சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு - கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி மீது தாக்குதல்!

கிளிநொச்சி - இரணைமடு சந்தியிலிருந்து கந்தசாமி ஆலயம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் 76 வது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தமையால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றித்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்பினர் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்தநிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிக் கம்பத்தில் மாணவர்களால் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக சூழலில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன.