பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகளை நாட்டின் அடிப்படை சட்டமாக்குங்கள்!

அரசியலமைப்பில் திருத்தம் செய்து, அடிப்படை உரிமைகளில் சிறுவர் உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை உள்ளடக்க வேண்டும் எனவும், சிறுவர் மற்றும் பெண்களுக்காக இரண்டு விசேட ஜனாதிபதி செயலணிகளை தாபிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (08)இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது எமது நாட்டில் தாய், குழந்தைகள் மற்றும் பெண்களே சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்து வருகின்றனர் எனவும், இவர்கள் மிகவும் பன்முக அழுத்தங்களுக்கு அவ்வப்போது முகம்கொடுக்கின்றனர் எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனர்த்தங்கள், தொற்றுநோய்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே வீடு , பணியிடங்கள் போன்றவற்றில் கடுமையான கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர் எனவும், இது தொடர்பில் தேசிய ரீதியிலான சர்வகட்சி சார் அரசியலற்ற சுயாதீன வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 75 வீத ஆண்கள் பெண் ஊழியர்களுக்கு எதிராக ஒரு சார்பு நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு பெண்களை பணியமர்த்துவதை தடுக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது நீதித்துறையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளில் ஒரு பெண் கூட இல்லை எனத் தெரிவித்த அவர் உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட உயர் நீதிமன்றத்தின் 17 உறுப்பினர்களில் 3 பெண்களே அடங்குகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறு இருப்பினும் இவ்வருடம் நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது எனவும், அதனை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related