காஸா முகாம்கள் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் - ஒரே நாளில் 39 பேர் பலி!

காஸா முகாம்கள் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் - ஒரே நாளில் 39 பேர் பலி!

பலஸ்தீன நகரமான காஸாவின் பல்வேறு இடங்களில் நேற்று [ஜூலை 20] இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. உயிரிழந்தவர்களில் உள்ளூர் பத்திரிகையாளர் முகமது அபு ஜஸீர் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் அடங்குவர்.

இதனால் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று இரவு புலம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த குடியிருப்பு பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக மற்றொரு முகாம் கட்டிடம் மீது மிசைல் தாக்குதல் நடந்த நிலையில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். 

இந்நிலையில் இஸ்ரேல் பீரங்கிகள் தற்போது ரஃபாவின் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 38,798 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்டஇஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த அமைதிப்பேச்சுவார்தைகள் தோல்விமுகத்தில் உள்ளன. இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த வாரம் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.