அதானி நிறுவனத்தின் எதிர்கால நிலைப்பாட்டை எழுத்துபூர்வமாக கோரியுள்ள அரசாங்கம்

மன்னாரில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் அறிவித்த போதிலும், மேற்கோள் காட்டப்பட்ட கட்டணங்களில் இத்திட்டத்தை தொடர பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்த நிலையில், இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு எரிசக்தி அமைச்சு அதானி நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது.
கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான அதானி கிரீன் எனர்ஜி, மன்னார் மற்றும் பூனரியில் உள்ள இரண்டு 484 மெகாவாட் (MW) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலைகளை புதுப்பிக்க புதிய ஒப்பந்தங்களை கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் மேற்கொண்டிருந்தது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த மாதம் குறைந்த கட்டணத்தை கோரியதை அடுத்து, இரண்டு காற்றாலை மின் திட்டங்களிலிருந்து வெளியேறுவதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவித்தது.
எனினும் இலங்கை அரசாங்கத்துடன் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், அவர்கள் விரும்பினால் எதிர்கால ஒத்துழைப்புக்கு தயாராகவுள்ளதாகவும் அதானி நிறுவனம் கூறியிருந்தது.
இந்த நிலையிலேயே இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு இலங்கை அரசாங்கம் அதானி குழுமம் கோரியுள்ளது.