சட்டசிக்கலில் முன்னாள் அமைச்சர்கள் - சி.ஐ.டி மற்றும் நீதிமன்றில் முன்னிலை!
தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நாளை (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை வாக்குமூலம் அளிக்க உள்ளதாக அவரது சட்டத்தரணி இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்கக் கோரி மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு இன்று அழைக்கப்பட்ட போது, அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்திற்கு இதனைத் தெரிவித்தார்.
தனது கட்சிக்காரர் நாளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் அளிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும், பின்னர் வேறொரு நாளில் இந்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக அழைக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக மனு எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.
அதேவேளை, சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியைப் பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா நேற்று (19) வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பாகங்கள், போலி இயந்திரம் மற்றும் சேசி எண்களைக் கொண்ட லொறியைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நேற்று (19) கைது செய்யப்பட்ட சந்தேகநபரான முன்னாள் அமைச்சர், பின்னர் ஹப்புத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவின் நலனை விசாரிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (20) காலை நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.