செனல் 4 காணொளி தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் சர்வதேச விசாரணைக்கு செல்ல வேண்டும் - நளின் பண்டார!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளியில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்த சர்வதேச விசாரணை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (05) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏப்ரல் 21 தாக்குதலால் நாட்டு மக்கள் இன்னல்களுக்கு முகங்கொடுத்தது.

அதுமாத்திரமின்றி நாட்டின் தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டன.

முஸ்லிம் மக்கள் இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். முஸ்லிம் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வந்தனர். பல பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன.

இந்த தாக்குதலை அடுத்து முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையே நிலவிய சகோதரத்துவத்தில் விரிசல் ஏற்பட்டது.

எனவே செனல் போ தொலைக்காட்சியில் இன்று வெளியிடவுள்ள ஏனைய தகவல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரியுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துவெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன், சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என கோரியுள்ளார்.

செனல் 4 காணொளியில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொடர்பில் பக்கசார்பற்ற  விசாரணை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட பிரதிவாதிகள் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உயர்நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேராவினால் இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.