தவறான தகவல்களைப் பரப்பும் அரச சார்பு ஊடகங்களின் அரசியல் முயற்சி - வன்மையாகக் கண்டிப்பு!
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசிக்காக நடைபெற்ற இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்காதது குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் அரச சார்பு ஊடகங்களின் அரசியல் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான விஜயத்தின் போது ஈரான் ஜனாதிபதியை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் விருப்பம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஈரான் தூதரகத்திற்கும் அறிவித்துள்ளது.
அவ்வாறு இருக்கும் போது சில ஊடகங்கள் மேற்கொள்ளும் ஊடக நடவடிக்கைகள் மூலம் ஈரான் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்க முயற்சிப்பது அடிப்படையற்ற விடயமாகும்.
இந்த இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டிருந்தால் “ரணில் – சஜித் அரசியல் டீலுக்குத் தயார்” என்று அவதூறு ஒன்றை உருவாக்கி பரப்பவும் இந்த ஊடகவியலாளர்கள் தயாராக இருந்தமை தெரிய வந்தமை இந்த தீர்மானத்துக்கு வருவதற்கான மற்றுமொரு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில், ஈரான் ஜனாதிபதியும், ஈரான் மக்களும் இலங்கையுடன் தொடர்ந்தும் மேற்கொள்ளும் நட்புறவை தாம் எப்போதும் வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.