மனுஷ நாணயக்காரவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு புதிய நியமனம்!

மனுஷ நாணயக்காரவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு புதிய நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பந்துல லால் பண்டாரிகொட சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(21) அமர்வின்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அந்த கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டமை காரணமாக பதவி இழந்த மனுஷ நாணயக்காரவின் வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்டு 34,897 விருப்பு வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்ற பந்துல லால் பண்டாரிகொட தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ளார்.

அதன்படி, அரசியலமைப்பின் 99(13)(ஆ) உப பிரிவின் கீழ் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு பந்துல லால் பண்டாரிகொடவை நியமித்துள்ளது.

அத்துடன், மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்யும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 09ஆம் திகதி நிராகரித்ததோடு, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தீர்மானத்தை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.