மது அருந்தாமலேயே போதை ஏற்றும் விநோத நோய்!
ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் (ஏ.பி.எஸ்.) அல்லது குடல் நொதித்தல் நோய் (Gut fermentation syndrome - GFS) என்பது ஒரு மர்மமான நோய் ஆகும்.
இது இரத்தத்தில் ஆல்கஹோல் அளவை உயர்த்துகிறது.
நோயாளி குறைவாக மது அருந்தியிருந்தாலும் அல்லது மது அருந்தாமலிருந்தாலும் கூட அதீத போதை அறிகுறிகளை அவரின் உடலில் ஏற்படுத்துகிறது.
குடல், சிறுநீர் அமைப்பு அல்லது வாய் பகுதிகளில் உள்ள பக்டீரியாக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகளை ஆல்கஹோலாக மாற்றும் போது இந்த நிலை ஏற்படும்.
இது உட்புற ஆல்கஹோல் உற்பத்தி (endogenous alcohol production) என்று அழைக்கப்படுகிறது.
இந்த நோய் நிலையில், நோயாளிகளுக்கு மந்தமான பேச்சு, நிலையற்ற நடை, துர்நாற்றம், போதை ஆகியவை ஏற்படும்.
1940களில் ஒரு சிறுவன் இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டதாகத் தரவுகள் காட்டுகின்றன.
உகண்டா மருத்துவமனையில் மருத்துவர்கள் 5 வயது சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவுகளைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
வயிறு வெடித்து இறந்து போன அந்தச் சிறுவனின் வயிற்றுப் பகுதியை அறுவை சிகிச்சை செய்து பார்த்த போது, அதிலிருந்து ஆல்கஹோல் வாசனை வீசியது.
இந்தப் பிரேத பரிசோதனையின் முடிவு பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியானது.
குடல் நொதித்தல் நோய்நிலை மிகவும் அரிதானது.
அமெரிக்க இரைப்பை குடலியல் ஆய்விதழில் வெளியிடப்பட்ட 2021 ஆய்வின்படி இதுவரை அமெரிக்காவில் 100 க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் ஏ.பி.எஸ். பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில நிபுணர்கள் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமென்று சந்தேகிக்கின்றனர்.
ஒருசிலருக்கு மட்டும் இந்தக் குடல் நொதித்தல் நிலை ஏன் ஏற்படுகிறது என்பதை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை.
செரிமான செயற்பாட்டின் ஒரு பகுதியாக மனித உடல், குடலில் சிறிய அளவிலான ஆல்கஹோல் உற்பத்தி செய்வது இயற்கையான நிலை. ஆனால், இது முதல்-பாஸ் வளர்சிதை மாற்றம் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் இரத்த ஓட்டத்தில் நுழைவதற்கு முன்பே அகற்றப்படுகிறது.
"மனித உடலில் இயற்கையாகவே சிறிதளவு மது உற்பத்தியாகும்.
ஆனால், குடல் நொதித்தல் நோயுடைய ஒருவருக்கு அதிகளவில் மது உற்பத்தியாகி இரத்த ஓட்டத்தில் கலக்கும்" - என்று போர்த்துக்கலைச் சேர்ந்த உயிரியல் மருத்துவ ஆலோசகரும் தடயவியல் நிபுணருமான டாக்டர் ரிக்கார்டோ ஜோர்ஜ் டினிஸ்-ஒலிவேரா விளக்குகிறார்.
இவர் ஏ.பி.எஸ். நிலை குறித்து பல கட்டுரைகளை வெளியிட்டவர்.
"துரதிர்ஷ்டவசமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறிய ஒரு கிரிமினல் குற்றச்சாட்டுப் போன்ற கடுமையான அத்தியாயத்தை கடக்க வேண்டியிருக்கும்" - என்கிறார்.
ரிக்கார்டோ, ஏ.பி.எஸ்ஸை "வளர்சிதை மாற்ற புயல்" என்று அழைக்கிறார். அதாவது, உடலில் ஒரே நேரத்தில் நடக்கும் பல விஷயங்களால் இந்த நிலை தூண்டப்படுகிறது என்கிறார்.