அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு
சில பகுதிகளில் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை(Aswesuma Welfare Allowance) வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரி சபை கூட்டத்தில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கேகாலை(Kegalle), நுவரெலியா(Nuwara Eliya), பதுளை(Badulla) மற்றும் பொலன்னறுவை(Polonnaruwa) மாவட்டங்களில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் 2500 ரூபாவை பெற்றுக்கொள்வதற்கு தகுதி பெற்ற பயனாளிகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர்.
இந்த மாவட்டங்களில் அஸ்வெசும பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட போது, குறைந்த புள்ளிகளை பெற்றுக் கொண்ட பெருமளவானவர்கள் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தமையால், அந்த மாவட்டங்களுக்கான கோட்டாவை விட உயர் மட்டத்தில் காணப்பட்டமையால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும் இம்மாதம் முதல் வாரத்துக்குள் இந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். அதற்கமைய 2500 ரூபா கொடுப்பனவு தடையின்றி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.