பொலிஸ் மா அதிபர் நியமனம் சட்ட விரோதமானது!

பொலிஸ் மா அதிபர் நியமனம் சட்ட விரோதமானது!

இலங்கையின் 36 ஆவது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்  நியமிக்கப்பட்டமை சட்ட விரோதமானது  என  ஐக்கிய மக்கள் சக்தியின்   பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
  
தற்போதைய ஜனாதிபதி  ரணில்  விக்ரமசிங்க தனது விருப்பத்திற்கேற்ப தன்னிச்சையாக செயற்படுவது ஜனநாயகத்திற்கு பாரிய சவால்  என்றும்,  இது நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான பாரிய தாக்குதல்  என்றும்  அவர்  குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு  சட்டவிரோத அழுத்தங்களை பிரயோகித்தமை தொடர்பிலும் தேசபந்து தென்னகோன் மீது  பல்வேறு குற்றச்சாட்டுகள்  பிரயோகிக்கப்பட்டுள்ளன.

தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய காலத்தில் நாட்டில் பாரிய குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.

அவர் பதில்  பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதுடன்,  இந்த நியமனம் ஏற்றுக்கொள்கின்றமை அரசியலமைப்புக்கு முரணானது என மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அத்துடன், மே 09 ஆம் திகதி கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் அவரைக் கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு பாரிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவரை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி நியமித்துள்ளமை அரசியலமைப்பு சபையை புறக்கணிக்கும் செயற்பாடு என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்   பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தநிலையில்,  குறித்த  முறையற்ற நியமனத்திற்கு  ஐக்கிய மக்கள் சக்தி கடுமையான கண்டனத்தை வெளியிடுவதுடன் சட்டத்தின் ஆட்சியை நிறுவி ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவது தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முழுமையான பொறுப்பு  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.