தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் அழைப்பு
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அது தமிழ் இனத்திற்கு பாதகமான மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையும் ஆதரவு கரம் நீட்டுகின்றது.
நாளைய தினம் வட. கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் சர்வதேச அமைப்பாளர் நடராஜா ரவிவர்மா தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் சர்வதேச அமைப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
தமிழ் இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையில் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி அபகரிப்பு சிங்கள குடியேற்றங்களின் மூலம் குடிப்பரம்பலை சிதைத்தல், தமிழ் மக்களின் தொன்மையை வெளிப்படுத்தும் அடையாளங்களை அழித்தொழித்தல், அதாவது தமிழ் மக்களின் அடையாளங்களாக காணப்படும் இந்து ஆலயங்களை இடித்தும் அழித்தும், சிங்கள பௌத்த சின்னங்களை நிறுவி இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் பேரினவாத அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இந்த ஹர்த்தால் நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள். தொழிற்சங்கங்கள், பொது கட்டமைப்புக்கள். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நாளைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் சர்வதேச அமைப்பாளர் நடராஜா ரவிவர்மா அழைப்புவிடுத்துள்ளார்.