போராட்டக்காலத்தில் தான் எதிர்கொண்ட சவால்களை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தினார் சபாநாயகர் !

 போராட்டக்காலத்தில் தான் எதிர்கொண்ட சவால்களை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தினார் சபாநாயகர் !

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து நாட்டில் அராஜக நிலை தோற்றம் பெற்ற போது ஒரு தரப்பினர் அரசியலமைப்புக்கு முரணாக, எனது தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்தார்கள்.

நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கம் ஒரு தரப்பினரிடமும்  இருக்கவில்லை. மாறாக சட்டவிரோதமான அரசாங்கத்தை அமைத்து லிபியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சூழலை ஏற்படுத்தவே எத்தனித்தார்கள்.

அரசியலமைப்புக்கு அமைய செயற்பட்டு நான் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான அரசாங்கத்தை அமைக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கினேன். என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21)  நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நிறைவடைந்ததன் பின்னர் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் சபைக்கு அறிவித்ததாவது,

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசியலமைப்பு ரீதியில் நான் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்தேன் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இவ்வாறான நிலையில் நாடு அராஜக நிலையை எதிர்க்கொண்ட போது  நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய பாராளுமன்றத்தை பாதுகாப்பதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.

மக்கள் போராட்டத்துக்கு மத்தியில் என்னை தொடர்புக் கொண்டு அரசியலமைப்பை மீறியாவது எனது தலைமையில் அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியவர்கள் எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்டதையிட்டு ஆச்சரியமடைந்தேன்.

பொறுப்பான சபாநாயகர் என்ற அடிப்படையில் போராட்டக்காலத்தில் நான் எதிர்கொண்ட சவால்களை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த விரும்புகிறேன்.

இராச்சியத்துக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு எனக்கு அழுத்தம் பிரயோகித்தவர்களில் பல்வேறு  பலமான சக்திகள் இருந்ததையிட்டு கவலையடைந்தேன்.

நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் நோக்கம் ஒருசிலரிடம் இருக்கவில்லை. நெருக்கடிகளை தீவிரப்படுத்தி அரசியலமைப்புக்கு முரணான அரசாங்கத்தை ஸ்தாபித்து இந்த நாட்டில் லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் சூழ்நிலையை ஏற்படுத்தவே ஒரு சிலர் எத்தனித்தார்கள்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி பதவிக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அப்போது நான் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விடுக்கப்பட்ட அழைப்பை முழுமையாக புறக்கணித்தேன்.

நெருக்கடியான சூழ்நிலைக்கு அரசியலமைப்பு ஊடாக தீர்வு காண வேண்டும் என என்னுடன் நெருக்கமாக செயற்பட்டவர்களுக்கு கட்டளை பிறப்பித்தேன். ஒரு தரப்பினரது கோரிக்கையை புறக்கணித்ததால் எனது உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்கள் எனக்கு வழங்கிய ஆணைக்கு அமைய செயற்பட்டு அரசியலமைப்பு ரீதியில் அரசாங்கத்தை அமைக்க பாராளுமன்றத்தின் ஊடாக நான் உறுதியான தீர்மானம் எடுத்தேன். ஆகவே அரசியலமைப்புக்கு முரணாக நான் செயற்பட்டேன் என்று குறிப்பிடுவதை முழுமையாக நிராகரிக்கிறேன் என்றார்.