத் தொடர்ச்சியாகப் பௌத்த பேரினவாத பிக்குகள் சிலராலும் பேரினவாத சிங்கள அடிபவருடிகள் சிலராலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அத்துமீறல்கள் மேய்ச்சல் தரை காணி அபகரிப்புகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களுக்கு நீதி கோரி பல நாட்களாக வீதியிலே போராட்டத்தில் ஈடுபடுகின்றோம் என்பதையும் ஜனாதிபதியை சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளாக முன்வைத்து தமக்கான நியாயங்களை கேட்பதற்காக சென்றபோது செங்கலடி பிரதேசத்தில் வைத்து ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் இராணுவத்தினர் புடைசூழ தடுத்து நிறுத்தப்பட்டதோடு நீதிக்காக போராடிய பால் பண்ணையாளர்கள் அவர்களது குடும்ப உறவுகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரமுகர்கள் காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்க அங்கத்தவர்கள் என பலரும் தடுக்கப்பட்டதோடு சிலர் தாக்கப்பட்டார்கள் என்று அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அது மாத்திரமில்லாமல் இந்த பால்பண்ணையாளர்களுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கின் பல பிரதேசங்களிலிருந்தும் பல பொதுமக்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் சார்பில் எமது உறவுகளும் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்தனர் அவ்வாறு நாமும் அம்பாறை  மாவட்டத்தில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்த போது மட்டக்களப்பு தலைமை பொலிஸ்  எல்லைக்குட்பட்ட கல்லடி பாலம் அருகிலே தடுத்து நிறுத்தப்பட்டதோடு பஸ் வண்டியிலிருந்து இறங்கவிடாமல் தடுக்கப்பட்டு தொடர்ச்சியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதோடு அதிலே வருகை தந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டதோடு எங்கே செல்கிறீர்கள் எதற்காக செல்லுகிறீர்கள் யார் உங்களை அழைத்தார்கள் இந்த போக்குவரத்திற்கான பணம் உங்களுக்கு யார் கொடுத்தார்கள் எவ்வளவு கொடுத்தார்கள் என பல கேள்விகளைக் கேட்டு அச்சுறுத்தியவாறே உங்களை அழைத்த நபரின் பெயர் என்ன ஏன் அழைத்தார் உங்களுக்கும் அவருக்குமான தொடர்பு என்ன என பல கேள்விகளையும் கேட்டு விசாரித்தும் வாக்குமூலங்களை எழுத்து மூலமும் பெற்றுள்ளனர்.

இவ்வாறு காலை 9.30 மணியிலிருந்து நண்பகல் 12:00 மணி வரைக்கும் சுமார் 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள் நிறுத்தி வைத்திருந்ததோடு வயதான அம்மாக்கள் பெண்களையும் அவ்வளவு நேரமும் பஸ் வண்டியினுள் வைத்திருந்ததோடு ஒவ்வொருவராக இறக்கி விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்றனர் என்பதையும் பஸ் வண்டியின் சாரதியும் நடத்துனரும் கூட விசாரிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.

 இந்த விசாரணைகளும் வாக்குமூலங்களும் தொடர்ந்த வண்ணமே காணப்பட்டதோடு நாம் வந்த வண்டியிலே ஆயுதங்களும் தடைசெய்யப்பட்ட பொருட்களும் போராட்ட பிரசுரங்களும் இருப்பதாகக் கூறி சோதனை செய்ததோடு இது தமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல் எனவும் கூறி வேண்டுமென்றே எம்மை அவ்வளவு நேரமும் நீராகாரம் இன்றி அந்த இடத்திலேயே தடுத்து வைத்திருந்தார்கள் என்பதையும் தெரிவிக்கிறோம்.

இவர்களது விசாரணைகளால் எம்மை அழைத்திருந்த மனித உரிமைசார் சிவில் சமூக செயற்பாட்டாளர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. தாமோதரம் பிரதீவன் அவர்கள்தான் எங்களையும் இந்த நீதிக்கான போராட்டத்தில் இணையுமாறு அழைத்திருந்தார் எனவும் இன்றைய தினம் ஒரு சந்திப்பு இருக்கிறது அதனோடு இந்த மக்களுக்காக நாமும் குரல் கொடுப்போம் என அவர் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே நாம் வருகை தருகிறோம் என்று கூறினோம்.

மனித உரிமைக்காக நாமும் அவரும் பல இடங்களில் இணைந்து வேலை செய்து வருகிறோம் என்பதையும் கூறிய போது அவருடைய தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் அவர் இப்போது எங்கே இருப்பார் அவர் என்ன செய்கிறார் ஏன் உங்களை அழைத்தார் இந்த போக்குவரத்திற்கு உங்களை அழைப்பதற்கு அவருக்கு பணம் எவ்வாறு கிடைத்தது போன்ற பல கேள்விகளையும் அவர்கள் கேட்டிருந்ததோடு எம்மையும் அவரையும் நீதிமன்றில் நிறுத்த போவதாகவும் எச்சரித்தனர்.

உண்மையிலேயே இது மிக மன வேதனையான விடயம் என்பதையும் இந்த நாட்டிலே தொடர்ச்சியாக நடந்து வருகின்ற இவ்வாறான அத்துமீறல்கள் அராஜகங்கள் காரணமாகத்தான் நாம் வீதியிலிறங்கி நீதிக்காகப் போராடுவதோடு எங்களுக்கு நீதி வேண்டும் என்பதற்காக நாட்டினுடைய ஜனாதிபதியைக் கூட சந்திக்க முடியாத ஒரு சூழ்நிலையை இந்த நாட்டினுடைய அரசியல் ஏற்படுத்தியிருக்கிறது.

பாதுகாப்பு தரப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் அவ்வாறு நீதி கோருகின்ற பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவதோடு அவ்வாறான ஒழுங்கமைப்புகளை செய்கின்ற சமூக செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதோடு அவர்கள் மீதான விசாரணைகளும் தொடர்வது ஒரு பாரிய சர்ச்சையையும் கேள்வியையும் மன வேதனையையும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருவதையும் நினைவூட்டுகிறோம்.

இலங்கையிலே தொடர்ச்சியாக நீதி மறுக்கப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதையும் இந்த நாட்டில் இருந்து நீதிபதி ஒருவர் கூட தனக்கு நீதி இல்லை என்று நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்ற சம்பவத்தையும் கூட நினைவு கூர்ந்து தொடர்ச்சியாக இவ்வாறு பொதுமக்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அச்சுறுத்தப்படுகின்ற சம்பவங்கள் நீதிக்காக குரல் கொடுக்க முன்வருகின்ற போது அவர்களுடைய குரல் வளைகள் நசுக்கப்படுகின்ற சம்பவங்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றமை மனவேதனையை தருகின்றன.

இந்த நாட்டிலே எமக்கான நீதி கிடைக்காது என்பதனால் தான் தொடர்ச்சியாக நாங்கள் சர்வதேச அழுத்தத்தை கேட்கின்றோம்.

சர்வதேச நீதி விசாரணையை கேட்கின்றோம் என்பதை இவ்வாறான நிகழ்வுகள் உணர்த்தியிருக்கிறது என்பதை மீண்டும் தெரிவித்து மீண்டும் மீண்டும் சர்வதேசத்தைத்தான் நம்பி இருக்கிறோம் எனவும் கூறி நிற்கின்றோம்.

இவ்வாறான விடயங்களுக்கு சர்வதேசம் தலையீடு செய்து எமக்கான நீதியை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் இன்று எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் நீதி வேண்டும் எனவும் கோருகின்றோம்.