கணேமுல்ல சஞ்சீவவுடன் மோதல் - முட்டுக்காலில் இருத்தி சுட்டுக் கொல்லப்பட்ட நபர்!  

கணேமுல்ல சஞ்சீவவுடன் மோதல் - முட்டுக்காலில் இருத்தி சுட்டுக் கொல்லப்பட்ட நபர்!  

ஜா – எல, உஸ்வெட்டகெய்யாவ, மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இனந்தெரியாத நபர்கள் சிலர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரை மண்டியிட வைத்து சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் போதைப்பொருள் கடத்தல்காரர் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ”படுவத்தே சாமர” என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று, துபாயில் உள்ள “இஷார” என்பவர் உயிரிழந்த நபரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அவரை உஸ்வெட்டகெய்யாவ, மோர்கன்வத்த கடற்கரை பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

பின்னர், உயிரிழந்த நபர் முச்சக்கரவண்டியில் உஸ்வெட்டகெய்யாவ, கடற்கரை பகுதிக்கு சென்றிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிதாரிகள் T – 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாகவும், குறித்த நபர் மீது 10 தடவைகள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ”படுவத்தே சாமர” என்பவருக்கும் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”என்பவருக்கும் இடையில் போதைப்பொருள் தகராறுகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ”படுவத்தே சாமர” என்பவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.