திலீபனின் நினைவேந்தல் வழக்கிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிப்பு!

திலீபனின் நினைவேந்தல் வழக்கிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிப்பு!

திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டித்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான சமர்ப்பணங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கடந்த 24ஆம் திகதி முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில் சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த வழக்கில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை விடுவித்து தீர்ப்பளித்துள்ளதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதேவேளை, இணையவழி பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, சிரான் குணரட்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 

இந்த நிலையில், குறித்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு நீதியரசர்கள் ஆயம் தீர்மானித்துள்ளது.

குறித்த சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை அதில் உள்வாங்காது அதனை நிறைவேற்றியமையினால் அது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடக்கோரி, எம்.ஏ சுமந்திரனால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.