வடக்கிலுள்ள மனித புதைகுழிகள் குறித்து அமெரிக்கா அவதானம் : ஜூலி சங் தமிழ் கட்சிகளிடம் எடுத்துரைப்பு!
வடக்கிலுள்ள மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளின் முக்கியத்துவம் பற்றி இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.
வடக்கிலுள்ள மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளின் முக்கியத்துவம் பற்றி இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.
வடக்கு தமிழ் கட்சிகளை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், டெலோ ஆகிய கட்சிகள் கலந்துகொண்டன.
இந்தச் சந்திப்பு குறித்து தமது “டுவிட்டர்“ பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க தூதுவர்,
தமிழ்த் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.
உண்மை, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்காக இலங்கை பாடுப்படுகின்றமை குறித்தும் அதிகாரப்பகிர்வு, காணிகளை மீளப் பெறுதல் தொடர்பாக வடக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடினேன்.
அத்துடன், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான நீதியை பெற்றுக்கொடுத்தல், பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளின் முக்கியத்துவம் பற்றி இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.
அமெரிக்க தூதுவருடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்ட புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடி நிலைமைகள் குறித்து அமெரிக்க தூதுவர் எம்முடன் அறிந்துக்கொண்டார்.
தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் காணாமல்போனோரது குடும்பங்களுக்கு நீதியை பெற்றுக்கொடும் செயல்பாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவரிடம் பேசியதாக சித்தார்த்தன் கூறினார்.
அத்துடன், நாட்டில் தொடர்ச்சியாக கண்டுப்பிடிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளதாக தூதுவர் ஜூலி சங் கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார்.