சபாநாயகர் மீதான அவநம்பிக்கை பிரேரணை விவாதம் குறித்து புதிய கோரிக்கை!

சபாநாயகர் மீதான அவநம்பிக்கை பிரேரணை விவாதம் குறித்து புதிய கோரிக்கை!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதமானது பிரதி சபாநாயகர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் முன்னிலையில் இடம்பெற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது. 

நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தின் பின்னர், உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 44 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட அவநம்பிக்கை பிரேரணை அண்மையில் நாடாளுமன்ற பதில் பொதுச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு முரணாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபனையை புறக்கணித்து, ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறித்த சரத்துகளை நிறைவேற்ற சபாநாயகர் இடமளித்ததாக குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சிகள் இந்த அவநம்பிக்கை பிரேரணையை முன்வைத்துள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 20ஆம் திகதி மாலை 4.30க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.