ஜோசப் பரராஜசிங்கம் கொலைக்கு நீதி கிடைக்குமா?
ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் முதல் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதிநிதிக்கு தற்போதைய ஆட்சியிலாவது நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக அந்த மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்திற்கு நாட்டின் நிறைவேற்றுத் தலைவராக இருந்த எந்த ஒரு ஆட்சியாளரும் நீதி வழங்கவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவிக்கின்றார்.
“மஹிந்த ராஜபக்ச காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் ஐயா மாத்திரமல்லாமல் பல பத்திரிகையாளர்கள், பல அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவரது காலத்தில் நீதி கிடைக்கவில்லை. அதன் பின்னர் மைத்திரி-ரணில் ஆட்சிக்கு வந்தார்கள். அவர்களது காலத்திலும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அடுத்தக்கட்டமாக ஆட்சிக்கு வந்தவர் கோட்டாபய ராஜபக்ச, நிச்சியமாக அவரது ஆட்சிக் காலத்தில் நீதி கிடைக்காது என்பது எமக்குத் தெரியும். தற்போது அனுர குமார திசாநாயக்க அவர்கள் சட்டவாட்சியை பாதுகாக்கப்போகின்றோம். குற்றவாளிகளை தண்டிப்பேன் என சொல்லியிருக்கின்றார். எனவே இந்த காலகட்டத்தில் நிச்சியமாக ஒரு நீதி கிடைக்குமென மக்கள் நினைக்கின்றார்கள்.”
டிசம்பர் 25, 2005 அன்று புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டபோது படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கு நீதி கோரி, கடந்த டிசம்பர் 26ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி மட்டக்களப்பு வேதநாயகம் மண்டபத்தை வந்தடைந்ததோடு அங்கு முன்னாள் மக்கள் பிரதிநிதியை நினைவு கூரும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வை இலங்கை தமிழ் அரசுக் கட்சி இளைஞர் முன்னணி ஏற்பாடு செய்திருந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“சிவப்பு” ஆட்சியிலாவது நீதி கிடைத்ததாக தமிழ் மக்கள் மன அமைதிகொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை தற்போதைய அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் மேலும் தெரிவித்திருந்தார்.
“தாமதிக்கும் நீதி எனப்படுவது கிடைக்காமல் போகின்ற நீதி என சொல்வார்கள். எனவே இந்த நீதியை அவர் வெளிக்கொண்டு வருவதன் ஊடாக இந்த சிவப்பு ஆட்சி அல்லது இந்த இடதுசாரி ஆட்சியின் போது மறுக்கப்பட்ட நீதி கிடைத்திருப்பதாக தமிழ் மக்கள் ஓரளவுக்காவது மன அமைதிகொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.”
சிங்களத் தலைவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் என்ற புரிதலை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
“காலத்தை கடத்தினால் சிங்களத் தலைவர்கள் எல்லோரும் தமிழ் தலைவர்களின் படுகொலையில் அக்கறையில்லாமல் இருக்கின்றார்கள் என்பதை மக்கள் விளங்கிங்கொள்ளக் கூடிய சந்தர்ப்பமாக அமைந்துவிடும். ஆகவே நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது 19 வருடங்களாக எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அடுத்து 20ஆவது ஆண்டு தொடரப்போகிறது. எனவே இந்த காலத்திலாவது நீதியை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டில் சட்டவாட்சி நடைபெறுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றார்கள் என்ற செய்தியை இந்த புதிய அரசாங்கம் வழங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவேந்தலில் கலந்துகொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தற்போதைய அரசாங்கம் பல பழைய வழக்குகளை விசாரித்து வருகின்ற போதிலும், ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை அதில் இடம்பெறவில்லை என குற்றம் சுமத்தினார்.
“இந்த அரசாங்கமானது ஆட்சிக்கு வந்தது. கடந்த காலத்தில் நடந்த பல விடயங்களுக்கு எதிராக நாங்கள் செயற்படுவோம். குறிப்பாக ஈஸ்டர் குண்டுவெடிப்பு போன்ற விடயங்கள். அத்தோடு எம்லமெடிக் கேசஸ் என்று சொல்லி ஒரு சில கேசஸ், அதில் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் ரவீந்திராத்தின் கொலை, ட்ரின்கோ 5, ட்ரின்கோ 11, லசந்த விக்ரமதுங்க, எக்நெலிகொட, இப்படி ஒரு சில விடயங்களை தாங்கள் ஆராய்வதாக சொல்லியிருந்தார்கள். ஆனால் இதில் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை உள்வாங்கப்படவில்லை.”
தெரிவுசெய்யப்பட்ட வழக்குகளை மாத்திரம் மீண்டும் விசாரணை நடத்துவதற்கான காரணங்கள் என்னவென, கடந்த ஒக்டோபர் மாதம், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அப்போதைய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்திடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, ஏனைய கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் எதிர்காலத்தில் மீள ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
“இந்த 7 விடயங்கள் தொடர்பில் சொன்னது, நிறைய தகவல்கள் மற்றும் நன்கு ஆய்வு செய்யப்பட்ட விடயங்கள். அவை விரைவாக முடிக்கக்கூடியவை. அதனைவிடுத்து வெறும் அந்த 7 மாத்திரமல்ல,
தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்து விதமான பொருளாதார குற்றங்கள், கொலைகள், கடத்தல்கள், ஊடகவியலாளர்கள் படுகொலைகள் என அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அது எமது பொறுப்பு. அதனை விடுத்து தெரிவு செய்யப்பட்ட 7 விடயங்கள் மாத்திரமல்ல”.
கடந்த 09.10.2015 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைத் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.